|
மகாவீரர் ஒரு மரத்தடியில் அமர்ந்திருந்தபோது, பசு மேய்க்கும் ஒருவன் அவரருகில் வந்தான். அவன் மகாவீரரிடம், ஐயா! என் பசுக்களை கொஞ்சம் பார்த்துக் கொள்ளுங்கள். வீட்டுக்குப் போய் உணவருந்தி விட்டு வருகிறேன், என்று சொல்லி விட்டுப் போனான். உலக பந்தம் அறவே அற்றுப்போன மகாவீரர், தியானத்தில் மூழ்கிப் போனார். சிறிது நேரத்தில் சாப்பிட்டு விட்டு, மாடுகளைத் தேடி வந்தான். அங்கு மகாவீரர் மட்டும் அமர்ந்திருந்தார். என்னைய்யா தூங்கி வீட்டீரா! என் மாடுகளைக் காணோமே? என்று கேட்டான். தியானத்ததில் மூழ்கி விட்ட மகாவீரரின் காதில் அவன் சொன்னது ஏதும் விழவில்லை. கோபமடைந்த அவன் மகாவீரரை பலம் கொண்ட மட்டும் அடித்தான். அப்போதும் அவர் வாய் திறக்கவில்லை. மாடுமேய்ப்பவனின் அக்கிரமத்தை சகித்துக் கொள்ள முடியாத சிலர் அவனைத் தடுத்து தாக்க முயன்றனர். அப்போது கண்விழித்த மகாவீரர், அடிக்காதீர்கள்! அவன் ஒரு பாவமும் செய்யவில்லை, என்று தடுத்தார். பழிக்குப்பழி வாங்குவது தர்மம் அன்று. ஒருவரை இம்சிப்பதால் அழிவு தான் உண்டாகும்,என்று அருள்மொழி கூறினார். தன்னை துன்புறுத்துபவன் மீதும் அன்பு காட்டிய மகாவீரரைக் கண்ட அனைவரும் ஆச்சர்யப்பட்டனர். புற உலக சிந்தனையே இல்லாத ஞானியால் எப்படி பசுக்களைப் பாதுகாக்க முடியும்? என்று புலம்பிய படியே அவன் பசுக்களைத் தேடிப் புறப்பட்டான். |
|
|
|