|
பதரு... பதரு! தமிழ் ஆசிரியர் எங்களைத் திட்டுவதற்காக அடிக்கடி பிரயோகம் செய்யும் வார்த்தை இது. எங்களை இழித்துரைக்கும் அல்லது இடித்துரைக்கும் வார்த்தை அது என்பது மட்டும் புரிந்தது. ஆனால், அதற்கான சரியான அர்த்தம் என்ன என்பது வெகுநாட்களாக எங்களுக்குத் தெரியாதிருந்தது. ஆசிரியரிடம் கேட்கவும் தயக்கம். ஒருநாள், பதர் எனும் பதத்துக்குப் பொருள் அறிந்தேயாகவேண்டும் என்கிற ஆசை பிறந்தது. தமிழ் ஞானநூல்கள் சிலவற்றைப் புரட்டியபோது, அதற்கான பொருள் கிடைத்ததுடன், மிக அருமையான நீதிகளும் நியதிகளும்கூடக் கிடைத்தன. நெல்லின் உள்ளே அரிசி இருந்தால், அதை நெல்மணி என்பார்கள். உள்ளே அரிசி இல்லாமல் வெறுமே உமியால் மூடப்பட்டிருக்கும் நெல்லைப் பதர் என்பார்கள். பதர், உணவுக்குப் பயன்படாது. ஆக, உதவாக்கரை என விளிக்கவே, பதர் எனும் பதத்தை ஆசிரியர் பயன்படுத்தியிருக்கிறார் என்பது புரிந்தது.
அது போகட்டும்! பதர் கற்றுத் தந்த பாடத்தைப் பார்க்கலாம். வெற்றிவேற்கை எனும் நூல், கல்லா ஒருவன் குலநலம் பேசுதல் நெல்லினுள் பிறந்த பதர் ஆகுமே என விளக்குகிறது. அதாவது, கல்வி அறிவு இல்லாதவன் எதற்கும் பயனற்றவன்; அவன், தன்னுடைய குலப்பெருமைகளைக் கற்றவர்களிடம் பேசுவதால், அவனுக்குப் பெருமை வந்து சேராது. இதை உணராமல், அவன் குலப்பெருமையைப் பேசிக்கொண்டிருந்தால், அவன் நெல்லினுள் பிறந்த பதராகவே கருதப்படுவானாம்!
பயனில்சொல் பாராட்டு வானை மகன் எனல் மக்கட் பதடி யெனல்
என்கிறார் வள்ளுவப் பெருந்தகை. பயனற்ற சொற்களை விரும்புகிறவனை மனிதன் என்றே கருதக்கூடாது; அவன் மக்களுக்குள் பதராகவே எண்ணப்படுவான் என்பது இந்தக் குறளின் கருத்து. எனக்குத் தெரிந்த ஆசாமி ஒருத்தர், தனக்குத் தெரிந்தது அரைகுறை என்றாலும், ஒன்றுமே தெரியாதவர்கள் மத்தியில் உரக்கப் பேசி, தன்னை சகலமும் தெரிந்த அதிமேதாவியாகக் காட்டிக்கொள்வதில் ஆர்வம் கொண்டவர். ஒருநாள், வீதி வழியே அவர் போய்க்கொண்டிருந்த போது சுவரில் ஒரு வாசகத்தைக் கண்டார். இதைப் படிப்பவன் முட்டாள்! என்று அதில் எழுதப்பட்டிருந்தது. உடனே இவருக்குக்கு கோபம் பொத்துக்கொண்டு வந்தது. தரையில் ஒரு கரித்துண்டை தேடிப்பிடித்து, ஆவேசத்துடன் அந்த வாசகத்தைத் திருத்தி, இப்படி எழுதினார்...
இதை எழுதியவன் முட்டாள்! வள்ளுவர் சொன்ன மக்கட் பதர் இவர் என்பதில் யாருக்கேனும் ஐயம் இருக்க முடியுமா?
|
|
|
|