பக்திநிலையில் அரும்பு, பூ, காய், கனி என்னும் நான்கு நிலைகள் உண்டு. இதில் மாணிக்கவாசகரை கனிந்தபக்திக்கு எடுத்துக் காட்டாகச் சொல்வர். இவர் பாடிய திருவாசகத்தின் பெருமையை திருவாசகத்திற்கு உருகார் ஒருவாசகத்துக்கும் உருகார் என்று குறிப்பிடுவர். திருவாசகத்தையும் சிவனையும் வேறுவேறாக பிரித்துப் பார்ப்பதில்லை. திருவாசகத்தின் ஒவ்வொருபாடலிலும் சிவனருள் நிறைந்திருக்கிறது. ஆங்கிலத்தில் திருவாசகத்தை மொழி பெயர்த்தவர் ஜி.யு.போப் என்ற வெளிநாட்டவர். இதை மொழிபெயர்த்த போது, பக்தியால் அவருக்கு கண்ணீர் பெருகியது. அவர் குறிப்பெடுத்த காகிதகங்கள் அதனால் நனைத்து ஈரமானது. அம்மையப்பனாக விளங்கும் சிவனைத் தனது தாயாக பல இடங்களில் மாணிக்கவாசகர் போற்றுகிறார்.
நாயிற் கடையாய் கிடந்த அடியேனுக்கு தாயிற் சிறந்த தயாவான தத்துவனே என்றும் தாயினும் சாலப் பரிந்து பாவியேனுடைய ஊனினை உருக்கியவனே என்றும் போற்றுகிறார். மாணிக்கவாசகருக்காக சிவன் நிகழ்த்திய திருவிளையாடல்கள் பல. இவரது இயற்பெயர் வாதவூரார். அரிமர்த்தன பாண்டியனின் அவையில் அமைச்சராக இருந்தார். திருப்பெருந்துறை என்னும் ஆவுடையார்கோயிலுக்கு மாணிக்கவாசகர் சென்றபோது, சிவன் குரு வடிவில் தோன்றினார். மாணிக்கவாசகரை ஆட்கொண்டு மறைந்தார். இதன்பின், சிவசிந்தனையில் மூழ்கிய மாணிக்கவாசகர், சிவப்பணிக்கே தன்னை அர்ப்பணித்தார். அவருக்காக சிவன் நரியைப் பரியாக்கியும், வைகையில் வெள்ளம் பெருகச் செய்தும், பிட்டுக்கு மண் சுமந்து பிரம்படிபட்டும் பல அற்புதங்களை நிகழ்த்தினார். சிதம்பரம் வந்த மாணிக்கவாசகர் முன்புநடராஜப் பெருமான், அந்தணர் வடிவில் தோன்றினார், மாணிக்கவாசகர் சொல்லச்சொல்ல, ஏடும் எழுத்தாணியும் கொண்டு திருவாசகத்தைஎழுதினார். திருவெம்பாவை பாடலைப் பாடிய போது பாவை பாடிய வாயால் கோவை பாடுக என்று சிவன் வேண்டினார்.
அதன்படியே திருச்சிற்றம்பலக்கோவை என்னும்நூலையும் பாடினார். சுவடியின் முடிவில், மாணிக்கவாசகன் சொல்ல அழகிய சிற்றம்பலம் உடையான் எழுதியது என்று கையெழுத்திட்டு சிதம்பரம் கோயில் பஞ்சாட்சரப்படியில் வைத்து விட்டு மறைந்தார். காலை பூஜைக்குவந்த தில்லைவாழ் அந்தணர்கள், அந்த ஓலைச்சுவடியைக் கண்டு அதிசயித்தனர். மாணிக்க வாசகரிடம் அப்பாடல்களின் பொருளை விளக்கும் படி வேண்டினர். அம்பலக்கூத்தனே அதன் பொருள் என்ற மாணிக்க வாசகர், நடராஜரின் திருவடியில் கலந்தார். ஆண்டுக்கு ஆறுமுறை நடக்கும் நடராஜ அபிஷேகங்களில் மார்கழி திருவாதிரையே சிறப்பானது. அன்று அதிகாலை சூரியோதய வேளையில் ஆருத்ரா அபிஷேகம் நடக்கும். பழந்தமிழ் நூல்களில் ஆதிரை முதல்வன் என்று சிவன் குறிப்பிடுகின்றனர். திருவாதிரை விழாவின் தினமும் மாலையில் மாணிக்கவாசகர். சுவாமி சந்நிதிக்கு எழுந்தருள்வார். அப்போது திருவெம்பாவை பாடி தீபாராதனை செய்வது வேறெங்கும் இல்லாத தனிச்சிறப்பு. பரம்பொருளும் பக்தனும் சமம் என்பதை உணர்த்தும் விழாவாக, மார்கழி திருவாதிரை அமைந்துள்ளது.