ஸ்ரீகிருஷ்ண பரமாத்மாவே தங்களுடன் பிறந்து வளர்ந்து வாழ்வதால் யாதவர்களுக்கு தர்ப்பம் ஏற்பட்டது. தர்ப்பம் என்றால் ஆசைகள், கர்வம், மமதை என்று அர்த்தம். இவை அனைத்தையும் கொடுப்பவனும், அழிப்பவனும் இறைவனே! யாதவர்களுக்கு அந்த ஆசையையும் எண்ணங்களையும் மமதையையும் கர்வத்தையும் தூண்டியவன் பகவான் ஸ்ரீகிருஷ்ணன். அதனால்தான் யதுகுலமே உருவானது. அந்தக் குலத்திலேயே தானும் பிறப்பெடுத்து, அவர்களுடன் ஒன்றிக் கிடந்தான். இதனால் யதுகுலத்தைச் சேர்ந்தவர்களுக்கு அகம்பாவமும் தலைதூக்கியது. அந்தக் கிருஷ்ணனே நம்முடன் இருக்கிறான் என கர்வம் தலைக்கேறியது. மமதையுடன் திரிந்தனர். இறுமார்புடன் வாழ்ந்தனர். இந்த கர்வமும் மமதையும் இறுமார்பும் மனித குலத்துக்குச் சத்ரு என்பதை உலகத்தாருக்குப் புரிய வைக்கவேண்டும் எனச் சித்தம் கொண்டான் கண்ணபிரான். விளைவு....... அந்த யதுகுலத்தையே அழிக்கவும் செய்தான். யதுகுலம் அழிந்தால், அந்தக் குலத்தைச் சேர்ந்த கண்ணனும் அல்லவா அழியவேண்டும்? அப்படியும் ஒரு நிகழ்வை நடத்திக் காட்டினான்.
அந்தக் குலத்தின் சிறுவர்களில் ஒருவன், வயிற்றில் உலக்கையைக் கட்டிக்கொண்டு, சுவாமி, இவன் வயிற்றில் பிள்ளைக் கரு உண்டாகியிருக்கிறது என்று சொல்ல......... கூடிநின்ற மொத்தக் குழந்தைகளும் சிரித்து விளையாடினார்கள். இதைக் கேட்ட அந்த மகரிஷியும், உலக்கைக் கொழுந்து பிறந்தது என ஆசீர்வாதம்போல், சாபமிட்டார். விளைவு... அந்த மகரிஷியின் சாபத்தால் அந்த ஆணுக்கு உலக்கையே பிறந்தது. விசாரித்தால்........ அந்த உலக்கைதான் குலத்தையே அழிக்கும் எனத் தெரிவித்தார் மகரிஷி. அதைக் கேட்டுப் பதறிப்போன மக்கள். மன்னரிடம் ஓடிச் சென்று தகவல் தெரிவித்தனர். அந்த உலக்கையை பல கூறுகளாக அறுத்து, உருத் தெரியாமல் உடைத்துப் போடுங்கள். உடைத்த துகள்களை வீசியெறியுங்கள் என்று உத்தரவிட்டார். அதன்படியே அந்த உலக்கையைப் பல துண்டுகளாக துகள் துகள்களாக உடைத்துப் போட்டனர். உலக்கையின் ஒரு பக்கம் மர பாகமாகவும் இன்னொரு முனை இரும்புப் பூண் போட்டும் இணைக்கப்பட்டிருக்கும். அந்த மர பக்கத்தைச் சிறு சிறு துகள்களாக்கிக் கடற்கரை மணலில் வீசியெறிந்தனர். அந்த இரும்பைத் துண்டுத் துண்டாக உடைத்து, கப்பலில் ஏறிச் சென்று நடுக்கடலில் வீசியெறிந்தனர்.
துகள்களாகி விட்ட மரத் துண்டுகள் சப்பாத்திக் கள்ளிகளாக முளைத்தனவாம்! அந்த இரும்புத் துண்டின் ஒரு துகளை மீன் ஒன்று விழுங்கியது, அந்த மீனை, செம்படவன் ஒருவன் வலை வீசிப் பிடித்தான். கரைக்குச் சென்றதும், அதை ஒரு வேடனுக்கு விற்றான், அந்த வேடன் அதை வீட்டுக்கு எடுத்துச் சென்று அறுத்தபோது, அதன் வயிற்றினுள் ஒரு இரும்புத் துண்டு இருக்கக் கண்டான். அதை எடுத்து, தான் தயாரித்துகொண்டிருந்த அம்பின் நுனியில் வைத்துக் கட்டினான். சப்பாத்திக் கள்ளியை கத்தி எனும் ஆயுதமாக நினைத்துச் சண்டையிட்டுக் கொண்டார்கள்; செத்தார்கள். கால் மேல் கால் போட்டப்படி ஸ்ரீகிருஷ்ணன் இருக்க....... அந்தக் கால்களின் வடிவைக் கண்டு, மான் என்று நினைத்து, அந்த வேடன் அம்பெய்தினான். அந்த அம்பு, கிருஷ்ணனின் காலில் தைத்தது. இதையே காரணமாகக் கொண்டு, பழையபடி பரமபதத்துக்கு வந்தான் என்றொரு கதை புராணத்தில் உண்டு. ஆக........ஆசை, கர்வம் ஆகியவற்றைக் கொடுப்பவனும் அவனே! அதனை அழித்தொழிப்பவனும் அவனே! இதனால் அவனுக்கு தர்ப்பஹா எனும் திருநாமங்கள் அமைந்ததாம்! கூடவே, அத்ருப்ஹா எனும் திருநாமமும் கிருஷ்ணனுக்கு உண்டு. அதாவது, எந்த மமதையும் ஆசையும் இல்லாதவன் என்று அர்த்தம்! அடேங்கப்பா... நம்மை ஆசைக்கு உள்ளாக்கி அழகு பார்க்கிற, வேடிக்கை பார்க்கிற பகவான், எவ்வளவு சாதுர்யமாக தான் அதற்கு அடிமையாகாமல் இருக்கிறான், பாருங்கள்!
