|
ராமகிருஷ்ணரிடம் மதுர்பாபு என்ற பக்தர் பழகி வந்தார். இவர் கடவுள் நம்பிக்கை மிக்கவராக இருந்தாலும், கண்மூடித்தனமாக எதையும் ஏற்கும் ஏமாளியல்ல. ராமகிருஷ்ணரிடம் அடிக்கடி விவாதம் செய்வது இவரது வழக்கம். ஒருநாள், குருதேவரே! இயற்கையை படைத்தவன் இறைவன். அதனால், இயற்கையின் வரைமுறைகளுக்கு இறைவனும் கட்டுப்பட்டவனே. இயற்கையை அவனால் மீற முடியாது, என்றார். ராமகிருஷ்ணரோ,இறைவன் விரும்பினால் எதையும் மீறலாம் என்றார். மதுர்பாபுவுக்கு ராமகிருஷ்ணரின் பேச்சில் உடன்பாடில்லை. சிவப்பு மலர் பூக்கும் செடியில் சிவந்த மலர் மட்டுமே பூக்கும். அதில் வெள்ளை நிறத்திலா பூக்கும்? என்று ராமகிருஷ்ணரை மடக்கினார்.நீ சொல்லும் அதிசயத்தை இறைவனால் நிகழ்த்த முடியும்! என்று திட்டவட்டமாக சொன்னார் ராமகிருஷ்ணர். மறுநாள் காலை தோப்பு வழியாக சென்ற ராமகிருஷ்ணருக்கு கண்ணில் செம்பருத்தி செடி ஒன்று தென்பட்டது. அதன் ஒருகிளையில் சிவப்பு மலரும், மற்றொரு கிளையில் வெள்ளை மலரும்பூத்திருப்பதைக் கண்டார். கிளையை அப்படியே ஒடித்து வந்து மதுர்பாபுவிடம் காண்பித்தார். மதுர்பாபுவின் கண்கள் அகல விரிந்தன. இயற்கை இறைவனுக்கு கட்டுப்பட்டது என்றுணர்ந்த மதுர்பாபு, ராம கிருஷ்ணர் மெய்ஞானி என்பதையும் உணர்ந்தார். |
|
|
|