ஒரு வியாபாரி, மலர்ந்த முகத்துடன் அமர்ந்திருந்த துறவியைக் கண்டார். அவரது, திருவோட்டில் ஒரு நாணயத்தை சப்தமில்லாமல் வைத்து விட்டு புறப்பட்டார். அன்று வியாபாரம் மளமளவென நடந்தது. பாக்கி பணம் தானாகவே கிடைத்தது. இதற்கு துறவியின் சக்தி தான் காரணம் என்று எண்ணினார். மறுநாளும் அதே துறவியின் திருவோட்டில் காசு போட்டார். வியாபாரம் படுஜோர். இப்படியே பலநாட்கள் தொடர்ந்தது. வருமானம் பெருகியது. பணக்காரராகி விட்டார். பணம் சேர்ந்தாலும், தன் வசதிக்கு காரணமாக கருதிய துறவியை அவர் மறக்கவில்லை. துறவியும், வியாபாரியைக் காணும் நேரமெல்லாம் மெல்லிய புன்னகை செய்வார். வியாபாரியும் வணக்கம் தெரிவித்து விட்டு நாணயத்தை ஓட்டில் இடுவார்.
ஒருமுறை கூட இருவரும் பேசியதில்லை. ஒருநாள் வியாபாரி வரும் போது, துறவியைக் காணவில்லை. அக்கம்பக்கத்தில் அவரைப் பற்றி விசாரித்தார். ஒருவருக்கும் தெரியவில்லை. சோர்வுடன் நடந்தார். வழியில் அவர் கண்ட காட்சி ஆச்சரியத்தைத் தந்தது. துறவி, இன்னொரு வயதான துறவியின் காலில் விழுந்து ஆசி பெறுவதைப் பார்த்தார். வியா பாரிக்கு தன் கண்ணையே நம்ப முடியவில்லை. துறவி வயதான தன் குருவிடம், குருவே! உங்கள் ஆசியால் எல்லாம் நன்றாக நடக்கிறது, என்றார். இதைப் பார்த்த வியாபாரி, அடடா... இந்த சின்ன துறவிக்கே இவ்வளவு சக்தி இருக்கிறதென்றால், அவருக்கு ஆசி கொடுக்கும் பெரிய துறவிக்கு எவ்வளவு சக்தியிருக்கும். இவருக்கு நாம் காசு போட்டால், லட்சாதிபதியாக இருக்கிற நாம் கோடீஸ்வரராகி விடலாமே என கணக்கு போட்டார்.
மறுநாள், தங்க நாணயத்துடன் புறப்பட்டார். திருவோட்டில் அதை போட்டு வணங்கினார். வியாபாரத்தைக் கவனிக்க கடைக்குப் புறப்பட்டார். அன்று அரசு அதிகாரிகள் வரிஏய்ப்பு செய்ததாகக் கூறி சோதனைக்கு வந்தனர். அதனால், வியாபாரமே நடக்கவில்லை. ஐயையோ! பெரிய துறவி பற்றி தப்புக்கணக்கு போட்டு விட்டோமே! நஷ்டம் வந்து விட்டதே! என வருந்தினார். வயதான துறவியிடம் சென்று நடந்ததைக் கூறினார். அவரோ, அன்பு கொடுத்தது! ஆசை கெடுத்தது! என்று சொல்லிச் சிரித்தார். மகனே! நீ அந்த துறவிக்கு அன்பினால் காசு கொடுத்தாய். அதுவே, உனக்கு பன்மடங்காக திரும்ப கிடைத்தது. இப்போதோ, பேராசையால் காசு போட்டாய். கடவுளும் நஷ்டத்தை பரிசாக அளித்து விட்டார். அன்பின் உன்னதத்தை இனியாவது உணர்ந்து கொள், என்றார். வியாபாரி இரண்டு துறவிகளிடமும் மன்னிப்பு கேட்டார்.