திருச்சியில் வசித்த ஒரு பெண்மணி, தான் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தில் தன் மகளின் திருமணத்திற்காக பத்து பவுன் தங்கச்செயின் வாங்கி வீட்டுக்கு வந்து கொண்டிருந்தாள். இதை நோட்டமிட்ட ஒருவன், அவள் பஸ் ஏறும் போது, நகையை பறித்துக் கொண்டு ஓடிவிட்டான். அவள் அலறித்துடித்தது தான் மிச்சம். அவள் நேராக சமயபுரம் சென்றாள். மாரியம்மா! சமயபுரத்தாளே! சமயத்தில் உதவும் கருணைக்கடலே! என் நிலையைப் பார்த்தாயா! நீ குடிகொண்டிருக்கும் இந்த ஊரில் இப்படி நடக்கலாமா? என்று அழுதாள், அரற்றினாள். என் நகையைத் திருடியவனுக்கு தீராத நோய் வரட்டும். அதை அணிந்த அவன் வீட்டுப் பெண்ணின் கழுத்து வீங்கட்டும், என்று வயிற்றெரிச்சலில் சாபமும் கொடுத்தாள். பல வெள்ளிக்கிழமைகள் கோயிலுக்கு வந்து அம்பாளை வேண்டினாள்.
ஒரு ஆண்டும் ஓடிவிட்டது. மகளின் திருமணமும் நின்று போய் விட்டது. ஒரு வெள்ளிக்கிழமை அவள் கோயிலுக்குச் சென்ற போது, ஒரு பெண்ணுக்கு கழுத்து வீங்கியும், அவள் கணவனுக்கு உடம்பெல்லாம் புண்ணுமாக வந்தனர். எவ்வளவோ வைத்தியம் பார்த்தும், தீராதது பற்றி அம்பாளிடம் புலம்பினர். அதே சமயத்தில், அங்கு வந்த பெண்ணும் தன் நகை காணாமல் போனது பற்றி புலம்பவே, அவர்கள் திடுக்கிட்டனர். அந்தப் பெண்ணின் நகையைத் தான், அந்த திருடன் பறித்திருந்தான். திருடியே பணக்காரனாகி விட்ட அவன், உண்மையை உணர்ந்து அந்தப் பெண்ணின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டான். தவறாகச் சேர்த்த பொருளையெல்லாம் கோயிலுக்கு செலுத்தி விடுவதாக வாக்கு கொடுத்தான். அந்தப் பெண்ணின் மகளைத் தன் மகனுக்கே திருமணம் செய்து வைப்பதாக அவன் கூறினான். தன் மகன் பெரிய தொழிற்சாலை அதிபர் என்றும், நியாயமாகத் தொழில் செய்பவன் என்றும் எடுத்துரைத்தான்.அந்தப் பெண்ணின் மகள், தொழிலதிபருக்கு வாழ்க்கைப்பட்டாள். தன் பக்தையின் நலனுக்காக சமயபுரத்தாள் நிகழ்த்திய அற்புதம் இது. நவராத்திரியில் அந்தக் கருணைக்கடலை வணங்கி வருவோமே!