மாண்டவ்யர் என்பவர் மிகப்பெரிய மகரிஷி; தபஸ்வி. காட்டின் நடுவே பர்ணசாலை அமைத்து வாழ்ந்து வந்தார். பர்ணசாலைக்கு எதிரே பிரம்மாண்டமான அரச மரத்தின்கீழ் அமர்ந்து கடுந்தவம் புரிவார். அப்படி ஒருசமயம் பகவானை நினைத்து தவம்புரிந்து சமாதி நிலையில் இருந்தார். அப்போது அந்நாட்டு அரசியின் நகைகளை சில கொள்ளையர்கள் திருடிக்கொண்டு போகும்போது, அரண்மனைச் சேவகர்கள் பார்த்துவிட்டார்கள். காவலர்கள் குதிரை மீதேறி துரத்த, கொள்ளையர்களும் படுவேகமாய் குதிரையில் பறந்தார்கள். நடுக்காட்டை அடைந்த கொள்ளையர்கள் சமாதி நிலையிலிருந்த மாண்டவ்ய ரிஷியின் முன்னால் திருடிய நகைகளைப் போட்டுவிட்டு தப்பிவிட்டார்கள். நகைகளோடு மாண்டவ்யரைப் பார்த்த காவலர்கள், இந்த ஆசாமி கொள்ளையர் தலைவனாக இருக்கலாம். அதனால்தான் நகைகளை இவனருகில் போட்டுவிட்டு ஓடிவிட்டார்கள். இவனும் ஒன்றும் தெரியாதவன்போல் கண்களை மூடிக்கொண்டு நடிக்கிறான்.. என நினைத்துக்கொண்டு அரசனிடம் சென்று முறையிட்டனர். இதைக் கேட்ட அரசன் கோபமடைந்து, நகைகளை மீட்டு அரசியிடம் கொடுங்கள். அந்தத் திருடனை கழுவிலேற்றிக் கொல்லுங்கள் என்று உத்தரவிட்டான். கழுமரம் தயாரானது.
கழுமரம் என்றால் என்னவென்று இந்தகாலத்தில் பலருக்குத் தெரிவதில்லை. அது புராண காலத்திய மரண தண்டனை. ஒரு நீளமான -கனமான கம்பை ஆழமாக பூமியில் நடுவார்கள். அதனுடைய மேல் முனை பென்சில்போல கூராகச் சீவப்பட்டிருக்கும். அந்த மரக்கொம்புமீது ஆமணக்கெண்ணெயை (விளக்கெண்ணெய்) வழுவழுப்பாகத் தடவியிருப்பார்கள். அரசனால் கடுமையான மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களை அந்தக் கொம்பின் உச்சியில் ஆசனவாய் பதியும்படி உட்கார வைப்பார்கள். அந்தக் கூரிய முனை உடலினுள் நுழைந்து உடம்பை இரண்டாகப் பிளந்துவிடும். இது அந்தக் காலத்திய மரண தண்டனை. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் பட்டினத்தாருக்குக்கூட உஜ்ஜயினி நகர அரசன் இந்தத் தண்டனையை விதித்தான். இறைவன் அருளால் கழுமரம் எரிந்து சாம்பலானாது. அப்படிப்பட்ட கழுமரம் தயாரானதும் மாண்டவ்ய மகரிஷியை அதன்மீது உட்கார வைத்தான் அரசன். ஆனால் மாண்டவ்யர் சமாதி நிலையில் இருந்ததால் அவருக்கு எந்த ஆபத்தும் நேரவில்லை. மாண்டவ்யருக்கு இப்படி ஒரு தண்டனையா என்று மற்ற ரிஷிகளும் தபஸ்விகளும் ஓடிவந்து, இவர் எப்பேர்ப்பட்ட மகான்! இவரையா கழுவிலேற்றுவது? என்று அவர்கள் மன்னனிடம் முறையிட, மன்னன் மாண்டவ்யரை விடுவித்தான். அப்போது மாண்டவ்யர் சமாதி நிலை கலைந்து, தனது ஞானதிருஷ்டியால் நடந்ததை அறிந்தார். மன்னனும் மற்றவர்களும் அவரிடம் மன்னிப்புக் கோரினர். அவர் ஒன்றும் நடவாததுபோல் மீண்டும் காட்டிற்கே சென்றுவிட்டார். சென்றவர் தர்மதேவனை அழைத்தார். தர்மதேவனும் அவர் எதிரே தோன்றி வணங்கி நின்றான்.
