ஒரு நாட்டில் துறவி ஒருவர் இருந்தார். அவருக்கென்று சொந்தமாக இருந்தது கோவணமும் பிச்சைப் பாத்திரமும்தான். குடிசை ஒன்றில் தங்கி இருந்தார். அந்நாட்டு மக்கள் கூட்டம் கூட்டமாக அவரைக் காண வந்தார்கள். கண்ணீர் மல்க அவர் திருவடிகளைத் தொட்டு வழிபட்டார்கள். அவரும் அவர்களுக்கு ஆசி வழங்கிக் கொண்டிருந்தார். இப்படியே பல நாட்கள் தொடர்ந்து நடந்து வந்தது. துறவிக்குக் கிடைத்த மரியாதையைக் காண, அந்நாட்டு படைத்தலைவருக்குப் பொறுக்கவில்லை. என் கீழ் ஆயிரக்கணக்கான வீரர்கள் உள்ளார்கள். எல்லாருமே இந்நாட்டைக் காப்பதற்காக உயிரை இழக்கத் திண்ணமாக உள்ளார்கள். மாவீரனான எனக்குக் கிடைக்காத மரியாதை, பிச்சையெடுத்து உண்ணும் ஒரு துறவிக்குக் கிடைப்பதா? என்று நினைத்தான். ஒருநாள் மாலை நேரம் துறவியைச் சந்தித்த அவன், தன் உள்ளக்குமுறலை அவரிடம் கொட்டினான். நாட்டு மக்கள் உமக்கு அதிக மதிப்பு தருகிறார்களே இது நியாயமா? என்று கேட்டான்.
புன்முறுவல் பூத்த துறவி அவனை தோட்டத்துக்கு அழைத்துச் சென்றார். அங்கே பலவகையான வண்ணப்பூக்கள் பூத்திருந்தன. வானத்தில் முழு வெண்ணிலா ஒளிவீசிக் கொண்டிருந்தது. நிலாவை அவனிடம் காட்டிய அவர், அது என்ன? என்று கேட்டார். நிலா என்று என்று சொன்னான் அவன். செந்நிறமாகப் பூத்திருந்த ரோசாப் பூவைக் காட்டி, இது என்ன? என்று கேட்டார். ரோசாப்பூ என்றான். அன்பனே! இந்த ரோசாப்பூ எப்போதாவது அந்த நிலவைப் போல தன்னால் ஒளிவீச முடியவில்லை என்று வருந்தியதுண்டா? அல்லது அந்த நிலவுதான் இந்தப் பூவைப்போல இனிய மணம் தனக்கில்லையே என்று வருந்தியதுண்டா? அடுத்தவரோடு ஒப்பிட்டு, நம் மகிழ்ச்சியை ஏன் கெடுத்துக்கொள்ள வேண்டும்? என்றார். கண் கலங்கிய படைத்தலைவன், துறவியாரே என்னை மன்னியுங்கள்! என் அறிவுக் கண்கள் திறந்து விட்டன என்று சொல்லி அவரிடம் விடை பெற்றான்.