|
குருவைப் பார்த்து சிஷ்யன் கேட்டான் ஸ்வாமி! ஞானத்தைப் பெற நான் என்ன செய்ய வேண்டும்? சூரியனை உதிக்கவோ, அஸ்தமிக்கவோ செய்வதற்கு நீ என்னென்ன செய்ய முடியுமோ அவை அனைத்தையும் செய் என்று சொன்னார் குரு. சிஷ்யனுக்கு ஒரே திகைப்பு! இதென்ன இப்படிச் சொல்கிறார்? சூரியன் உதிப்பதோ அஸ்தமிப்பதோ இயற்கை நிகழ்ச்சி. இதில் நான் என்ன செய்ய முடியும்? அப்படியானால் ஞானத்தை அடைவதிலும் என் பங்கு பூஜ்யம்தானா? என யோசித்தவன் குருவிடம். நீங்கள் சொல்வதிலிருந்து இதில் நான் செய்யக்கூடியது ஒன்றுமே இல்லை என்றாகிறது. அப்படியானால் சாஸ்திரங்கள், சடங்குகள், ஆன்மீகப் புத்தகங்கள் இவையெல்லாம் எதற்கு? என வினவினான். ஞானம், தன்னிச்சையாக வந்து சேரலாம். ஆனால் அப்படி நேரும்போது, நீ விழித்திருக்க வேண்டுமே! அப்படி விழித்திருந்து, ஞானத்தைப் பறுவதற்குத் தயார் நிலையில் உன்னை வைத்திருக்கவே சாஸ்திரங்கள், சடங்குகள், அறநெறி நூல்கள் இவையெல்லாம் உள்ளன என்று விளக்கினார், குரு. |
|
|
|