தர்மதேவனே.. நான் என்ன பாவம் செய்தேன்? என்னை ஏன் கழுமரத்தில் ஏற்றினார்கள்? என்று கேட்டார் மாண்டவ்ய மகரிஷி. ஐயனே.. தாங்கள் ஐந்து வயதுச் சிறுவனாக இருந்தபோது, ஒரு தும்பியைப் பிடித்து அதன் இறக்கைகளைப் பிடுங்கி, ஒரு முள்ளில் அதைக் குத்தி, அது துடிப்பதைப் பார்த்து ஆனந்தப்பட்டீர்கள். அதனால்தான் தங்களுக்கு இந்த தண்டனை என தர்மதேவன் கூற, கோபமுற்றார் மாண்டவ்யர். தர்மதேவா.... ஐந்து வயது என்பது ஏதுமறியா விளையாட்டுப் பருவம். தர்மம் - அதர்மம்; நீதி-அநீதி; பாவம்-புண்ணியம்; நல்லது -கெட்டது என்பதை அறியாத வயதில் நான் ஒரு தும்பியை துன்புறுத்தினேன் என்பதற்காகவா, இந்த வயதில் இப்படி ஒரு தண்டனையை எனக்குத் தருவது? நியாயம் தெரிந்த நீயே இதற்கு சரியான பதிலைக் கொடுப்பாயாக... என்றார். தர்மதேவன் தலைகுனிந்து நின்றான். அவனால் பதில் சொல்ல முடியவில்லை. மேலும் சினமுற்ற மாண்டவ்யர், தர்மதேவனே... நீ பூமியில் மனிதனாகப் பிறந்து நீதி, தர்மம் என்றால் என்ன என்பதை பூலோக வாசிகளுக்குப் புரியும்படி உணர்த்துவாயாக... என சாபமிட்டார். தர்மதேவன் பூமியில் துவாரபரயுகத்தின் முடிவில் பிறந்தான். அவனே விதுரன்!
சந்திர குலத்தைச் சேர்ந்தவன் சந்தனு என்னும் அரசன். சந்தனுவிற்கும், கங்காதேவிக்கும் மகனாகப் பிறந்தவர் பீஷ்மர். பீஷ்மர் பிறந்ததும் கங்கை சந்தனு மன்னனைப் பிரிந்து சென்றுவிட்டாள். அதன்பின் சத்தியவதி என்னும் பேரழகியான மீனவப் பெண்ணை மணந்துகொண்டான் சந்தனு. இதற்குமுன் சத்தியவதியின் அழகில் மயங்கினார் பராசரர் எனும் முனிவர். அவரது பார்வை பட்ட மாத்திரத்திலேயே அவள் கர்ப்பமுற்று ஓர் ஆண் மகவைப் பெற்றாள். அந்தக் குழந்தைதான் பின்னாளில் வியாச மகரிஷியாக விளங்கினார். இது சத்தியவதி கன்னிப் பெண்ணாக இருக்கும் போது நடந்த நிகழ்ச்சி.
(இதைத்தான் பீஷ்மர் அவரது கடைசிக் காலத்தில் விஷ்ணு சஹஸ்ரநாமம் சொல்லும்போது,
பராசராத்மஜம் வந்தே சுகதாதம் தபோ நிதிம்
என்று பராசர முனிவரை வணங்குகிறார். ஏனெனில் கங்கைக்குத் தான் பிறக்கும் முன்னே, தன்னுடைய இரண்டாவது தாயான சரஸ்வதிக்கு மகனாக, பராசர முனிவரின் தவவலிமையால் வியாசர் பிறந்திருப்பதை பீஷ்மர் அறிந்திருக்கிறார். ஆகவே பீஷ்மருக்கு வியாசர் அண்ணன் முறையாகிறார். அதனால் அவரையும், வியாசரின் தந்தையான பராசர முனிவரையும் வணங்குகிறார் பீஷ்மர்.) பின்னர் சந்தனுவிற்கும் சத்தியவதிக்கும் இரண்டு ஆண் குழந்தைகள் பிறக்கின்றன. அதில் ஒரு மகன் கொல்லப்படுகிறான். இதைத் தொடர்ந்து பீஷ்மர், தனக்கு சகோதரன் முறையாகும் சத்தியவதியின் இன்னொரு மகனுக்கு அம்பிகை, அம்பாலிகை என்னும் இரு சகோதரிகளை மணம் முடிக்கிறார். கடைசியில் அந்த ஒரே சகோதரனும் மறைந்துவிட, வம்சம் பெருக வேண்டி பீஷ்மரும் சத்தியவதியும் அந்தச் சகோதரிகளை வியாசரிடம் அனுப்புகின்றனர்.
