ஆதிசங்கரர் காலடியில் தன் தாயுடன் வசித்து வந்தார். துறவறம் ஏற்ற சமயத்தில் கூட அம்மாவின் சொல்லைத் தட்டாமல் கேட்டவர் அவர். அவரது தாய் ஆர்யாம்பாள், வீட்டிலிருந்து சற்று தூரத்திலுள்ள நதிக்கு தினமும் நீராடச்செல்வார். ஒருநாள் கடும் வெயிலில் மயங்கி விழுந்து விட்டார். ஆதிசங்கரர், அவருக்கு மயக்கம் தெளிவித்து எழுப்பி வந்தார். உடனே, அந்த நதித்தாயிடம் சென்று மனமுருக வேண்டினார். கங்கைக்கு நிகரான தேவியே! நீ எங்கள் வீட்டருகே வர வேண்டும். என் அம்மா தொலைதூரம் நடந்து வந்து, உன்னில் நீராட சிரமப்படுகிறாள். வருவாயா? என உருகிக் கேட்டார். என்ன ஆச்சரியம்! அந்த நதி தன் திசையை அவர் வீட்டுப்பக்கமாகத் திருப்பி விட்டது. தாய் வெயிலில் நீண்ட தூரம் நடந்து சிரமப்படக்கூடாது என்று எண்ணியது அந்த திருமகனாரின் உள்ளம். அவருக்கு சிறுவயதிலேயே துறவறம் பூண வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டு விட்டது. அதற்கேற்றாற் போல், அவருக்கு ஆயுள் குறைவு என்று வேறு ஒரு மகான், அவரது தாயாரிடம் சொல்லி விட்டார். தன் மகனுக்கு அப்படியொரு நிலை வரக்கூடாது என்று அவர் எண்ணினார்.
மகனுக்கு விரைவில் திருமணம் செய்து வைக்க ஆசைப்பட்டார். துறவற எண்ணத்தில் இருந்த சங்கரரோ, அம்மா! இல்லற வாழ்வு வேண்டாம் தாயே! என்னை துறவுபூண அனுமதியுங்கள், என்றார். அம்மாவின் மனம் ஒப்பவில்லை. ஒருநாள், அவர் தன் தாயுடன் நதியில் நீராடச் சென்றார். அப்போது, சங்கரருக்கு வயது 8. ஒரு முதலை அவரது காலைக் கவ்வியது. மகனைக் காப்பாற்றியாக வேண்டுமே! அம்மா அலறிக் கொண்டிருந்தார். இதுதான் சமயமென, சங்கரர் தன் தாயிடம்,அம்மா! தாங்கள் என்னைத் துறவு பூண அனுமதித்தால், இந்த முதலை என் காலை விட்டு விடும், என்றார். எந்தத்தாய்க்கு தான் தன் மகன் உயிர்வாழ ஆசையிருக்காது! தாயாரும் சம்மதித்தார். தாயின் மனம் கோணாமல் துறவுக்கான சம்மதம் பெற்றுவிட்டார் சங்கரர். அவர் துறவறம் பூண்டு சிருங்கேரி கிளம்பிய போது, மகனே! எனக்கு நீ ஒரே மகன். என் இறுதிக்காலத்தில், கிரியைகள் செய்ய வந்து விட வேண்டும், என்றார். ஒருவர் துறவியான பிறகு, தாயாருக்குரிய இறுதிக்கிரியைகள் செய்ய விதிமுறைகள் அனுமதிக்காது. ஆனால், சங்கரர் ஒப்புக்கொண்டார். அவரைப் இதுபோன்ற விதிமுறைகள் கட்டுப்படுத்தாது. காரணம், அவர் எல்லாவற்றை யும் துறந்தவர். பற்றின்றி வாழ்பவர். செல்வத்திற்கு அதிபதியான லட்சுமியையே பூமிக்கு வரவழைத்தவர். இறைதரிசனம் கண்டவர்களுக்கு இந்த விதி பொருந்தாது. அவர், பாதுகா ஸித்தி என்ற வித்தையை அறிந்திருந்தார். இதன்மூலம், ஒருவர் நினைத்த இடத்தை விரைவில் அடைய முடியும். தன் அன்னையின் இறுதிக்காலம் நெருங்கி விட்டது என்பதை அறிந்த அவர், அந்த ஸித்தியின் மூலம் காலடியை அடைந்தார். துறவிக்கு இறுதிக்கிரியை செய்ய அனுமதியில்லை என உறவினர்கள் எதிர்த்தனர். அவர்களது ஒத்துழைப்பு இல்லாமல், தானே காய்ந்த சுள்ளிகளைப் பொறுக்கி, அம்மாவின் உடலைத் தகனம் செய்தார். அம்மாவுக்காகவே வாழ்ந்த ஆதிசங்கரரைப் போல, நம் அன்பு பிள்ளைகளும் பெற்றவர்களை மதித்து வாழ வேண்டும்.