|
ஒரு ஏழை விவசாயி தனது குடும்பத்துக்குப் போக, மீதி காய்கறிகளை தானமாக வழங்கி வந்தான். இது அவனது மனைவிக்குப் பிடிக்கவில்லை. மீதி காய்கறியை விற்றால், பணம் கிடைக்குமே! கஷ்டநிலை தீருமே! என்றாள். அடியே! தானம் செய்வது நமது சாஸ்திரம் வகுத்த விதி. எல்லாவற்றையும் நாமே தின்று விட்டால், எப்படி மோட்சத்தை அடைவதாம்! இந்தப் பிறவிக் கடலுக்குள்ளே தானே கிடந்து உழல வேண்டும், என்று பதில் சொன்னான். அவளுக்கு புரிந்தும் புரியாத மாதிரி இருந்தது. அதற்கு மேல், அவளால் அவனைக் கட்டுப்படுத்த முடியவில்லை. அடுத்த பிறவியில், அந்த விவசாயி, தன் தர்மத்தின் பலனாய் அரசனாகப் பிறந்தான். அவனுக்கு முற்பிறவியில் வாய்த்த மனைவியே அமைந்தாள். ஒருமுறை, அவளுக்கு முன்ஜென்ம நினைவு வந்தது. அந்த அடிப்படையில்,நீங்கள் போன பிறவியில் காய்கறி தானம் செய்ததால், அரசனாகப் பிறந்தீர்கள்! இந்தப்பிறவியிலும் அதையே செய்யலாமே! என்றாள். அவள் சொன்னதற்கு காரணம் பேராசை. அடுத்த பிறவியில், இதை விட வசதியாக வாழலாம் என்று நினைத்தாள். அரசனும் அப்படியே செய்தான். ஆனால், அரசனும், அரசியும் இறந்து மீண்டும் ஏழையாகவே பிறந்தார்கள். ஒரு துறவியிடம் தங்கள் நிலை பற்றி சொன்னார்கள். மகனே! ஏழையாய் இருந்த போது காய்கறி தானம் செய்தது சரியே! அரசனாய் இருந்த போது, உன் வசதிக்கேற்ப தங்கமும், வைரமுமாய் தானம் செய்திருக்கலாமே! தனக்குப் போக எஞ்சியது எதுவாயினும் தானம் செய்பவனே ஒவ்வொரு பிறவியிலும் உயர்கதியை அடைய முடியும், என்றார். |
|
|
|