மார்கழி மாதத்தில் ஆருத்ரா தரிசன திருவிழா கொண்டாடப்படுவது, இந்த பூலோகத்தில் பிறந்த ஒரு தெய்வப் பெண்மணியின் தியாகத்திற்காக என்பது உங்களுக்குத் தெரியுமா! சோழநாட்டின் தலைநகரான காவிரிப்பூம்பட்டினத்தில் சாதுவன் என்ற வியாபாரி இருந்தார். பெரிய பணக்காரர். அவரது மனைவி ஆதிரை. திருமணமாகி இரண்டு ஆண்டுகள் மனைவியுடன் இன்பமாக குடும்பம் நடத்திய சாதுவன், அவ்வூரில் நடந்த நாடகத்திற்குச் சென்றார். நாடகத்தில் நடித்த நடிகையைச் சந்தித்தார். அவளது அழகு, ஆடல், பாடலில் மயங்கி காதல் கொண்டார். அவள் வீட்டிற்குச் சென்று அங்கேயே தங்கி விட்டார். நடிகையோ, சாதுவனைவிட அவர் வைத்திருந்த பொருள்மீது ஆசை வைத்திருந்தாள். வீட்டில் உள்ள பொருள்களை எல்லாம் தனக்கு தரும்படி கேட்டாள். சாதுவனும் கொடுத்து விட்டார். பொருள் கிடைத்ததும் அவரை விட்டுச் சென்றுவிட்டாள். தன் மனைவிக்கு இழைத்த துரோகத்தால் தான் தனக்கு இந்த கதி ஏற்பட்டது என்று எண்ணிய சாதுவன் வீட்டிற்குக் போகவில்லை. மீண்டும் சம்பாதிக்கத் திட்டமிட்டார். அப்போது, வங்கதேசத்தில் இருந்து வியாபாரிகள் காவிரிப்பூம்பட்டினம் வந்தனர். அவர்களைச் சந்தித்த சாதுவன், தனக்குத் தெரிந்த வியாபார நுட்பத்தையெல்லாம் எடுத்துச் சொன்னார். அதைக் கேட்டதும் அவர்களுக்கு சாதுவனைப் பிடித்துப் போனது.
தங்களுடன் சாதுவனைப் பாய்மரக்கப்பலில் அழைத்துச் சென்றனர். கப்பல் சென்று கொண்டிருந்தபோது, இரவு வேளையில் பயங்கரப் புயல் அடித்தது. கப்பல் கவிழ்ந்து விடும் நிலைமையில் அனைவரும் இறைவனை வழிபட்டனர். மனைவிக்குக் கூட தெரியாமல் வந்த சாதுவனுக்கு அவள் நினைவு எழுந்தது. இழந்த பொருளை எல்லாம் மீட்டபிறகு அவளைச் சந்திக்கலாம் என்ற எண்ணத்தில் தான் சாதுவன் அவளிடம் சொல்லாமல் வந்துவிட்டார். ஒரு வேளை கப்பல் கவிழ்ந்து இறந்து போனால் மனைவியிடம் தனக்கு உண்டான கெட்டபெயர் அப்படியே நிலைத்து நின்று விடுமே என வருந்தினார். புயலோ நின்றபாடில்லை. கப்பல் கடலில் மூழ்கி விட்டது. கடலில் விழுந்த வியாபாரிகளை முதலைகள் விழுங்கி விட்டன. அதிர்ஷ்டவசமாக அவை சாதுவனை ஒன்றும் செய்யவில்லை. அவர் உடைந்த கப்பலின் பலகை ஒன்றின் மீதேறி படுத்துக் கொண்டார். தனக்கு துரோகம் செய்தவர் என்றாலும் கூட, கணவன் எந்த இடத்தில் இருந்தாலும் நல்லபடியாக இருக்க வேண்டும் என்று தினமும் வேண்டிக் கொள்வது ஆதிரையின் வழக்கம். அவளது பிரார்த்தனைக்கும், கணவர் திருந்திவிடுவார் என்று பொறுமையுடன் காத்திருந்ததற்கும் பலனாக, சாதுவன் படுத்திருந்த பலகை பாதுகாப்பாக கரையில் ஒதுங்கியது.
