மாமா! தீபாவளி பற்றி நல்ல கதை ஒன்றைச் சொல்லுங்களேன், என்று கேட்டாள் வாசுகி. வாசுகி! தீபாவளி ஒரு தியாகத்திருநாள். பெற்றவளே மகனை அழித்து நீதியைக் காத்தாள் என்றால் சாதாரண விஷயமா! கதையைக் கேள், என்ற மாமா தொடர்ந்தார். நரகாசுரன் என்ற மகனை, மகாவிஷ்ணு வராக அவதாரம் எடுத்து பூமியைக் குடைந்து சென்ற போது, அவரது ஸ்பரிசத்தால் பெற்றெடுத் தாள் பூமாதேவி. வாத்தியார் பிள்ளை படிக்காது என்று கிராமத்திலே ஒரு சுலவடை சொல்வார் கள். அது மாதிரி... கடவுளின் பிள்ளையாக இருந்தாலும், அவன் என்ன காரணத்தாலோ கெட்டவனாக வளர்ந்து விட்டான். பிரம்மாவை நினைத்து கடும் தவமிருந்து எனக்கு யாராலும் அழிவு வரக் கூடாது என்று வரம் கேட்டான். பிறந்தால் மரணமுண்டு என்ற அவர், யாரால் அழிவு வர வேண்டும்? என்று அவனையே முடிவு செய்து கொள்ளச் சொன்னார். அவன் புத்திசாலி. என்னைப் பெற்றவளைத் தவிர யாரும் என்னை அழிக்கக்கூடாது என்று நிபந்தனை விதித்தான். பிரம்மாவும் ஓகே சொல்லிவிட்டார். பெற்றவள் பிள்ளையைக் கொல்லமாட்டாள் என்று நரகாசுரனுக்கு தைரியம்!
கடவுளின் பிள்ளை, என்ற திமிரில் இந்திர லோகத்துக்குள் புகுந்து தேவர்களை இம்சிக்க ஆரம்பித்தான். அவர்கள் பயந்து போனார்கள். ஒரு வழியாக பகவானிடம் புகார் சென்றது. பிள்ளையென்றும் அவர் பார்க்கவில்லை. பூமாதேவி அப்போது சத்யபாமாவாக அவதரித்திருந்தாள். அவள் அறியாமலே அவளைக் கொண்டே நரகாசுரனை அழித்தார் பரமாத்மா. உண்மையறிந்த அவள், என் மகன் கொடியவனே ஆயினும், என் கையாலேயே அவனை அழித்தது வருத்தமாக இருக்கிறது. ஆனாலும், அவன் அழிந்த நாள் தேவர்களுக்கு மகிழ்ச்சியான நாளாக இருக்கிறது. அந்த மகிழ்ச்சி அவர்களுக்கு மட்டுமல்ல! இந்த உலகம் முழுமைக்கும் கிடைக்கட்டும். அந்த திருநாளில் எல்லோரும் எண்ணெய் தேய்த்து ஸ்நானம் செய்ய வேண்டும் என்றாள். அவ்வாறு குளிப்பவர்களுக்கு அகாலமரணம் ஏற்படக்கூடாது என்றும் வரம் வாங்கி அதை நமக்கு கொடுத்து விட்டாள், என்று மாமா கதையை முடிக்கவும், மாமா! ஒரு சந்தேகம்! விசேஷ நாளன்று எண்ணெய் தேய்த்து குளிப்பது சாஸ்திரத்துக்கு பொருந்தாததாக இருக்கிறது. ஆனால், பூமாதேவி அந்தக் குளியலின் போது எந்த ஊரில் யார் குளித்தாலும் அங்கே நீரில் கங்கையும், எண்ணெயில் லட்சுமியும் வந்து குடியேற வேண்டும் என்று கேட்டிருக்கிறாள். இதற்கு என்ன காரணம்? என்றாள்.
நல்ல கேள்வி கேட்டாய் வாசுகி! அதாவது புண்ணியமும், செல்வமும் மக்களுக்கு ஒரு சேர கிடைக்க வேண்டும் என்று எண்ணினாளாம் அந்த மாதரசி. அதற்காகத்தான் இப்படி ஒரு வரம் கேட்டாள். கங்கையில் குளித்தால் புண்ணியம், எண்ணெயில் அன்று லட்சுமி வாசம் செய்கிறாள். அது செல்வத்தைத் தரும். அதுமட்டுமல்ல, பொதுவாக சூரிய உதயத்துக்கு முன்னதாக எண்ணெய் தேய்த்துக் குளிக்கக் கூடாது. ஆனால், தீபாவளியன்று மட்டும் சூரியோதயத்துக்கு முன்னதாக மக்கள் குளிக்கவும் பகவானிடம் அனுமதி பெற்று தந்திருக்கிறாள். மகன் இறந்த சூழலில் கூட பிறர் நலம் பேணிய தியாகசீலி பூமாதேவி. அதனால் தான் அவளை பொறுமைக்கு இலக்கணமாகச் சொல்கிறோம். மொத்தத்தில், தீபாவளி ஒரு தியாகத்திருநாள், என்றார். அப்போது வாசுகியின் அப்பா வந்தார். சாம்பு நீ சொன்ன கதை நல்ல நீதியைப் போதிக்குது! ஆனால், இன்று தீபாவளி என்பது மாமனார் வீடுகளை கசக்கிப்பிழியும் ஒரு நிகழ்வாக மாறிவிட்டது. பூமாதேவியின் தியாகத்தை கோயில்களில் பக்தர்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும்.தீபாவளி ஒரு தியாகத்திருநாள் என்பதைத் தெரிந்துகொண்ட பிறகாவது, நம் மாப்பிள்ளைகளும், அதிகாரிகளும் தங்களது தீபாவளி அறுவடையைத் தியாகம் செய்தால் சரி தான்! என்று சொல்லி சிரித்தார்.