நாரத முனிவரின் நாவில் சதா சர்வகாலமும் நடமாடுவது நாராயணன் நாமம்தான். பிரகலாதனுக்கு எட்டெழுத்து மந்திரத்தையும், துருவனுக்கு வாசுதேவ மந்திரத்தையும் ஓதி அவர்களை நல்வழிப்படுத்தியவர். வால்மீகி ராமாயணம் இயற்றவும், வியாசர்-பாரதம், பாகவதம் பாடவும் காரணமானவர். இவ்வளவு சிறப்பு வாய்ந்த அவரை இரண்டாம் இடத்தில் வைத்து, பிரகலாதனை முதல் இடத்தில் வைத்து போற்றுகிறது ஒரு ஸ்லோகம்.
ப்ரஹ்லாத நாரத பராஸர புண்டரீக
வ்யாஸ அம்பரீஷ ஸுக ஸெளனக பீஷ்ம தால்ப்யாந்
ருக்மாங்கத, அர்ஜுன, வஸிஷ்ட, விபீஷ்ணாதீன்
புண்யாநிமான் பரம பாகவதான் ஸ்மராமி
பிரகலாதனுக்கு ஏன் முதலிடம்? தூணிலிமிருப்பான், துரும்பிலுமிருப்பான் என்ற பக்த பிரகலாதனின் வாக்கை நிரூபிக்க, நரசிங்கமாய் தோன்றினார் நாராயணன். ஹிரண்யவதம் முடிந்து சாந்தமாகி, பாலகனை அழைத்து தன் தொடையில் அமர்த்திக் கொள்கிறார் நரசிம்மர். பக்தர்களின் சாம்ராஜ்யத்தின் தலைவனாக சிறுவனை, சிம்ம ஆசனத்தில் சிம்மாசனத்தில் ஏற்றி பட்டாபிஷேகம் செய்தார். ஆகவேதான் தொண்டர்களின் தலைவனான பிரகலாதனை முதலில் வைத்தனர்.