கணவன், மனைவியான ராஜனும், ராஜமும் சின்னச் சின்ன விஷயத்துக்கெல்லாம் சண்டை போடுவார்கள். அவன் பிள்ளையார் கோயிலுக்கு போக வேண்டுமென்றால், இவள் முருகன் கோயிலுக்கு போகணும் என்பாள். இவர்களுக்கு சந்திரன் என்ற ஐந்து வயது மகன். அவனை அழைக்கும் அப்பா,டேய்! நீ அம்மா சொல்லைக் கேட்கக்கூடாது. கேட்டே முதுகெலும்பை முறிச்சு புடுவேன், என்பார். அம்மா, இதையே கொஞ்சம் மாற்றி காலை ஒடித்து விடுவேன், என்பாள். ஒருநாள், ரோட்டில் கிடந்த நூறு ரூபாய் தாளை அந்தச்சிறுவன் எடுத்தான். மீண்டும் கீழே வீசி விட்டான்.
இதை ஒரு துறவி கவனித்தார். பணத்தை ஏனப்பா வீசினாய். உனக்கு புத்தகம் வாங்க பயன்படுமே! என்றார். சாமி! நான் இதை வீட்டுக்குக் கொண்டு போய் அப்பாவிடம் கொடுத்தாலும் அடி வாங்குவேன், அம்மாவிடம் கொடுத்தாலும் அடி வாங்குவேன், என்று தன் வீட்டு நிலையைச் சொன்னான். அங்கே தற்செயலாக வந்திருந்த தாய், தகப்பனுக்கு தன் குழந்தை வருந்திப் பேசுவது கேட்டது. குழந்தையின் மனநிலையை தங்கள் சண்டை எந்தளவு பாதித்துள்ளது என்பதை உணர்ந்த அவர்கள் ஒற்றுமையுடன் வாழத் தொடங்கினர்.