ஓரிடத்தில் மூன்று பேர் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். அச்சமயம் அந்த வழியாக வழிப்போக்கர் ஒருவர் சென்றார். அந்த மூவரில் ஒருவரிடம் அப்பா! நீ என்ன செய்து கொண்டிருக்கிறாய்? என்று கேட்க, அவனோ ஏதோ வேறு ஒன்றை மனதில் நினைத்து வெறுப்படைந்து, உனக்குக் கண் குருடா! பார்த்தால் தெரியாதா? கல்லைச் செதுக்கிக் கொண்டிருக்கிறேன் என்று எரிச்சலுடன் கூறினான். அடுத்து வழிப்போக்கர் இரண்டாம் நபரிடம் முதல் நபரிடம் கேட்ட கேள்வியைக் கேட்க, அவன், ஐயோ! ஏதோ தன் வயிற்றுப் பிழைப்புக்காக இந்தக் கல் செதுக்கும் வேலையைச் செய்கிறேன். இந்த வேலையைச் செய்யாவிட்டால் என் குடும்பம் நடுத்தெருவுக்குப் பிச்சையெடுக்க வரவேண்டியதுதான். அதனால் வேகாத வெயிலில் இந்தக் கல்லைச் செதுக்குகிறேன் என்றான்.
முதல் நபரை விட இரண்டாம் நபர் கொஞ்சம் பரவாயில்லை என்று தோன்றியது வழிப்போக்கருக்கு வெறுப்படையாமல், தன் கஷ்டத்தைக் கூறினானே என்று மகிழ்ந்து மூன்றாம் நபரிடம் அப்பா! நீ என்ன செய்து கொண்டிருக்கிறாய்? என்று கேட்க, அவன் ஆனந்தத்தில் துள்ளிக் குதித்து, நான் இங்கு ஓர் அற்புதமானக் கோயிலைக் கட்டிக்கொண்டு இருக்கிறேன். அதற்காக இந்தக் கல்லைச் செதுக்குகிறேன் என்றான். மூவரும் ஒரே வேலையைச் செய்தாலும் முதலாமவர் அனுபவத்தில் அது, வெறும் கல்லை வெட்டும் வேலை. இரண்டாமவனுக்கோ வயிற்றை நிரப்பும் வேலை. மூன்றாமவனுக்கோ அற்புதமான கோயில் ஒன்றை உருவாக்குகிறோம் என்ற திருப்தி. இது, அவர்கள் வாழ்க்கையைப் புரிந்துகொண்ட முறையில் உருவான அனுபவம். எவனே, வாழ்க்கைத் தரத்தை உயர்வாக மாற்றியமைக்க நீங்கள் செய்யும் வேலையை எந்தக் கண்ணோட்டத்துடன் செய்கிறீர்கள் என்பதை மாற்றினால் போதும். எதையும் எதிர்பார்த்து செயல்பட்டால், ஆதாயக் கணக்கு போடாமல் செய்தால் வாழ்க்கையில் வெற்றி நிச்சயம்!