|
வாழ்க்கையில் நேரம் என்பது மிக முக்கியமானது. ஒன்றைச் செய்வதாக வாக்களித்து விட்டு, தாமதித்து செய்தால் உயிர் கூட போய்விடும் வாய்ப்புண்டு.தசரதருடன் கைகேயி போர் ஒன்றுக்குச் சென்றாள். அந்தப் போரில் அவள் பலவகையிலும் அவருக்கு உதவினாள். தன் அன்பு மனைவியின் செயல்பாட்டினால் வெற்றி பெற்ற தசரதர், மகிழ்ச்சியில்,கண்ணே! நீ என்னிடம் இரண்டு வரங்கள் கேட்கலாம். எதுவானாலும் தருவேன், என்றார். அவள், இப்போது வேண்டாம்... பின்னால்பார்க்கலாம், என்றாள். பின்னால்... பார்க்கலாம் என்ற வார்த்தைகள் மனித வாழ்வுக்கு உகந்தவை அல்ல. அந்தந்த நேரத்தில் உரியகடமையைச் செய்யாவிட்டால் கஷ்டம் தான் வரும். தசரதர் உடனே அவளை மடக்கி,அதெல்லாம் கிடையாது, இப்போதே ஏதாவது கேள், என கட்டாயப்படுத்தி இருந்தால், அவள் மாளிகையோஅணிமணியோ வாங்கிக்கொண்டு அத்தோடு விட்டிருப்பாள்.தசதரரின் தாமதத்தால்பிற்காலத்தில் ராமன் காட்டுக்குச் செல்ல வேண்டியதாயிற்று. மகனைப் பிரிந்த தசரதரின் உயிர் பறிபோய்விட்டது. அதற்கெல்லாம் மேலாகமனைவியின் காலில் விழுந்து அழுது மானமும் போய்விட்டது.எனவே, நல்ல நேரம் வரட்டும், பிறகு பார்க்கலாம் போன்ற வார்த்தைகளை உங்கள் அகராதியில் இருந்து எடுத்து விடுங்கள். இந்த நேரமே நல்ல நேரம் தான்! |
|
|
|