|
ஞானி ஒருவரிடம் வந்த மல்யுத்த வீரன் ஒருவன், சுவாமி! என் உடல் வலிமை, உங்கள் அறிவு வலிமை இவை இரண்டில் எது பெரியது என அறிய விரும்புகிறேன் எனக் கூறினான். என் அறிவு வலிமை என்றில்லை. யாருடைய அறிவின் வலிமையும் நிச்சயம் எந்த உடல் வலிமையையும்விட பெரியதுதான்! என்றார் ஞானி ஆனால் அதை அந்த வீரன் ஏற்கவில்லை. எனவே ஒரு போட்டிக்கு ஏற்பாடானது. குரு சொன்னார், வீரனே! நான் சொல்லும் ஒரு பொருளை அந்த சுவருக்கு அப்பால் போய் விழும்படி வீச முடிந்தால் உன் உடல் வலிமையை நான் ஒப்புக் கொள்கிறேன். உன்னால் முடியாமல் போய் நான் அதைச் செய்தால் அறிவே வலிமை என ஒப்புக்கொள்வாயா? மெலிந்த தேகமுடைய குருவால் வீசி எறிய முடியுமானால்... நிச்சயம் தன்னாலும் அது முடியும் என்று அகம்பாவத்துடன் போட்டிக்குச் சம்மதித்தான், வீரன். உடனே ஞானி ஒரு மெல்லிய பட்டுத் துணியை எடுத்து அவனிடம் கொடுத்தார். பாறாங்கல் போன்ற கனமான பொருளைத் தரப்போகிறார் என எதிர்பார்த்தவனுக்கு அந்த சிறிய பொருள் ஏமாற்றத்தைத் தந்தது. அலட்சியமாக அதை எடுத்து சுவருக்கு அப்பால் வீசினான். ஆனால் எடைக் குறைவினால் காற்றில் மிதந்து இந்தப் பக்கமே விழுந்ததே தவிர, சுவருக்கு அந்தப் பக்கம் போகவில்லை தன் தோல்வியை ஒப்புக்கொண்டான். அடுத்ததாக குரு முயற்சிக்க வேண்டும். அவர் மட்டும் எப்படி பட்டுத் துணியை சுவருக்கு அந்தப் பக்கம் வீசி எறியப் போகிறார் எனப் பார்க்க எல்லோரும் ஆவலாக இருந்தனர். குரு அந்தப் பட்டுத் துணியை எடுத்தார். அதற்குள் ஒரு கல்லை வைத்துக் கட்டினார். அதை அப்படியே வீசி எறிய, அது மறுபக்கம் போய் விழுந்தது. வீரன் ஒப்புக் கொண்டான், அறிவின் வலிமையே சிறந்ததென! |
|
|
|