வியாசர் மூலமாக அம்பிகைக்கு திருதராஷ்டிரனும், அம்பாலிகைக்கு பாண்டுவும் பிறக்கின்றனர், திருதராஷ்டிரன் பார்வை இல்லாதவன்; பாண்டுவோ வெண்குஷ்ட நோயாளி. சத்தியவதி மறுபடியும் அம்பிகையை வியாசரிடம் அனுப்ப, அதற்கு உடன்படாத அம்பிகை தன் பணிப்பெண்களில் ஒருத்திக்கு தன்னைப் போலவே வேடமிட்டு வியாசரிடம் அனுப்புகிறாள். இதைத் தன் தவவலிமையால் உணர்ந்த வியாசர், அந்தப் பணிப்பெண்ணை வெறுமனே தொடுகிறார். அதன் வலிமையால் அப்பணிப் பெண் கர்ப்பமுற்று ஒரு குழந்தையைப் பெறுகிறாள். அக்குழந்தையே தர்மதேவனின் மறு அவதாரமான விதுரர். ஆக, திருதராஷ்டிரன், பாண்டு, விதுரர் மூவரும் சகோதரர்களாகிறார்கள்.
தர்மதேவனே விதுரனாகப் பிறந்ததால், துவாபரயுக இதிகாசமான மகாபாரதத்தில் எப்போதும் தர்மத்தையே உபதேசிக்கிறார் விதுரர். மகாபாரதக் கதாநாயகனான கிருஷ்ணன் மகாவிஷ்ணுவே என்பதை, ஆரம்பம் முதல் அறிந்தவர்கள் சிலரே. பீஷ்மர், கிருபர், துரோணாச்சாரியார், விதுரர் ஆகியவர்களே அவர்கள். பகவானாகிய ஸ்ரீகிருஷ்ணன் பாண்டவர்கள் பக்கம் இருக்கிறான் என்பதாலேயே விதுரர் பாண்டவர்களை ஆதரிக்கிறார். தன் அண்ணனாகிய திருதராஷ்டிரன், தனது நூறு பிள்ளைகளான துரியோதனாதியர்களிடம் வைத்த பாசத்தை, காலமாகிவிட்ட தன் தம்பி பாண்டுவின் பிள்ளைகளாகிய ஐந்து பேரிடமும் வைக்கவில்லையே என்று துடித்துப் போகிறார் விதுரர். அதனால் பாண்டுவின் மக்கள்மீது சித்தப்பா என்கிற முறையில் பாசம் வைத்து பல இக்கட்டுகளையும் சமாளித்துக் காக்கிறார் விதுரர். அண்ணன் திருதராஷ்டிரன், பாண்டவர்களை சூதிற்கு அழைக்கும்போதே அவருடைய நோக்கம் விதுரருக்குப் புரிந்துவிடுகிறது. தடுக்கப் பார்க்கிறார்; முடியவில்லை. சூதிற்கு அழைப்பு விடுத்தவர் மாமன்னர் திருதராஷ்டிரன்; சூதாடுவதோ துரியோதனன். அவனுக்கு உதவியாக சகுனி என்கிற மாமன் பின்னே நிற்கிறான். சகுனி சூதில் வல்லவன். தாயம் உருட்டும்போது நாம் இரண்டு என்கிற எண்ணைச் சொன்னால் நான்கை விழவைக்கும் தந்திரசாலி. அவனோடு சூதாடினால் தோற்பது உறுதி. இதைப் புரிந்துகொண்ட விதுரர் தருமனைத் தடுத்தும், தருமன் இது அரசரின் ஆணை என்று சூதாட வருகிறான். இதைக் கண்ட விதுரரின் அலறலை மகாகவி பாரதியின் பாஞ்சாலி சபதத்தில் காணலாம்.
போச்சுது போச்சுது பாரத நாடு
போச்சுது நல்லறம் போச்சுது வேதம்
ஆச்சரியக் கொடுங்கோலங்கள் காண்போம்
என்று விதுரர் அழுகிறார்.
குரு÷க்ஷத்திரத்தில் நடந்த போரை தனியொரு விதுரரால் தடுக்க முடியவில்லை; இந்த நிலையில் அவர்களைவிட்டு விலகிச் சென்றுவிடுகிறார் விதுரர். மிகப்பெரிய தேசத்தையும், உறவினர்களையும், திருதராஷ்டிரனாகிய கண் பார்வையற்ற அண்ணனையும் துறந்து விதுரர் நாட்டை விட்டுப் போனதற்கும், எவராலும் வெற்றிகொள்ள முடியாத தன்னுடைய வில்லை துரியோதனாதியர் முன் தூக்கி எறிந்துவிட்டு, இனி உங்களுக்காக வில்லைத் தொடேன் என்று விதுரர் சபதமிட்டுப் போனதற்கும் காரணம் துரியோதனனே! நல்லறம் பேசி, நல்வழி நடக்கச் சொன்னதால், தர்மதேவனின் மறு அவதாரமான விதுரரை சபை நடுவில் அவமானப்படுத்துகிறான் துரியோதனன். தன்னுடைய சிறிய தகப்பனார் என்கிற முறையில்கூட விதுரருக்கு மரியாதை தரவில்லை துரியோதனன். அதை பாரதி சொல்லும்போது,
நன்றி கெட்ட விதுரா - சிறிதும் நாணமற்ற விதுரா
தின்ற உப்பினுக்கே நாசம் தேடுகின்ற விதுரா
ஐவருக்கு நெஞ்சம் எங்கள் அரண்மனைக்கு வயிறும்
ஐவர் பக்கம் நின்றே எங்கள் அழிவைத் தேடுகின்றாய்
இன்பம் எங்கனுண்டோ அங்கே ஏகிடு என்றுரைத்தான்.
