தசரதனுக்கு சிறப்பாக நடைபெற இருந்த திருமணத்தை கந்தர்வ விவாகமாக நடைபெறச் செய்ய காரணமே இராவணன் தான். அவன் திருமணத்தைத் தடுக்க முயன்றாலும் விதிப்படி அது நடந்தே விட்டது. தென் கோசல நாட்டு அரசன் அஜன்-இந்துமதியின் மகனான தசரதனுக்கு, வடகோசல நாட்டு மன்னன் கோசலராசன் மகள் கோசலையை மணம் முடிக்க ஏற்பாடு செய்தனர். இத்திருமணத்திற்கு தேவரும் மூவரும் வந்து வாழ்த்த வேண்டும் என நாரதர் விரும்பினார். காரணம் இத்தம்பதிகளுக்கு தான் ஸ்ரீராமராக விஷ்ணு அவதரிக்கப் போகிறார் என்பது அவருக்குத் தெரியும். இந்த சமயத்தில் தான் இலங்கை அசுர மன்னன் இராவணனுக்கு ஒரு சந்தேகம் வந்தது. உலகில் பிறக்கும் அத்தனை உயிர்களும் ஒருநாள் விதிப்படி மரணித்தே தீர வேண்டும். என்னதான் சாகாவரம் பெற்றிருந்தாலும் நமக்கும் ஒரு முடிவு உண்டுதானே! அது எப்படி என பிரம்மனிடம் கேட்டான். அதற்கு பிரம்மன், இராவணா! நீ எந்தெந்த உயிர்களால் மரணம் ஏற்படக்கூடாதென பட்டியலிட்டுக் கேட்டாலும், மனிதர்களை மறந்துவிட்டாயே அது உன் பலவீனம் தான் என்றார்.
அப்படியெனில் என்னைக் கொல்லப் போகும் மனிதன் யார்? என வினவினான் இராவணன். அயோத்தி மன்னன் தசரதனுக்கும், கோசலைக்கும் பிறக்கும் மகன்தான் உன்னைக் கொல்வான். இதற்கு உன் மகளே காரணமாகி விடுவாள் என்று கூறினார் பிரம்மா. நாரதர் மூலம் தசரதன் திருமணம் நடக்கும் நாளை அறிந்து கொண்டான் இராவணன். உடனே சென்று கோசல நாட்டு மன்னனுடன் போரிட்டு வென்று, கோசலையைக் கடத்திச் சென்றான். அவளைக் கொல்ல முயலும் போது, பெண் கொலை பாவம்; வேண்டாம் என எண்ணி, அவளை ஒரு பெட்டியிலிட்டு ஆளரவமற்ற தீவில் வைத்து ஒரு பூதத்தையும் காவலுக்கு ஏற்பாடு செய்துவிட்டு இலங்கை திரும்பினான். செல்லும் வழியில் தசரதன் சரயூ நதியில் ஒரு படகில் செல்வதைப் பார்த்தான். உடனே அவன் படகை உடைத்து தசரதனை நீரில் மூழ்க வைத்து விட்டு, தசரதன் இறந்து விட்டான் என நினைத்து மகிழ்வுடன் நாடு திரும்பினான்.
தசரதன் இறக்கவில்லை. ஏனெனில், அவன் மூச்சடக்கும் கலையில் வல்லவன். எனவே நீரை விட்டு வெளிவந்தான். அவன் எண் திசைகளுடன் ஆகாயம், பாதாளம் என பத்து திசைத் தேர்களை உடையவன். எனவேதான் அவனுக்கு தசரதன் என்று பெயர். அத்துடன் அவன் பத்து இந்திரியங்களையும் வென்றவன். ஒரு கட்டையைப் பிடித்து நீந்தியபடி ஒரு தீவில் கரை ஏறினான். அத்தீவில் ஒரு பெட்டி இருப்பதைக் கண்டான். அருகில் யாரும் இல்லை. காவல் பூதத்தை திமிங்கலம் விழுங்கி விட்டது. தசரதன் பெட்டியைத் திறக்க, அதிலிருந்து கோசலை வெளிப்பட்டாள். இருவரும் பேசி தாங்கள் யார் என்பதையும், தங்களுக்கு அன்றுதான் திருமணநாள் என்பதையும் தெரிந்து கொண்டனர். பின் இருவரும் காந்தர்வ விவாகம் செய்து கொண்டனர். இதையறிந்த நாரதர் மூவரையும் தேவரையும் வரவழைத்து வாழ்த்துகள் பெற்றுத் தந்தார். பின் இருவரையும் பெட்டியில் வைத்துவிட்டு அனைவரும் சென்றுவிட்டனர். இந்நிலையில் தான் பெட்டியில் வைத்து விட்டு வந்த கோசலையின் நிலையறிய இராவணன் அங்கு வந்தான். பெட்டியைத் திறந்தான். அதில் இருவரும் மாலையுடன் இருப்பது கண்டு பேரதிர்ச்சியுற்றான். உடனே வாளெடுத்து வெட்டப் போனான். அப்போது பிரம்மன் அங்கு தோன்றி, இராவணா, நில்! இப்போது இவர்களைக் கொல்ல நினைத்தால் நானே மானுடப் பிறப்பெடுத்து உன்னைக் கொல்வேன். நீ இராமன் கையால் இறந்தால் தான் முக்தியடைந்து வைகுண்டம் செல்லலாம். எனவே நீ இலங்கை செல் என்றார். தன் விதியை நொந்தபடி நாடு திரும்பினான் இராவணன். இப்படியாக தசரதன் திருமணம் இராவணனால் நடந்து விட்டது. பின் தசரதன் ஆண் வாரிசுக்கு புத்திர காமேஷ்டி யாகம் செய்ததும்; இராமன் பிறந்ததும்; விஸ்வாமித்திரருடன் சென்றதும்; மிதிலையில் வில் வளைத்து சீதையை மணந்ததும்; வனவாசத்தில் சீதையை இராவணன் கடத்தியதும்; அதனால் இராமன் கையால் அழிந்ததும் தெரிந்ததே.