ஞானி ஒருவர் சிறந்த பாடகரும்கூட. அவ்வப்போது கோயில்களுக்குச் சென்று இறைவன்மேல் பாடல்கள் பாடுவது வழக்கம். ஒரு சமயம் அவர் கோயிலு<க்கு கச்சேரி செய்யச் செல்லும் வழியில், ஒருவர் மிகுந்த பாரத்துடன் கை வண்டியை தள்ளிக்கொண்டு போவதைக் கண்டார். மனம் பொறுக்காத ஞானி, ஓடோடிச் சென்று அவருக்கு உதவினார். பிறகு கச்சேரி செய்ய ஆலயம் சென்றார். வண்டியைத் தள்ளியதால் அவரது மேலங்கி கசங்கியதோடு சக்கரத்திலிருந்த சேறும் படிந்திருந்தது. ஆலய நிர்வாகிகள், நீங்கள் ஏன் சுவாமி... இது போன்ற வேலைகளில் ஈடுபடுகிறீர்கள்? இம்மாதிரி அழுக்கான ஆடையுடன் கச்சேரி செய்தால் உங்கள் நினைவு முழுவதும் அதைப்பற்றியே இருக்கும். பாடலில் மனம் ஒன்ற உங்களால் முடியாதே?
கவலைப்படாதீர்கள், நான் மட்டும் அந்தக் கை வண்டிக்காரருக்கு சரியான சமயத்தில் உதவி செய்யத் தவறி இருந்தால், அந்தக் குற்ற உணர்வின் காரணமாக என் சங்கீதம் அபஸ்வரம் தட்டியதாக ஆகியிருக்கும். ஆனால் அவருக்கு உதவியதால் சிரமம் தீர்ந்து, அவர் காட்டிய சந்தோஷத்தை நினைத்துப் பார்க்கும்போது என் இசை இன்னும் மேம்பட்டதாகவே இருக்கும். இசைக்கு மேன்மை கொடுப்பது உடுத்தியிருக்கும் உடை அல்ல; உள்ளத்தில் இருக்கும் மனிதாபிமானம் என்றார் ஞானி. மற்ற நாட்களைவிட அன்று கச்சேரி அற்புதமாக அமைந்தது.