தர்மதேவனுக்கு எத்தனை பெரிய அவமானம்? தான் பார்த்து பிறந்த பிள்ளை தன்னைக் கேவலப்படுத்துவதை யார் பொறுப்பார்? இனி இந்த அரண்மனை வாசலை மிதிக்க மாட்டேன் என்று வெளியேறிவிட்டார். போருக்கு முதல் நாள் தன் இல்லம் வருமாறு, தன் தம்பியான விதுரரை அழைக்கிறார் திருதராஷ்டிரன். இந்த வாயிலை மிதிக்க மாட்டேன் என்று சபதமிட்ட விதுரர் அண்ணன் அழைக்கிறார் என்று சொன்னவுடன் மீண்டும் வரக் காரணம் - அண்ணன் என்பதால் அல்ல; அது அரசரின் ஆணை எனக் கருதினார். அரண்மனையில் நுழைந்து, மன்னரைக் காண விதுரர் உள்ளே செல்கிறார். மன்னா.. நான் விதுரன் வந்திருக்கிறேன் என்று வணங்கி நிற்கிறார். போரின் முடிவு எப்படியிருக்குமோ என்று பயந்த திருதராஷ்டிரன் விதுரரின் வரவால் மகிழ்ச்சியடைந்தார். பற்பல சுகபோகங்கள் இருந்தும் என்னால் உறங்க முடியவில்லை தம்பி... என்று சோகத்துடன் மன்னர் கூற, அங்குதான் விதுர நீதி ஆரம்பமாகிறது.
மன்னா! உங்களுக்கு இருக்கும் சுகபோகங்களுக்கு தூக்கம் வராமல் போனது அதிசயமே. ஆனால் தூக்கம் வராமல் தவிப்போரும் உளர். உணவு இல்லாதவன் தூங்கமாட்டான்; கெட்ட நடத்தை உள்ளவனுக்கு தூக்கம் வராது; திருடன் தூங்கமாட்டான்; ஏராளமான உணவு உண்டவனுக்கு தூக்கம் வராது; நோயுற்றவன் தூங்கமாட்டான்; தீயவனுக்கு தூக்கம் வராது. பிறர் மனைவியை அடைய முயற்சிப்பவனுக்கும் காமுகனுக்கும் தூக்கம் வராது; நல்லவர்களை விரோதித்துக் கொண்டவனுக்குத் தூக்கம் வராது; பண்பில்லாதவளை மனைவியாகக் கொண்டவனுக்குத் தூக்கம் வராது; கெட்ட எண்ணங்கள் கொண்டவனுக்குத் தூக்கம் வராது; நல்ல பிள்ளைகளைப் பெறாதவனுக்குத் தூக்கம் வராது.. இப்படி விதுரர் சொல்லிக்கொண்டே போக, திருதராஷ்டிரன் தன் தம்பியினுடைய பேச்சைக் கேட்டுக்கொண்டே, எப்படிப்பட்ட அறிஞனை - தர்மவானை நாம் துரத்திவிட்டோம் என்று வருந்துகிறார்.
விதுரரோ சொல்லிக்கொண்டே போகிறார். ஒரு மன்னரின் கடமை; அவருடைய தேசத்து மக்களின் நலன்; மக்களைத் துன்புறுத்தாமல் எப்படி மகிழ்ச்சியுடன் அவர்களை வாழவைப்பது... இப்படி 600-க்கும் மேற்பட்ட செய்யுட்களின் மூலம் திருதராஷ்டிரனுக்கு விளக்குகிறார். இதுவே விதுர நீதி என்பதாகும். ஐயாயிரம் ஆண்டுகட்குமுன் விதுரர் சொன்னதும், கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் கவுடில்யர் என்கிற சாணக்கியர் எழுதிய அர்த்த சாஸ்திரமும், கி.மு. முதல் நூற்றாண்டில் வள்ளுவப் பெருந்தகை எழுதிய திருக்குறளும் நல்லாட்சி நடத்த உபதேசித்த வேதங்களேயாகும். ஆட்சிக்கு வருகிறவர்கள் இம் மூன்றில் ஒன்றைப் படித்தாலும் நல்லாட்சி தருவர்; நல்லறம் பெருகும்.