|
ஒரு விவசாயி தன் பசுவை வயலுக்கு உழ பயன்படுத்தினான். ஒருநாள், அதன் கன்று உடன் சென்றது. விவசாயி பசுவை ஏரில் பூட்டியதும், கன்று தன் அம்மாவிடம், அம்மா! நானும் உன் கூடவே நடந்து வருகிறேனே! என்றது. தன் மேல் உள்ள பாசத்தால் கன்று தன்னுடன் வர விரும்புகிறது என்று பெருமைப்பட்ட பசுவும் சம்மதித்தது.உழவு ஆரம்பித்தது. கன்று உடன் வந்தது. மேடு பள்ளமாக இருந்த இடங்களில் கன்று தடுமாறியது. அது கீழே விழுந்து விடுமோ என்ற பயத்தில், பசு நின்று நின்று உழுதது. விவசாயிக்கோ, சீக்கிரமாக உழவை முடிக்க வேண்டும் என்ற ஆத்திரம். அவன் பசு நிற்கும் போதெல்லாம் அதை நையப் புடைத்தான். வழக்கத்தை விட அதிக அடி வாங்கிய பசு, கன்றுவிடம், மகளே! நீ போய் அங்கே இருக்கும் புற்களை மேய்ந்து கொண்டிரு. நான் உழவைப் பார்ப்பேனா! உன்னைக் கவனிப்பேனா! இவனோ என்னை நையப் புடைக்கிறான், என்றது.இந்த கன்றைப் போல, நாமும் நம் அம்மா பரபரப்பாக வேலை பார்க்கும் வேளையில், பையை எடுத்துக்கொடு, பென்சிலை சீவு, பேனாவில் மை ஊற்றிக்கொடு, ஊட்டி விடு என்று தொந்தரவு தரக்கூடாது. அது அவர்களின் வேலைப்பளுவை இன்னும் அதிகரிக்கும். புரிந்ததா செல்லங்களே! |
|
|
|