|
ஞானி ஒருவரைத் தேடிவந்தவன், சுவாமி! உலகப்பற்றைத் துறந்து உங்களிடம் சீடனாகச் சேர விரும்புகிறேன் . என்றாலும் ஆசைகள் என்னை விடமாட்டேன் என்கிறது. என்ன செய்ய? எனக் கேட்டான்.அப்படியா? சரி, போய் அந்த மரக்கிளையில் கொஞ்ச நேரம் தொங்கிவிட்டு வா! என்றார், துறவி. எதற்கென்று தெரியாவிட்டாலும், ஞானி சொல்கிறார் என்பதற்காகச் சென்று மரக்கிளையைப் பற்றிக் கொண்டு தொங்கினான். இப்பொழுது சொல் ... மரக்கிளை உன்னைப் பிடித்துக் கொண்டிருக்கிறதா? நீ அதைப் பிடித்துக் கொண்டிருக்கிறாயா? நான்தான் அதைப் பற்றிக் கொண்டிருக்கிறேன்! அப்படியானால் நீ விரும்பினால் அதை எப்பொழுது வேண்டுமானாலும் விட்டு விடலாமே! குரு எதைப் பற்றிக் குறிப்பிடுகிறார் என அவனுக்குப் புரிந்தது.
கடவுளை அடைவதற்கு அவ்வப்போது தனிமையை நாடிச் சென்று தியானம் செய்ய வேண்டும் எனக் கூறுகிறார்களே , அப்படியானால் இல்லறத்தில் இருப்பவனால் பக்தி செய்ய முடியாதா ? குருவிடம் சந்தேகம் கேட்டான் சீடன். தயிரிலிருந்து வெண்ணெய் எடுக்க வேண்டுமானால் உறையிட்ட பாலை ஆடாமல் அசையாமல் தனியிடத்தில் வைக்கிறோம் அல்லவா? பாத்திரத்தை அசைத்துக் கொண்டே இருந்தால் தயிர் தோயாது. தயிர் நன்கு தோய்ந்தால் தான் அதைக் கடைய வெண்ணெய் திரண்டு வரும். இவ்வாறே தனிமையில் அமர்ந்து தியானம் செய்து வந்தால் மனம் ஒருமைப்பட்டு ஞானம் பிறக்கும். அந்த ஞானத்திலிருந்து பக்தி தோன்றும். இல்லறம் நீர் போன்றது; மனமோ பால் போன்றது. பாலாகிய மனதை இல்லறத்தில் கலந்தால் நீரோடு ஒன்றாகி நீர்த்து விடுகிறது. அதிலிருந்து வெண்ணெய் எடுக்க இயலாது. ஆனால் நீர் கலக்காத பாலை தயிராக்கினால் அதிலிருந்து வெண்ணெய் எடுக்கலாம். அந்த வெண்ணெயை ( இறை ஞானத்தை) இல்லறமாகிய நீரில் போட்டாலும் அது மிதக்குமே தவிர, கரைந்து போகாது! குரு விளக்கம் தர சீடன் தெளிவு பெற்றான். |
|
|
|