ஒருநாள், சாதுவன் வெளிநாடு சென்ற விஷயமும், கப்பல் கடலில் மூழ்கியதும் செய்தி ஆதிரையை எட்டியது. தன் கணவர் இறந்துவிட்டார் என முடிவு செய்த ஆதிரை கலங்கிப் போனாள். இதயமே வெடித்துவிட்ட நிலையில், மயானத்திற்குச் சென்று தீ மூட்டி உயிர் துறக்க முடிவெடுத்தாள். இறைவா! அடுத்த பிறவியிலும் அவரே என் கணவராக வரவேண்டும், என்று வேண்டியபடி தீயில் குதித்தாள். ஆனால், அந்தக் கற்புக்கரசியை அக்னிதேவன் சுடவில்லை. அவளுடைய கற்புத்தீ தான் எரியும் அக்னிதேவனைச் சுட்டது. அவள் உயிருடன் மீண்டாள். நெருப்பில் குதித்தும் உயிர் போகாததால், ஆதிரைக்கு வருத்தம் உண்டானது. அப்போது வானில் அசரீரி ஒலித்தது. ஆதிரையே! கவலை வேண்டாம்! உன் கணவர் மீண்டும் வருவார், என்றது. ஆதிரை மகிழ்ந்தாள். இதனிடையே கரையில் ஒதுங்கிய சாதுவனை அந்நாட்டு அரசரிடம் காவலர்கள் ஒப்படைத்தனர். அவரிடம் தன் கதையை சாதுவன் எடுத்துச் சொன்னான். அரசர் உண்ணக் கொடுத்த மாமிசம், கள் ஆகியவற்றை சாதுவன் ஏற்றுக் கொள்ளவில்லை. அரசர் சாதுவனிடம், நாம் மகிழ்ச்சியுடன் இருக்கத்தான் கடவுள் மதுவையும், மாமிசத்தையும் படைத்திருக்கிறார். அப்படி இருந்தும் ஏன் சாப்பிட மறுக்கிறாய்?, என்று கேட்டார். சாதுவன் அவரிடம், அரசே! நான் ஏற்கனவே மது, மாது, மாமிசத்திடம் சிக்கிச் சீரழிந்தவன். இனி, நான் மாமிசம் உண்பதாக இல்லை. மனதை மயக்கும் கள்ளும் குடிக்கமாட்டேன். இலை, காய்கறி, கனிவகை, தானியம், கிழங்கு ஆகிய உணவுகளை கடவுள் நமக்கு தாராளமாக வழங்கியுள்ளார். இந்தபிறவியில் ஒரு ஆட்டைக் கொன்றால் அந்த ஆடு அடுத்த பிறவியில் நம்மைக் கொல்லும்! கள் குடிப்பதால் சண்டைகள் உருவாகி அது கொலையில் முடியும். நாமும் அடுத்தபிறவியில், அதே கொலைகாரனால் கொல்லப் படுவோம். இந்த பிறவி நீடிப்பதை விரும்பவில்லை, என்றான். இதைக்கேட்ட மன்னர் மனம் திருந்தினார். சாதுவனை காவிரிப் பூம்பட்டினம் கிளம்பிய ஒரு கப்பலில் அனுப்பி வைத்தார். ஆதிரையிடம் மன்னிப்பு கேட்டு, அவளுடன் பலகாலம் வாழ்ந்தார் சாதுவன். கற்புக்கரசியான ஆதிரையே நட்சத்திரமாக வான மண்டலத்தில் மிளிர்கிறாள். அவளது கற்பின் பெருமையை மெச்சியே, அந்த நட்சத்திரத்திற்கு திரு என்ற அடைமொழியும் சேர்க்கப்பட்டு திருவாதிரை என வழங்கப்படுகிறது. அம்மையப்பனாகிய சிவபெருமானும் ஆதிரைக்கு பெருமை சேர்க்கும் விதத்தில் அதை தனது சொந்த நட்சத்திரமாக ஏற்றார்.