கார்த்திகை மாதத்தில் வரும் ஏகாதசி மற்றும் துவாதசி இரண்டுமே பெருமை வாய்ந்தது. இம்மாதத்தில் வரும் தேய்பிறை ஏகாதசி ரமா ஏகாதசி எனப்படும். முசுகுந்த சக்கரவர்த்திக்கு சந்திர பாகா என்றொரு அழகிய மகள் இருந்தாள். அவளை சோபனன் என்ற இளைஞனுக்கு திருமணம் செய்து வைத்தார்கள். ஒரு சமயம் சோபனன் தன் மாமனார் வீட்டுக்கு வந்திருந்தான். அந்நாள் ஏகாதசி ஆகும். அந்நாட்டு சேனையைச் சேர்ந்த வீரர்கள், இன்று ஏகாதசி. யாரும் உணவருந்தக் கூடாது; பட்டினி கிடக்க வேண்டும்; விஷ்ணுவை பூஜிக்க வேண்டும் என்று கூறினர். இதைக் கேட்ட சோபனன், நான் பலமில்லாதவன். ஒருநாள் உணவில்லாமல் இருக்க என்னால் முடியாது என்று கூறினான். அப்போது சோபனனின் மனைவி, என் தந்தை எந்த தவறு செய்தாலும் மன்னிப்பார். ஆனால் ஏகாதசி தினத்தன்று உணவு அருந்தினால் மன்னிக்கவே மாட்டார். நான் என்ன செய்வேன்? என்று வருந்தினாள். அவன் தன் மனைவியின் வற்புறுத்தலால் விரதமிருந்தான்.
பசியால் இரவெல்லாம் துடித்தான். காலையில் இறந்து போனான். அவனை எரித்தார்கள். சந்திரபாகை தன் கணவனின் பிரிவை நினைத்துக் கலங்கினாள். இப்படியே சில மாதங்கள் சென்றன. தீர்த்த யாத்திரை சென்று திரும்பிய சோமசர்மா என்ற பெரியவர் ஒருநாள் சந்திரபாகையிடம், பெண்ணே உன்னுடைய கணவர் மந்திரமலைச் சாரலிலே ஓர் அழகிய நாட்டை ஆண்டு வருகிறார் என்று சொன்னார். உடனே தன் தந்தையை அழைத்துக் கொண்டு மந்திர மலைக்குச் சென்றாள். அங்கு தன் கணவன் நாடாள்வதைக் கண்டு மகிழ்ந்தாள். கணவனும் அவளை வரவேற்றான். நான் சிரத்தையில்லாமல் ஏகாதசி விரதம் கடைப்பிடித்தேன். அதனால் இந்த நகரம் கிடைத்தது. ஆனால் இது விரைவில் அழிந்துவிடும், என்ன செய்வது என்று புரியவில்லை என்று மனைவியிடம் கூறினான். அவள், தான் தொடர்ந்து செய்து வந்த ஏகாதசி புண்ணியத்தை தன் கணவனுக்குக் கொடுத்தாள். நகரம் அழிவிலிருந்து தப்பியது. இருவரும் இன்பமாக கூடிவாழ்ந்தனர்.