எதையும் கலையுணர்வுடன் காண்பவர்கள் அவரவர் துறையில் வெற்றி பெறுவர். சந்திரகுப்தரின் அரசியல் ஆலோசகராக இருந்தவர் சாணக்கியர். அப்போது, நந்தர் என்னும் பிரிவினர் பாடலிபுத்திரத்தை ஆட்சி செய்தனர். அவர்களைத் தோற்கடித்து சந்திரகுப்தரை ஆட்சியில் அமர்த்த சாணக்கியர் திட்டம் வகுத்தார். சந்திரகுப்தரும் அவரது பேச்சை நம்பி, நந்தர்கள் மீது போர் தொடுத்தார். பாடலிபுத்திரத்துக்குள் அவரது படை நுழைந்தது. ஆனால், வலிமை மிக்க நந்தர்கள், சந்திரகுப்தரின் படையைத் தவிடு பொடியாக்கி விட்டனர். இருந்தாலும், சாணக்கியர் முயற்சியைக் கைவிடவில்லை. அவர் நுண்ணறிவு படைத்தவர்.
நந்தர்களை தோற்கடிக்க எத்தனையோ வழிமுறைகளை ஆராய்ந்து பார்த்தார். எதுவும் சரியெனப்படவில்லை. ஒரு வீட்டின் திண்ணையில் அமர்ந்து யோசித்துக் கொண்டிருந்தார். அப்போது, வீட்டுக்குள் இருந்து ஒரு தாயும், மகனும் பேசுவது கேட்டது. மகன்: அம்மா! இப்படி தோசை சுட்டால் எப்படி? தோசையின் நடுவே மிளகாய்ப் பொடியை உப்பலாகப் போட்டிருக்கிறாயே! ஓரத்தில் பொடியே இல்லை! ஓரத்தைப் பிய்த்து சாப்பிட்டால் காரமே இல்லை. நடுவில் உள்ளதை எடுத்தால் உறைப்பு தாங்கவில்லை. என்னம்மா! தோசை சுடுறே!அம்மா: டேய் முட்டாளே! ஓரத்தில் உள்ளதைப் பிய்த்து நடுவில் உள்ள பொடியைத் தொட்டு சாப்பிடு. அங்கே பொடி குறைந்து விடும்.
பிறகு நடுவிலுள்ளதைச் சாப்பிடு. காரம் சரியாக இருக்கும். இதுகூட தெரியாதா உனக்கு!சாணக்கியர் துள்ளி எழுந்தார். அந்த வீட்டுக்குள் சென்றார். அம்மா! மூடிக்கிடந்த என் கண்ணைத் திறந்து விட்டீர்கள். என் சிக்கலுக்கு வழிசொன்ன தெய்வத்தாய் நீங்கள்! சாணக்கியர் சொன்னது அந்த பெண்ணுக்குப் புரியவில்லை. சந்திரகுப்தரிடம் வந்தார் சாணக்கியர்.சந்திரகுப்தா! முதலில் பாடலிபுத்திரத்தை சுற்றியுள்ளபகுதிகளை நம்வசமாக்கு. பிறகு, நகருக்குள் நுழைவது எளிதாக இருக்கும்,. இந்த யோசனை சந்திரகுப்தருக்கும் பிடித்து விட்டது. ஒவ்வொரு ஊராக அவர் கைப்பற்றினார். பின், பாடலிபுத்திரத்திற்குள் எளிதில் புகுந்து அதையும் வெற்றி கொண்டார். ஒரு கனவு கண்டால், அதை தினம் முயன்றால், அந்த வானம் கூட நமக்கு வசப்பட்டு விடுமல்லவா!