ஒரு மிகப்பெரிய யானைக்குத் தன் வடிவத்தைப் பார்க்க வேண்டும் என்ற ஆசை உண்டானது. காட்டில் வசிக்கக்கூடிய அதற்கு, தன் வடிவத்தை முழுவதுமாகப் பார்க்க வேண்டும் என்ற ஆசை உண்டானது. உடனே யானை பெரும்குளம் ஒன்றைத் தேடிப் புறப்பட்டது. குளத்து நீரில் தன் வடிவம் பிரதிபலிக்கும்... பார்த்து சந்தோஷப்படலாம் என்ற எண்ணத்தில் வந்து கொண்டிருந்தது. அது நினைத்ததைப் போலவே சற்று தூரத்தில், ஒரு பெரும் குளம் இருந்தது. பார்த்த யானை பரவசம் அடைந்தது. நடையை சற்று எட்டிப் போட்டது. அப்போது... யானையின் பாதையில் ஒரு தவளை குறுக்கிட்டது. அதைப் பார்த்ததும் யானைக்கு எகத்தாளம் தாங்கவில்லை. அடச்சீய்! நீயும் உன் உடம்பும்... சொரசொரன்னு செங்கல்தூளை தூவிவிட்ட மாதிரி ஒரு உடம்பு. கண்ணுல இருக்குற முழியப் பாரு! கண்ண விட்டு வெளியில வந்து நிக்கிது.
குரலோ... அதற்குமேல், ஆஹா! கேட்டாலே மயக்கம்தான்! இப்படிப்பட்ட நீ, என் பாதையில குறுக்காக வரலாமா? என்னைப் பாரு! எவ்வளோ பெரிய்...ய உருவம்; அழகான இரண்டு தந்தம்; தூண் மாதிரி காலுங்க; பலமான, நீளமான, அழகான துதிக்கை, உள்ள அடங்கி இருக்கற சின்னஞ்சிறிய கண்ணுங்க; குரலோ, காடு முழுவதும் எதிரொலிக்கும்; அப்படிப்பட்ட நான் என் அழகு வடிவத்தப் பாக்கலாம்னு குளத்துக்குப் போய்க்கிட்டு இருக்கேன். இந்த நேரத்துல, அபசகுனம் புடிச்சா மாதிரி குறுக்கவரியே சொறித் தவள! ஓரமாகப் போயிடு! என்று இழிவாகப் பேசிக் கேலி செய்து அவமானப்படுத்தியது. தவளை என்னவெல்லாமோ சொல்லிப் பார்த்தது. யானை கேட்பதாக இல்லை; சொன்னதையே மறுபடியும் சொல்லித் தவளையை விரட்டியது. தவளை அங்கிருந்து தாவி, குளக்கரையில் போய் நின்று கொண்டது. அப்போது தவளை யானையிடம், யானையே! நீ என்னை எவ்வளவு இழிவாகப் பேசினாய்! நீ உன் வடிவத்தைப் பார்ப்பதற்காக இந்தக் குளத்துக்கு வந்தாய் அல்லவா? தண்ணீரில் தெரியும் உன் பிரதி பிம்பத்தை - நிழலை நீ பார்க்க முடியாதபடி செய்து விடுகிறேன் பார்! என்று சொல்லியபடி, பளிச் சென்று குளத்தில் குதித்தது; அங்கும் இங்குமாக நீந்தியது.
அதன் காரணமாகக் குளத்து நீர் கலங்கியது. கலங்கிய நீரில் எப்படி நம் உருவத்தைப் பார்க்க முடியும்? கண்ணாடி ஆடிக் கொண்டேயிருந்தால், நம் உருவத்தை அதில் பார்க்க முடியாது அல்லவா? அதுபோல, யானையால் தன் உருவத்தைப் பார்க்க முடியவில்லை. அது வருத்தத்துடன் திரும்பியது. தவளையைப் பார்க்கும்போது, யானை எல்லா விதத்திலும் உயர்ந்ததுதான். இருந்தும் என்ன செய்ய? கீழோர் ஆயினும் தாழ உரை என்பதை மறந்து போனதால், யானையின் விருப்பம் நிறைவேறவில்லை. யாரையும், இழிவாக பேசக்கூடாது. அமைதியாக ஒதுங்கிப் போய், நாம் நம் வேலையைக் கவனித்தால் யாருக்கும் எந்த பிரச்சனையும் இல்லை. ஒரு நிகழ்ச்சி நடக்கிறதென்றால், பத்து பேர் கூடுவார்கள். நிகழ்ச்சிக்கு சம்பந்தப்பட்டவர்கள் சுறுசுறுப்பாகத் தங்கள் வேளைகளைக் கவனித்துக் கொண்டிருப்பார்கள். தொடர்பே இல்லாமல், கும்பலில் யாராவது ஒருவர் ஒரு பிரச்னையைக் கிளப்பி, அதை ஊதிப் பெரிதாக்கி, நிலைமையையே தலைகீழாக ஆக்கி விடுவார்கள். அப்போதும், நாம் நம் நிலைமையை அமைதியாக எடுத்துச் சொன்னால், நமக்காக மற்றவர்கள் வாதாடி செயலாற்றுவார்கள். பிரச்னை தீர்ந்து போகும்.