|
கண்ணன் ருக்மிணியின் மாளிகையில் சயனித்திருந்தான். ஒன்றுமே தெரியாதவர் போல் உறங்குவதைப் பார்! இவர் அறிதுயில் கொள்கிறார் என்பது எனக்கு தெரியாதா என்ன! அப்படியானால் என்ன! உறங்குவது போல் பாசாங்கு செய்வான். ஆனால், இந்த பிரபஞ்சத்தில் நடக்கும் எல்லாமே அவனுக்கு தெரியும். எல்லாம் அறிந்தபடியே துயில் கொள்வது தான் அறிதுயில்,...இப்படி எண்ண அலைகளில் மிதந்து கொண்டிருந்தாள் ருக்மிணி. அப்@பாது, அங்கே நாரதர் வந்தார். கண்ணா! ஞாபகமில்லையா! இன்று ருக்மிணியை மணந்தநாள் என்பதற்காக இங்கே வந்து விட்டாய். இன்றுதானே பாமாவுக்கும் பிறந்தநாள்! அங்கேயும் போகாவிட்டால், எரிமலை வெடித்து விடுமே! என்ன செய்யப் போகிறாய்? அங்கும் தான் போவேன்... அதெப்படி முடியும்! நீ இங்கிருந்து காலை வெளியே வைத்தாலே அவள் கண்களில் அனல் பறக்குமே! கண்ணன் இதற்கு பதில் சொல்லவில்லை, சிரித்தான்.
நாரதர் கலகமூட்ட பாமா வீட்டுக்கு கிளம்பி விட்டார். அங்கே போனால், கண்ணனின் திருவடிகளை ரசித்தபடியே, அவன் அறிதுயில் கொள்வதை பாமா ரசித்துக் கொண்டிருந்தாள். அடடா...இந்தக் கபடன் இங்கே எப்போது வந்தான்! கண்ணிமைக்கும் நேரத்தில் நான் இங்கே வந்து விட்டேன், இவன் அதற்கும் முன்னதாக இங்கே...நாரதருக்கு தலை குடைந்தது. பாமா எழுந்து நாரதரை வரவேற்றாள். அமருங்கள்! பருக பாயாசம் கொண்டு வருகிறேன், இன்று என் பிறந்தநாள்... அறிவேன் தாயே...சரி...உன் கணவர் எப்போது இங்கே வந்தார்! என்ன நாரதரே! இவரை எங்கோ பார்த்த மாதிரியல்லவா பேசுகிறீர்கள்! நேற்றையில் இருந்தே இவர் இங்கு தான் இருக்கிறார்! இல்லையே! இவரை சற்று முன் ருக்மிணி இல்லத்தில் பார்த்தேனே.. நாரதர் லேசாக அவள் காதில் போட்டார். பொறுமையின் சின்னம் பூமாதேவி. அந்த பூமாதேவி தான் சத்யபாமாவாக பூமிக்கு வந்திருக்கிறாள். அந்த பொறுமைசாலிக்கே கண் சற்று சிவந்து விட்டது.
நாரதரே! வேண்டாம்...என் பிறந்தநாளும் அதுவுமாக கலகம் வேண்டாம் என நினைக்கிறேன்! இந்த அரி இங்கு தான் துயில் கொண்டிருக்கிறார்,. அறிதுயில்...அரிதுயில்... இந்த வார்த்தை ஜாலத்தை அந்த குழப்பமான நேரத்திலும் ரசித்தார் நாரதர். அரி (ஹரி) என்னும் கிருஷ்ணன் துயில் கொண்டிருக்கிறான்...எல்லாம் அறிந்தபடி அறிதுயில் கொண்டிருக்கிறான்...! கலகம் செய்பவனிடமே கலகமா...! நாரதர் கண்ணன் அருகே சென்றார். நாராயணா... நாராயணா... என்றார். கண்ணன் கண் விழித்தான். மகாவிஷ்ணுவே! இதென்ன கபடம்...அங்கும் இருக்கிறீர்! இங்கும் இருக்கிறீர்!...என்றவரை இடைமறித்த கண்ணன், இந்த ஊரெல்லாம் போய் பாரும். என்னை அழைத்த எல்லா கோபியர் வீட்டிலும் கூடத்தான் இருக்கிறேன்...என் பக்தர்கள் வீட்டில் எல்லாம் கூட இருக்கிறேன்...எங்கும் இருப்பவன் தானே நான்...அதை விடும்... உம் மனதில் கூட நான் தான் இருக்கிறேன்! அதனால்தான் நாராயண நாமத்தை விடாமல் சொல்லும் பாக்கியம் உமக்கு கிடைத்திருக்கிறது! நாரதர் கண்ணனிடம் விடைபெற்று வெளியே கிளம்பினார். எல்லா கோபியர் வீட்டிலும் கண்ணன் இருந்தான். கண்ணா! உலகத்தார் கபடு செய்தால், அது மற்றவர்களைப் பாதிக்கிறது. உன் கபடம் எல்லாரையும் ரசிக்க வைக்கிறதே! அது எப்படி! புரியாத இந்தக்கேள்விக்கு விடை தெரியாத அந்த திரிலோக சஞ்சாரி நாராயண என உச்சரித்தபடியே வானில் நடந்தார்.
|
|
|
|