|
குரு ஒருவனிடம் வந்த சீடன், குருவே! பக்தி என்பதும் ஓர் உணர்வு. காதல் என்பதும் ஓர் உணர்வு. இரண்டுமே சந்தோஷத்தைத் தருவதுதான்! அப்படியிருக்க பக்தியை உயர்வாக மதிக்கும் சமுதாயம் ஏன் காதலை அப்படி நினைப்பதில்லை? என்றான். குரு பதில் சொல்வதற்குள் வாசலில் ஏதோ சப்தம் கேட்கவே, இருவரும் ஜன்னல் வழியே பார்த்தார்கள். பக்கத்தில் இருந்த கோயிலின் உற்சவமூர்த்தி வீதியுலா வந்து கொண்டிருந்தார். தெருவில் நின்ற பக்தர்கள் சுவாமிக்கு அர்ச்சனை செய்தும், கற்பூர ஆரத்தி காட்டியும் வணங்கிக் கொண்டிருந்தார்கள். சற்று நேரம் கழித்து குருநாதர் ஒரு சிலையை சீடனிடம் தந்து, அதைத் தலையில் வைத்துக் கொண்டு தெருவில் சிறிது தூரம் போய் வரச் சொன்னார். சீடனும் அவ்வாறு செய்துவிட்டுத் திரும்பினான். அவனிடம் குரு கேட்டார். வழியில் இந்த சிலையைப் பார்த்தவர்கள் என்ன சொன்னார்கள்? சிலை மிகவும் அழகாக உள்ளது. இதைப் பார்த்தாலே சந்தோஷமாக உள்ளது எனக் கூறினார்கள் என்றான். அப்படியா! சரி இந்தச் சிலைக்கு ஆரத்தி காட்டினார்களா? கும்பிட்டார்களா? இல்லை குருவே! சிறிது நேரத்திற்கு முன் உற்சவமூர்த்தி வீதி உலாவந்த போது அனைவரும் வணங்கினார்கள். அதே போன்ற சிலையைத்தானே நீ கொண்டுபோனாய். இரண்டையும் பார்த்து சந்தோஷப்பட்டவர்கள் உன் சிலையைப் பார்த்து ஏன் வணங்கவில்லை? எனக் கேட்டார் குரு. சீடனின் சந்தேகம் தீர்ந்தது. |
|
|
|