ஸ்ரீ ஜெய தேவர் ஒரு கிருஷ்ண பக்தர். அவர் இயற்றியது தான் அஷ்டபதி. இது இருபத்து நான்கு பாடல்களைக் கொண்ட ஒரு தொகுப்பு. இருபத்து நான்கு என்ற எண்யோக சாஸ்திரத்தை அடிப்படையாகக் கொண்டது. ராதை, ஸ்ரீ கிருஷ்ணரைப் பிரிந்த பின், தோழி தேடி அலைந்து இருவரையும் சேர்க்கிறாள் என்று வர்ணிக்கப்படுகிறது. ஆனால் இதன் உள்ளார்த்தமே வேறு. ராதை என்பது ஜீவாத்மா, ஸ்ரீ கிருஷ்ணர் பரமாத்மா. தோழி ஆசார்யரைக் குறிக்கும். குருவின் (ஆசார்யர்) உதவி இல்லாமல் ஜீவாத்மா, பரமாத்மாவை அடைவது கடினம். ஒவ்வொரு அஷ்டபதியிலும் ஸ்ரீ ஜெய தேவ என்னும் முத்திரை இருக்கும். ஒரே ஒரு அஷ்டபதியில் மாத்திரம், பத்மாவதீ வல்லப என்று முடிந்திருக்கும். இதற்கான காரணம் மெய் சிலிர்க்கும் சம்பவம் ஆகும். அஷ்டபதி எழுதி வருகையில், ஒரு அஷ்டபதியில் கிருஷ்ணரின் கால்மேல் ராதை தன் காலைப் போட்டுக் கொள்வதாக ஜெயதேவரையும் அறியாமல் வரிகள் வந்தன. இப்படி தவறு செய்துவிட்டோமே என்ற பயத்தில் அவரால் அந்தப் பாடலை முடிக்க இயலவில்லை. சரி நாம் குளித்துவிட்டு வந்த பின் பார்க்கலாம், என்று எழுது கோலை அப்படியே வைத்து விட்டு, தலையில் எண்ணெய் தடவியவாறே அருகில் இருக்கும் நதிக்கரைக்குக் குளிக்கச் சென்றார்.
சில வினாடிகளிலேயே, அவர் குளிக்காமல் திரும்பி வருவதை அவர் மனைவி பத்மாவதி கண்டார். அவர் இதை முடித்துவிட்டே போகலாம் என வந்தேன் எனக் கூறி, எழுது கோலை எடுத்து ஏதோ குறிப்பு எழுதிவிட்டு, வெளியே சென்றார். பத்மாவதிக்குக் கிடைத்த பாக்யத்தைச் சொல்லமுடியாது. பின்னாலேயே குளித்து முடிந்த கையுடன் ஜெயதேவர் வந்தார். அறைக்குள் சென்று பார்த்தவர் திகைத்தார். அவர் பயத்துடன் எழுதவிட்ட வரிகளுக்கு இடையில் இப்படியே இருக்கட்டும் என்ற குறிப்பு இருந்தது. அவர் பத்மாவதீ என்று கூவினார். ஓடி வந்த பத்மாவதியிடம் யார் இப்படி எழுதினார்கள்? என்று வினவ, நீங்கள் தானே வந்தீர்கள் என்று நடந்ததைக் கூறினாள். ஜெயதேவர் மனதில் ஆனந்தம். பாட்டை எழுதி, அவர் பெயரை முத்திரையாக வைக்காமல், பத்மாவதீ வல்லபம் என முடித்தார். ஏனென்றால் தெய்வத்தையே காணும் பாக்கியத்தைப் பெற்றாள் அல்லவா பத்மாவதி! கடைசி அஷ்டபதி கல்யாண அஷ்டபதி, ராதா கல்யாணம் செய்து முடிப்பார்கள், ஒரு குத்துவிளக்கை ராதை போலவும் மற்றொன்றை கிருஷ்ணன் போலவும் அலங்கரித்து ஆசார்யனின் ஆசிகளைக் காட்டுவார்கள். ஜீவாத்மா பரமாத்மாவுடன் சேர்வதைக் காட்ட வருவதுதான் கல்யாண அஷ்டபதி.