நந்தகோபன் இளங்குமரன் என்று கண்ணனைச் சொல்வார்கள் தந்தை நந்தகோபனுக்கு அடங்கிய பிள்ளை என்று புகழ்வார்கள். ஸ்ரீராமரும் அப்படித்தான், தன்னை தசரதனின் பிள்ளை என்று பிறர் சொல்வதில் அப்படியொரு ஆனந்தம் அவருக்கு! ராம-ராவண யுத்தம் முடிந்தது. அப்பாடா.... நீ வந்த வேலை முடிந்துவிட்டது. இனி, வைகுந்தத்துக்குச் செல்லலாம் என்று ஸ்ரீபிரம்மா சொல்ல, உடனே பரமேஸ்வரன், என்ன விளையாடுகிறாயா? நம் வேலை சுலபமாகிவிட்டது என்று சுயலாபத்துடன் செயல்படுவது தவறு. ஸ்ரீராமனைத் தரிசிக்க அயோத்தியே ஆவலாகக் காத்திருக்கிறது. அவனும் பட்டாபிஷேகத்தைச் செய்து கொள்ள வேண்டும். உறவுகளையும் ஊரையும் பார்த்து அவன் மகிழ வேண்டும். தந்தையை இழந்து தவிக்கிறவனுக்கு. இந்த மனநிறைவேனும் கிடைக்கட்டுமே?என அருளினாராம் சிவபெருமான். இதைக் கேட்ட வால்மீகி நெகிழ்ந்து போனார்; நெருக்குருகினார். சிவபெருமானை மனதாரப் போற்றினார். எப்படி போற்றினார் தெரியுமா? ஷடர்த்த நயனஹா ஸ்ரீமான் என வாழ்த்திக் கொண்டாடினார். ஸ்ரீமான் என்றால், ஸ்ரீயாகிய தேவியை திருமார்பில் வைத்திருப்பவன் ஸ்ரீமந் நாராயணன் என்றுதான் அர்த்தம். ஆனால் சிவபெருமானை நெகிழ்ந்து புகழ்ந்தார் இப்படி! ஷட் என்றால் ஆறு; அர்த்தம் என்றால் அதில் பாதி. அதாவது, முக்கண்ணன் என்பதை சூசகமாகச் சொல்லி ஆராதித்தார் வால்மீகி. சிவனாரின் திருவுளம் என்ன நினைத்ததோ, அதையேதான் திருமாலும் நினைத்தார். அதாவது, தன்னை எப்போதும் நந்தகோபனின் திருமகனாகவே நினைத்து மகிழ்ந்தார் ஸ்ரீகண்ணபிரான். அதேபோல், தசரதரின் மைந்தன் என்று அனைவரும் சொல்வதில் அகமகிழ்ந்தார் ஸ்ரீராமர்.
இப்படி தந்தைக்குப் பணிந்தவனாக இன்னாரின் மகன் என்று சொல்வதில் பெருமிதம் கொண்டவனாக பகவான் ஸ்ரீகிருஷ்ணன் இருந்தாலும், இன்னொரு விஷயத்தில் தெளிவாக இருந்தான். அந்த விஷயம்.. விஷயம்தான்! அவனைப் போல சேட்டைகளை எவரும் செய்ய முடியாது. அவனது சேட்டைக்களுக்கு எல்லையே இல்லை. மிகுந்த வால்தனம் செய்யும் குழந்தைகளை இது, சரியான விஷமக் கொடுக்கு என்பார்களே......... பகவான் ஸ்ரீகிருஷ்ணனும் அப்படியொரு விஷமக் கொடுக்காகத்தான் இருந்தான்! எவராலும் அடக்கமுடியாதவனாக இருந்தான். பகவான் ஸ்ரீகிருஷ்ணருக்கு துர்த்ரஹா, என்றும், அபராஜிதஹ என்றும் இரண்டு திருநாமங்கள் உண்டு. துர்த்ரஹா என்றால் எவராலும் அடக்கவே முடியாதவன் என்று அர்த்தம் அபராஜிதஹ என்றால் எவராலும் வெல்லவே முடியாதவன் என்று அர்த்தம். அடங்கவே மாட்டாதவன்தான் எவராலும் அவனை வெல்லவே முடியாதுதான்! ஆனால் அவனை அடக்கியாளவும் அவனை வெல்லவும் ஒரேயொரு அஸ்திரம் போதுமானது அந்த அஸ்திரமும் நம்மிடமே இருக்கிறது, அந்த அஸ்திரத்தின் பெயர்.....அன்பு, பக்தி! உண்மையான அன்பும் ஆழ்ந்த பக்தியும் கொண்டு அவனை நெருங்கினால், நமக்கு அடங்குவான்; நம்மில் வசமாவான்.