|
சித்துவேலை செய்பவர்கள், துறவி போல் வேஷமணிந்து அநியாயம் அட்டூழியம் செய்பவர்கள் ஆன்மிக உலகில் பெருகியிருக்கிறார்கள். யார் ஒருவர் மக்களுக்கு சேவை செய்கிறாரோ, அவர் தான் உண்மையான துறவி. ஏன்... இல்லறத்தில் இருப்பவர்கள் கூட இவ்வாறு சேவை செய்யலாம். ஒரு துறவி மக்களிடம், தன்னை பெரிய ஆளாகக் காட்டிக் கொள்ள பல சித்து வேலைகளைச் செய்தார். ஒருநாள் கடவுள், ஒரு பக்தனைப் போல வேடமணிந்து அவரைக் காண வந்தார். சாமி! நீங்கள் பல சித்து வேலைகள் செய்வீர்களாமே! அதோ! அங்கே நிற்கிறதே யானை.. அதை உங்களால் கொல்ல முடியுமா? என்றார். இதென்ன பிரமாதம் என்ற துறவி, கொஞ்சம் மணலை எடுத்து யானையை நோக்கி எறிந்தார். யானை சுருண்டு விழுந்து இறந்தது.
ஆகா...அற்புதம், அந்த யானையை மீண்டும் உயிர் பிழைக்க வைக்க முடியுமா?துறவி சிரித்தபடியே, தன் கமண்டலத்தில் இருந்த தீர்த்தத்தை யானை மீது தெளித்தார். யானை தூங்கி எழுந்தது போல் உயிர் பெற்று நின்றது. இப்போது கடவுள், சரி துறவியே! யானையைக் கொன்றீர்கள். உயிர் பிழைக்க வைத்தீர்கள். இதனால் மக்களுக்கு ஏற்பட்ட நன்மை என்ன? இதே, சித்து வேலையைப் பயன்படுத்தி மக்களுக்கு நன்மை செய்தால் அவர்களுக்குப் பயனுள்ளதாக இருக்குமல்லவா? என்று சொல்லிவிட்டு மறைந்து விட்டார். வந்தது கடவுள் என்பதை அறிந்த துறவி, மனம் திருந்தினார். சித்துவேலையை மக்களுக்கு வசதி செய்து கொடுக்கும் விதத்தில் பயன்படுத்த ஆரம்பித்தார். |
|
|
|