|
குரு ஒருவர் சீடர்களுக்கு உபதேசம் செய்து கொண்டிருந்த போது ஒரு கதை சொன்னார். துறவிகள் எமதூதர்களால் சொர்க்கத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுக் கொண்டிருந்தார்கள் அப்பொழுது கழுகு ஒன்று வழியில் பாம்பைக் கவ்வியவாறு செல்வதைப் பார்த்தார்கள். முதல் துறவி, கழுகே! இப்படி பாம்பைத் துன்புறுத்துவது பாவம். அதை விட்டு விடு! என அதனிடம் கூறினார். உடனே எம தூதர்கள் அவரைப் பிடித்துத் தள்ளிவிட அவர் பூலோகத்தில் வந்து விழுந்தார். அவருக்கு நேர்ந்த கதியைப் பார்த்துத் தன்னை சுதாரித்துக்கொண்ட இரண்டாம் துறவி , கழுகே! நீ நல்ல காரியம் செய்தாய். இப்படிப்பட்ட விஷப்பாம்புகள் உலகில் வாழ்வதால் பிற உயிர்களுக்கு கஷ்டம்தான் . எனவே அவற்றை அழிப்பதுதான் சிறந்தது! என்றார் அவரும் பூலோகத்திற்குத் தள்ளப்பட்டார். ஆனால் மூன்றாம் துறவி எதுவும் சொல்லாமல் நடந்ததையெல்லாம் அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்ததால் தூதர்களுடன் சொர்க்கம் போய்ச் சேர்ந்தார். கதையை கூறிமுடித்த குரு, சீடர்களிடம்,முதல் இரண்டு துறவிகள் பூலோகத்திற்குத் தள்ளப்பட்டு மூன்றாம் துறவி சொர்க்கம் சென்ற காரணம் என்ன?என கேள்வி கேட்க, சீடர்களுக்கு விடை தெரியாததால் குருவே பதில் தந்தார். சொர்க்கம் செல்பவர்கள் இறைவனிடம் முழு நம்பிக்கை வைத்தவர்களாக இருக்க வேண்டும். இறைவன் படைப்பில் உயிர்களின் செயல்பாட்டில் நல்லது, நல்லதல்ல என தீர்மானிக்கும் தகுதி நமக்குக் கிடையாது. நடக்கும் ஒவ்வொரு செயலுக்கும் காரண காரியம் இறைவன் தீர்மானித்தது. அதை நாம் விமர்சிப்பதும் கூடாது.
|
|
|
|