|
உத்ராயன புண்ணிய காலத்தின் முதல் மாதமான தை மாதத்தில் வரும் அமாவாசை மிகவும் சிறப்பு வாய்ந்தது. பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை திரிவேணி சங்கமத்தில் நடக்கும் கும்பமேளா விழாவில் தை அமாவாசை நீராடல் முக்கிய இடம்பெறுகிறது. வடக்கே புனித நீர் நிலைகள் பல இருந்தாலு<ம், தென்னகத்தில் தட்சிணகங்கை என்று போற்றப்படும் காவேரி நதிக்கரையில் முன்னோர்களுக்கான பூஜையை மேற்கொண்டால் குடும்பத்தில் சுப காரியங்கள் தங்கு தடையின்றி நடைபெறும் என்று சாஸ்திரம் கூறுகிறது. காவேரிக் கரையிலுள்ள திருத்தலங்களில் மிகவும் புகழ்பெற்றுத் திகழ்வது ஸ்ரீரங்கம் இங்கு பள்ளி கொண்டிருக்கும் ஸ்ரீரங்கநாதரின் அருட்பார்வை, தென்பகுதியில் அமைந்துள்ள அம்மா மண்டபம் படித்துறையை நோக்கி உள்ளதால் இந்தப் படித்துறை மிகவும் சிறப்புப் பெறுகிறது. முன்னோர்களுக்கான பூஜையை அரசமரத்தடியில் அமர்ந்து மேற்கொள்வதை சாஸ்திரங்கள் பலவாறு புகழ்கின்றன. அரசமரத்தில் மும்மூர்த்திகள் வாசம் செய்வதால், அரசமரம் மிகவும் போற்றப்படுகிறது.
இந்த அம்மா மண்டபப் படித்துறை வளாகத்தில் நான்கு அரச மரங்கள் பரந்து காட்சி தருகின்றன. இங்கு பிதுர் பூஜைக்கென்று தகுந்த இடம் உள்ளது. பிதுர் பூஜையின் ஒரு பகுதியாக, பசுவை அந்தணர் ஒருவருக்கு தானம் தருவது புனிதமாகச் சொல்லப்பட்டுள்ளது. அதேபோல் பசுவின் வாலைப் பிடித்துக்கொண்டு பூஜை செய்து, கோ ஜலத்தைப் பெறுவது புனிதத்திலும் புனிதமென்று வேத நூல்கள் கூறுகின்றன. மேலும், இந்த வளாகத்தில் காவேரித் தாயார் கோவில் கொண்டுள்ளாள். இக்கோவிலுக்குப் பின்புறமுள்ள வன்னி மரத்தடியில் பசுவின் வாலைப் பிடித்துக்கொண்டு பிதுர் வழிபாடு செய்வது அளப்பரிய புண்ணியத்தைத் தரும் அதனால், பிதுர்கள் (முன்னோர்கள்) மகிழ்ந்து ஆசீர்வதிப்பார்கள் என்று கருட புராணம் கூறுகிறது.
பிதுர் தர்ப்பணத்தின்போது அரசமரத்தடியில் எள்ளும் நீரும் அளிப்பதால், பசியுடன் இருக்கும் முன்னோர்களுக்கு அது ஒரு வருடத்திற்கான உணவாகிறது. ஸ்ரீரங்கம் திருத்தலத்திற்கு வரும் வடநாட்டினர், ராமேஸ்வரம் அக்னி கடற்கரையில் மேற்கொள்ளும் பிதுர் பூஜையைவிட, இங்கு பிண்டம் வைத்து பிதுர் பூஜை செய்வதையே விரும்புகிறார்கள். காரணம் ராமேஸ்வரம் கடற்கரையில் அரசமரம் இல்லை. இங்கு அரச மரங்கள் சூழ்ந்திருப்பதுடன், கஜராஜனான யானை தினமும் இங்கு வந்து பக்தர்கள் ஆசீர்வதிப்பதால், தெரிந்தோ தெரியாமலோ செய்த பாவங்கள் நீங்கி நல்வாழ்வு பெறலாம் என்னும் நம்பிக்கைதான்.
மறைந்த பெற்றோருக்கு ஒவ்வொரு அமாவாசையன்றும் பிதுர் தர்ப்பணம் செய்வது சிறப்பிக்கப்படுகிறது. இயலாத நிலையில் உத்ராயண புண்ணிய காலமான தை மாதம், தட்சிணாயன காலமான ஆடி மற்றும் புரட்டாசி அமாவாசைகளில் தர்ப்பணம் அளித்தல் வேண்டும் என்பர். புனித நீர் நிலைகளில் முன்னோர்களுக்குரிய வழிபாடு செய்யும்போது கறுப்பு எள் என்ற தானியம் அவசியம் இடம்பெற வேண்டும். பிண்டம் வைத்துப் பூஜிக்கப்படவேண்டும் என்பது விதியாகும். கறுப்பு எள் பூதப்பிசாசு மற்றும் தீயசக்திகளை விரட்டும். பிண்டம் வைப்பதால் மறைந்த முன்னோர்கள் அதில் உறைவதாக ஐதீகம்.
பிதுர் பூஜை மேற்கொள்ளும்போது சிலர் கோ பூஜையையும் மேற்கொள்வர். அப்போது, பசுவின் வாலைப் பிடித்துக்கொண்டு தர்ப்பணம் மற்றும் பூஜை செய்வர். இப்படிச் செய்வதால் ஆயிரம் மடங்கு பலன் கிட்டும். பித்ருக்கள், பித்ருலோகத்திலோ நரகத்திலோ இருந்தாலும் சொர்க்கம் செல்வர் என்பது ஐதீகம். ஆற்றங்கரையில் பிதுர் பூஜை மேற்கொள்ளும்போது, ஆற்றில் நீர் இல்லாவிட்டால் அங்குள்ள அரசமரத்தின் வேர்ப்பகுதியில் பிண்டங்கள் வைத்து, எள்ளும் தண்ணீரும் கலந்த நீரினை ஊற்றினால் அது பிதுர்களுக்கு உடனே சென்றுவிடுவதாக சாஸ்திரம் கூறுகிறது. அரசமரம் இல்லாதபோது, ஆற்று மணலில் சிறிது பள்ளம் பறித்த பிண்டங்களை அதில் புதைத்தாலும் அது மேலுலகம் செல்வதாகக் கூறப்படுகிறது. பிதுர் பூஜை செய்தாலு<ம் அன்னதானம் செய்வதும், பசுவுக்கு அகத்தில் கீரையை உணவாகக் கொடுப்பதும் போற்றப்படுகிறது. மேலும், அன்று தெய்வ வழிபாடுகளும் போற்றப்படுகின்றன.
அதற்காக அம்மா மண்டப வளாகத்தில் பல சந்நிதிகள் உள்ளன. மேலு<ம் தான தர்மங்கள் செய்வதற்கும், வஸ்திர தானம் செய்வதற்கும், பசுதானம், அன்னதானம் செய்வதற்கும் சகல வசதிகளும் உள்ளதால், தை அமாவாசை போன்ற நாட்களில் இந்த அம்மா மண்டபப் படித்துறை திருவிழாக் கூட்டம். போல் நிறைந்து காணப்படும். இத்தலம் ஸ்ரீரங்கநாதர் கோவிலிலிருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. வாகன வசதிகள் உள்ளன.
|
|
|
|