பண்டரிபுரத்தில் சாதுக்கள் ஒன்றுகூடி பாண்டுரங்கா பண்டரிநாதா என்று ஆடிப் பாடிக் கொண்டிருந்தனர். மறுபுறம் ஏகாதசி விரதம் முடிந்து, துவாதசி பாரணைக்காக (உணவுக்காக) சப்பாத்தி தயாரிக்கும் பணி மும்முரமாக நடந்து கொண்டிருந்தது. சப்பாத்தியில் விட்ட நெய்யின் மணம் காற்றில் பரவியது. ஒரு கருப்பு நாய் சப்பாத்தியை முகர்ந்தபடி சமையல்கட்டிற்கு வந்தது. மற்ற சாதுக்கள் தங்கள் அருகில் வந்த நாயை அடித்து விரட்டினர். அந்த நாய், பாண்டுரங்கனின் அடியவரான நாமதேவர் அருகில் வந்தது. அவர் சுட்டு வைத்த சப்பாத்தியை கவ்விக் கொண்டு வேகமாக வெளியேறியது. நாமதேவர், தன் அருகில் இருந்த நெய்க்கிண்ணத்தை தூக்கிக் கொண்டு அதன் பின்னால் ஓடினார்.
நாயின் வாயிலிருக்கும் சப்பாத்தியை பறிக்கத் தான் நாமதேவர் ஓடுகிறார் என்று எண்ணிய சாதுக்கள் சிரித்தனர். நாமதேவரோ, நாயைப் பிடித்து இழுத்து, கழுத்தைக் கையால் அரவணைத்தபடி, நெய் இல்லாமல் சாப்பிட்டால் சப்பாத்தி ருசிக்காதே! இதோ நெய்யையும் சேர்த்து சாப்பிடு என்று சப்பாத்தியில் நெய்யைத் தடவினார். அப்போது நாய் பேசியது. நாமதேவா! நான் தான் பாண்டுரங்கன். நாயின் வடிவில் வந்துள்ளேன், என்றது. கண்ணீர் பொங்க நாமதேவர் கைகளைக் குவித்து வணங்கினார். எல்லா உயிர்களும் இறைவடிவமே என்ற உண்மையை சாதுக்கள் உணர்ந்து கொண்டனர்.