இப்போதெல்லாம் மொபைல், இன்டர்நெட்டில் பல கோடி பரிசு கொடுப்பதாக குறுந்தகவல், அதிக வட்டி தருவதாக ஆசைகாட்டுதல், ஒன்றுக்குப் பத்தாக பொருட்கள் தருவதாக வதந்தியைக் கிளப்பி, மக்களை திசைதிருப்பி சம்பாதிப்பவர்கள் பெருகி விட்டார்கள். இவர்களிடம் இருந்து தப்ப வேண்டுமானால் ஒரே ஒரு வழி தான் இருக்கிறது. பேராசையை விட்டாக வேண்டும். ஒரு கதையைக் கேளுங்க! கந்தசாமியும் ரங்கசாமியும் பக்கத்து ஊர்களில் வசித்தனர். இருவருமே பித்தலாட்டக்காரர்கள். யாரை ஏமாற்றி பொருள் சேர்க்கலாம் என திட்டமிடுபவர்கள். ஒருநாள், கந்தசாமி ஒரு பாத்திரத்தில் முக்கால் பாகம் மாட்டுச்சாணம் நிரப்பி, அதன் மேல் ஒரு கைப்பிடியளவு சோற்றுப்பருக்கையை பரப்பிக்கொண்டு வெளியே கிளம்பினான். ஒரு மண்டபத்தில் அமர்ந்தான். ரங்கசாமி, ஒரு பாத்திரத்தில் முக்கால் பாகம் மணல் நிரப்பி, அதன் மேல் ஒரு இரண்டு கைப்பிடி அரிசியைப் பரப்பிக் கொண்டு வந்தான். அவனும் அதே மண்டபத்தில் தங்கினான்.
அறிமுகமில்லாத இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக்கொண்டு, ஒருவரை ஒருவர் பற்றி விசாரித்துக் கொண்டனர். அண்ணே! நான் பக்கத்து ஊருக்குப் போகிறேன். என் மனைவி இந்த சட்டியில் சோறு வைத்து கொடுத்து விட்டாள். எனக்கு இப்போது பசிக்கவில்லை. வீணாய் தான் போகும். நீங்களும் ஏதோ வைத்திருக்கிறீர்கள் போல் இருக்கிறதே! என்றான் கந்தசாமி. ஆமாப்பா! உன் கதை தான் எனக்கும்! என் மனைவி இந்த அரிசியை சட்டியில் நிரப்பி, போகும் வழியில் என்னையே சமைத்து சாப்பிடச் சொல்லி கொடுத்து விட்டாள். பசி உயிர் போகுது. ஆனால், இதை சமைக்க சோம்பேறித்தனமா இருக்குது! என்றான். சரி... நல்லதா போச்சு! இந்த சோறை நீங்க வாங்கிக்கிடுங்க! அரிசியை நான் வாங்கிக்கிறேன். போகிற வழியிலே சமைச்சு சாப்பிட்டுக்கிறேன், என்றான் கந்தசாமி. இருவரும் பாத்திரங்களை மாற்றிக் கொண்டு உடனே கிளம்பினர். சற்றுதூரம் சென்று சட்டியைக் கிளறிய போது தான், இருவருமே ஒருவரை ஒருவர் ஏமாற்றிக் கொண்டது தெரிய வந்தது. பார்த்தீர்களா! பேராசையால் இருவருமே ஏமாந்தார்கள். இவர்களின் கதை தான் இன்று நம் மக்களில் பலருக்கும்! இனியேனும், சுதாரிப்பாக இருப்பீர்களா!