|
முன் ஒரு காலத்தில் கார்த்தவீரியார்ஜுனன் என்று ஒருவன் இருந்தான். அவன் தத்தாத்ரேயர் என்ற மகரிஷியைக் குருவாக நாடி அவருக்குப் பணிவிடை செய்துவந்தான். ஒருநாள் குரு தூங்கும் காலத்தில், அவர் பாதங்கள் இரண்டையும் அவன் மெதுவாகப் பிடித்து, அவருக்குச் சுகத்தை உண்டாக்கிக் கொண்டிருந்தான். அந்த மகாத்மாவின் உள்ளங்கால்களில் இருந்த சூட்சும அக்கினியானது கார்த்தவீரியார்ஜுனனது கைகளை எரித்து விட்டது. இந்தக் கஷ்டம் வந்தும், கையிழந்த சரீரத்தால் அவன் தன் குருவைத் தடவிக் கொடுத்துச் சுகப்படுத்திக் கொண்டிருந்தான். ரிஷி விழித்துக் கொண்டதும் சிஷ்யனுடைய கஷ்டத்தைப் பார்த்து, தம்முடைய ஞான திருஷ்டியால் அதன் காரணத்தை அறிந்தார். தன் துன்பத்தைப் பொருட்படுத்தாமல் மிகுந்த பக்தியுடன் கார்த்தவீரியன் பணிவிடை செய்ததற்கு மெச்சி, அவனுக்குத் தீர்காயுளும், ஆயிரம் கரங்களும், சக்ரவர்த்தி பதவியும் உண்டாகும்படி அருள் செய்தார். அவற்றை எல்லாம் அவன் அடைந்து சக்கரவர்த்தியாகி, நாட்டு மக்கள் மகிழ நெடுங்காலம் அரசாட்சி செய்து வந்தான். குருபக்தியால் கை கூடாதது ஒன்றும் இல்லை. |
|
|
|