ஒரு காட்டில் வேடன் ஒருவன் பச்சைக்கிளிகளைப் பிடிக்கும் நோக்கத்துடன் ஒரு மரத்தடியில் வலை விரித்து அதில் தானியங்களைத் தூவினான். அவன் எதிர்பார்த்தப்படியே கிளிகள் பறந்து வந்து வலையில் சிக்கின. வேடன் சிக்கிய பறவைகளைப் பிடிக்கச் சென்றான். அப்போது முனிவர் ஒருவர் வந்தார். வலையில் சிக்கியிருந்த கிளிகளைப் பார்த்ததும், அவர் கருணையுடன் வேடனே! இவற்றைக் கொல்லாதே! என்று கேட்டுக் கொண்டார். வேடன், சுவாமி! இன்று எனக்கு இக்கிளிகளே உணவு இவற்றுக்குப் பதிலாக வேறு ஏதாவது தந்தால், இவற்றை விட்டுவிடுகிறேன்! என்றான். முனிவர், என்னிடம் சிறிது உணவு உள்ளது. அதை நான் உனக்குத் தருகிறேன். இந்தக் கிளிகளை விட்டுவிடு! என்றார். உணவைப் பெற்றுக் கொண்ட வேடன் கிளிகளை விடுவிக்கச் சென்றான். அப்போது முனிவர், கிளிகளே! இவன் வேடன். வேடன் வந்து வலை வரிப்பான். தானியங்களைத் தூவுவான். நீங்கள் பறந்து வந்து, அவனது வலையில் சிக்காதீர்கள்! என்றார். இப்படிக் கூறிவிட்டு முனிவர் சென்றார். வேடனும் கிளிகளை விடுவித்துவிட்டுச் சென்றான். ஒரு வாரம் கடந்தது. வேடன் மீண்டும் கிளிகளைப் பிடிக்கும் நோக்கத்துடன். வலையுடன் அதே மரத்தின் அருகில் வந்தான். வேடனைப் பார்த்ததும் எல்லாக் கிளிகளும் ஒன்று சேர்ந்து, கிளிகளே! இவன் வேடன். வேடன் வந்து வலை விரிப்பான். தானியங்களைத் தூவுவான். நீங்கள் பறந்து வந்து அவனது வலையில் சிக்காதீர்கள்! என்று கூறின.
வேடன் கிளிகள் கூறியதைக் கேட்டதும், இந்தக் கிளிகள் முன்பு நடந்ததை இன்னும் மறக்கவில்லை! இங்கு நான் வலை விரித்தாலும், இவை என் வலையில் சிக்காது! எனவே இங்கு வலை விரிப்பதால் பயனில்லை! என எண்ணி வேறு இடம் தேடிச் சென்றான். ஒரு மாதம் கடந்தது. மீண்டும் கிளிகள் இருந்த அதே மரத்தின் அருகில் வேடன் வந்தான். இப்போதும் கிளிகள் வேடனை நோக்கி, கிளிகளே! இவன் வேடன், வேடன் வந்து வலை விரிப்பான், தானியங்களைத் தூவுவான். நீங்கள் பறந்து வந்து அவனது வலையில் சிக்காதீர்கள்! என்று கூறின. வேடன் முன்பு நடந்ததை இந்தக் கிளிகள் இன்னும் நினைவில் வைத்திருக்கின்றவே! என வியந்து வேறு இடம் சென்றான்.
சுமார் ஆறு மாதங்கள் கழிந்தன. வேடன் மீண்டும் கிளிகள் இருந்த அதே மரத்தடியில் வலை விரிக்க வந்தான் இப்போதும் கிளிகள் அவனைப் பார்த்ததும். ஒன்று சேர்ந்து, கிளிகளே! இவன் வேடன். வேடன் வந்து வலை விரிப்பான்..... என முன்பு கூறியதையே கூறின. வேடன், என்ன ஆச்சரியம்! இன்னும் இவை என்னை நினைவில் வைத்துள்ளன! என நினைத்தான். என்றாலும் அவன் இன்று எனக்கு வேட்டையாடுவதற்கு எந்த மிருகமும் பறவையும் கிடைக்கவில்லை. சரி! இந்தக் கிளிகள் சிக்காவிட்டாலும் வேறு ஏதேனும் பறவைகள் என் வலையில் சிக்கலாம்! என்று நினைத்து வலை விரித்து அதில் தானியங்களைத் தூவினான். இப்படி வேடன் செய்ததை அங்கிருந்த கிளிகள் பார்த்துக் கொண்டிருந்தன. வேடன் தானியம் தூவியதும் கிளிகளெல்லாம் ஒன்றாக, கிளிகளே! இவன் வேடன், வேடன் வந்து வலை விரிப்பான், தானியங்களைத் தூவுவான். நீங்கள் பறந்து வந்து, அவனது வலையில் சிக்காதீர்கள்! என்று கூறியபடியே பறந்து வந்து, வேடனின் வலையில் சிக்கிக்கொண்டன! அப்போதுதான் வேடனுக்கு, இவை சொன்னதைச் சொல்லும் கிளிகள்! முனிவர் கூறியதை அப்படியே கூறுகின்றன. அவர் கூறியதன் அர்த்தம் இக்கிளிகளுக்குப் புரியவில்லை! என்பது புரிந்தது. இதுபோன்று தான் மக்களுள் பலரும் நல்ல விஷயங்களை நிறைய கேட்கவும், படிக்கவும் செய்கிறார்கள். ஆனால் அவர்கள் அவற்றைத் தங்கள் வாழ்க்கையில் பின்பற்றிப் பயனடைவதில்லை.