ஞானம் பெற வேண்டும் என்ற எண்ணத்தில் இளைஞன் ஒருவன், காட்டில் இருந்த மகானிடம் உபதேசம் அளிக்கும்படி வேண்டினான். அவரும் உபதேசம் வழங்கி சீடனாக ஏற்றுக்கொண்டார். காலம் சென்று கொண்டிருந்தது. அவனிடம் எந்தவித வளர்ச்சியும் ஏற்பட்டதாகத் தெரியவில்லை. வேறொரு குருநாதரிடம் செல்வோம் என்று புறப்பட்டான். அவரிடமும் கொஞ்சநாள் தான் அவனால் இருக்க முடிந்தது. மீண்டும் மற்றொருவர்... இப்படியே குருநாதர்களின் எண்ணிக்கை உயர்ந்ததே ஒழிய, அவனிடம் எவ்வித மாற்றமும் உண்டாகவில்லை. பொறுமை இழந்த இளைஞன், மீண்டும் முதன்முதலில் சீடனாக ஏற்றுக் கொண்ட மகானிடமே திரும்பினான்.
அவர் முகத்தைப் பார்க்கவே அவனுக்கு வெட்கமாக இருந்தது. ஆனால், அவர் சிரித்த முகத்துடன் அவனை ஏற்றுக் கொண்டார்.இளைஞன் வாடிய முகத்துடன், குருவே! நான் இதுவரை பத்து குருநாதர்களிடம் உபதேசம் பெற்றுவிட்டேன். எனக்கு ஞானம் கிடைக்கவில்லை. எப்போது ஞானம் உண்டாகும்? என்றான். அவர்,ஞானம் ஒருநாளில் கைகூடும் விஷயமல்ல. பலரும் பரம்பொருளான இறைவனைப் பலவிதமாகக் காண்கிறார்கள். எல்லாருமே ஞானம் பெறும் நோக்கத்தில் தான் தவவாழ்வு மேற்கொண்டிருக்கிறோம். பொறுமையும், மனவுறுதியும் தான் ஆன்மிக வாழ்வுக்கு அவசியம், இனியாவது பொறுத்திரு, என்றார். செய்த தவறை உணர்ந்தவனாய், முதல் குருநாதரிடமே சீடனாக இருக்கத் தொடங்கினான்.