|
காட்டில் தவத்தில் ஈடுபட்ட மகாவீரர் இலந்தைப் பழங்களை மட்டுமே சாப்பிட்டு வந்தார். அவருடைய உடல் எலும்பும், தோலுமாக காட்சியளித்தது. அசைவற்று அமர்ந்திருந்த அவர் அருகில் ஒரு புலி வந்து நின்றது. அந்த வழியில் வந்தவர்கள், ஐயோ! பாவமே! கொடிய புலி இந்த மகானை நெருங்கிக் கொல்லப் பார்க்கிறதே!, என்று வருந்தினர். ஆனால், அதை விரட்டப்பயந்து ஒதுங்கிக் கொண்டனர். ஆனால், புலி மகாவீரரை ஏதும் செய்யவில்லை. சற்று நேரத்தில் அந்த இடத்தை விட்டு நகர்ந்தது. வழிப்போக்கர்கள் மகாவீரரை நோக்கி ஓடிவந்தனர். அவரிடம், நல்ல வேளை பிழைத்துக் கொண்டீர்கள்! என்று தங்களின் மகிழ்ச்சியைத் தெரிவித்தனர். அதற்கு பதிலளித்த மகாவீரர், புலியைக் கண்டு ஏன் பயப்படுகிறீர்கள்? எல்லா பிராணிகளுமே நம் அன்புக்கு உரியவை தான். இந்தப் புலியும் என் உடன் பிறந்த சகோதரனைப் போலத்தான், என்றார். வழிப்போக்கர்கள் ஆச்சர்யத்துடன் மகாவீரரிடம், சுவாமி! நீங்கள் என்ன சொல்கிறீர்கள்? யாராவது புலி, சிங்கம் போன்ற கொடிய விலங்குகளை உறவு கொண்டாடுவார்களா? கொல்ல வந்த புலி எப்படி உங்களின் உடன்பிறப்பாகும்? என்று கேட்டனர். மகாவீரர் புன்னகையை மட்டும் பதிலாகக் கொடுத்தார். வழிப்போக்கர்கள் புறப்பட்டனர். மகாவீரரும் தியானத்தில் ஆழ்ந்து விட்டார். அப்போது, புலி மீண்டும் அந்த இடத்திற்கு வந்தது. அவரது தியானத்திற்கு இடையூறு செய்யாமல் அருகில் வந்து படுத்துக் கொண்டது. |
|
|
|