ஒருநாட்டின் மன்னனும் பணியாளனும் அடிக்கடி வேட்டைக்குச் செல்வார்கள். ஒரு முறை வேட்டைக்குச் சென்ற போது, நடுக்காட்டில் ஓர் அதிசய மரத்தைப் பார்த்தார்கள். மிக உயரமாக, இலைகள் கூட இல்லாமல் இருந்த அந்த மரத்தின் உச்சியில் ஒரே ஒரு பழம் மட்டுமே இருந்தது. மன்னர், தன் பணியாளனிடம் அந்தப் பழத்தைப் பறித்து வர ஆணையிட்டார். பத்து நிமிடத்தில் பழம் தரைக்கு வந்தது. மன்னர், தன்னிடமிருந்த கத்தியால், அந்தக் கனியைத் துண்டமிட்டு, முதல் துண்டை, அதைக் கஷ்டப்பட்டு பறித்து வந்த ஊழியனுக்குக் கொடுத்தார். ருசி என்றால் அப்படி ஒரு ருசி. தேவலோக ருசி! மன்னர், மீதி பழம் அனைத்தையும் ரசித்து உண்டார். மறுநாளும் அதிசய மரத்தின் உச்சியில் அதேபோல் சிவந்த கனி. அதே சுவை. அதே மனம் வாவ்! பல நாட்கள் இது போலவே நிகழ்ந்தது. ஒரு துண்டம் பறிப்பவனுக்கு. மற்ற மூன்றும் மன்னனுக்கு. அடுத்த நாளும் அங்கே சென்றார்கள். அதே போல் பழம். முதல் துண்டு பணியாளனுக்குக் கிடைத்தது. அதை உடனே தின்று முடித்த அவன், மன்னா, எனக்கு இன்னொரு துண்டு தாருங்களேன் என்றான். ராஜாவுக்கு வியப்பு. இது என்னடா என்றும் இல்லாத திருநாளாக இருக்கிறதே என்று, இன்னொரு துண்டைப் பணியாளனுக்குத் தந்தார். அதையும் தின்ற வேலைக்காரன், மன்னா, இன்னொரு துண்டும் கொடுங்களேன். மன்னன் அசரவில்லை. அடுத்ததையும் தந்தார். மூன்றாவது துண்டையும் தின்ற பணியாளன், மன்னா, அந்தக் கடைசித் துண்டையும் எனக்கே தாருங்களேன் என்றான்.
மன்னனுக்கு வியப்பு தாங்கவில்லை. அதெல்லாம் முடியாது. முக்கால் பழத்தை நீயே சாப்பிட்டுவிட்டாய். வழக்கத்தை விட இன்றைக்கு அதிகச் சுவையுடன் இருக்கிறது போலும்! என்றபடியே, தன் கையில் இருந்த துண்டை வாயில் வைத்தார் மன்னன். உவ்வேக்! ஒரே கசப்பு! விஷம் போல் இருந்தது அது.. தன் வாழ்நாளில் அத்தனை மோசமான பழத்தை மன்னன் சுவைத்ததே இல்லை. உடனே அதைத் துப்பிவிட்டு, ஏண்டா, நீ என்ன பைத்தியமா? விஷத்தைப் போல் கசக்கிறதே.. இதை ஏன் சொல்லாமல் மறைத்தாய்? நீயே உண்டாய்? என்றார், மன்னன். பணியாளன் பதில் பகர்ந்தான். மன்னா, இத்தனை காலமாக உங்கள் கரங்களால் சுவை மிக்க கனியையே உண்டு வந்தேன். இப்போது ஒரு கசப்பான கனியை உண்பதில் குறைப்பட்டுக் கொள்ளலாமா? அரசன் நெகிழ்ந்து போனார். கசப்பான கனியை மன்னனான தான் உண்ணக்கூடாது என்று கேட்டுப் பெற்றுத் தின்ற அந்த பணியாளனை அப்படியே கட்டிக்கொண்டு பரவசப்பட்டார். கடவுள் நமக்கு எத்தனையோ சந்தோஷங்களைக் கொடுத்திருக்கிறார். நமக்கு துன்பம் நிகழ்ந்தால் மட்டும் உடனே கடவுளை இகழத் துவங்கி விடுகிறோம். கடவுள் எப்போதும் சந்தோஷத்தை மட்டுமே தருவார். நமக்கு ஒரு துன்பம் ஏற்படுகிறது என்றால் அதற்கு முழுபொறுப்பு நாம் தான். நமக்கு ஏற்படும் துன்பத்திலிருந்து கசப்பு விடுபடவேண்டும் என இறைவனை வழிபட்டு அதற்கான வழிகண்டு துன்பத்திலிருந்து நிவாரணம் பெற்று வாழ்க்கையில் விளையாட வேண்டும்.