|
பால்ஷிக தேசத்தில் பகுதான்யம் என்ற கிராமத்தில் வாழ்ந்தவர் பிரம்ம சர்மா. சகல வேத சாஸ்திரங்களும் கற்ற பண்டிதரான இவர், பணத்தைச் சேர்ப்பதிலேயே குறியாய் இருந்தவர். யார் வீட்டில் என்ன விசேஷமென்றாலும் சாப்பாட்டு நேரத்தில் அங்கு போய் விடுவார். இல்லத்திலும் நல்ல சமையல் செய்ய விடமாட்டார். அவர் மனைவி சுசீலை, மகா புண்ணியவதி. கணவர் இல்லாத நேரம் அண்டை வீட்டாருக்கு உதவி செய்து, பால், தயிர் வாங்கி வந்து குழந்தைகளைப் பேணி வந்தாள். தவறாமல் விரதங்கள் இருந்தாள். ஒருநாள் பிரம்ம சர்மா சாப்பிடும் போது, கருணைக்கிழங்கு மசியல் ரொம்ப நன்றாக இருக்கிறது. ராத்திரி எடுத்து வை. தோசைக்குச் சுவையாயிருக்கும் என்றார். அப்போது யாரோ சிரிக்கும் ஓசை சுசீலைக்குக் கேட்டது. யார் சிரித்ததென்று சுற்றுமுற்றும் பார்த்தாள். தெரியவில்லை. சாளக்கிராமத்துக்கு அபிஷேகம் செய்து, சிரித்தவரை என் கண்முன் காண்பிக்க வேண்டும் என்று பிரார்த்தித்தாள். சித்ரகுப்தன், சுசீலையின் முன் தோன்றினார்.
அவரை நமஸ்கரித்தாள் சுசீலை. தீர்க்க சுமங்கலிபவ என ஆசீர்வதித்தார். எதற்கு நகைத்தீர்கள்? என்று வினவினாள். அம்மணி! இரவு, முதல் வாய் உணவைப் போட்டுக் கொண்டதுமே விக்க லெடுத்து உன் பதியின் ஆயுள் முடிந்துவிடும். அது தெரியாமல் எடுத்துவை என்கிறானே என்று நினைத்ததும் சிரிப்பு வந்துவிட்டது என்றார் தேவலோக கணக்கர். பிரபு! என் ஆயுள் முடியும்வரை நான் சுமங்கலியாக வாழ என்ன செய்ய வேண்டும்? தவிர, புனிதரான தங்கள் வாயால் வாழ்த்திய வாழ்த்து பொய்க்குமா? என்று கேட்டாள் சுசீலை. சுசீலை ! நமஸ்கரித்தவரை வாழ்த்தாவிடில் பவுருஷம் குறையும். யமதர்மரின் கட்டளையை மீற முடியுமா? நீ செய்த துலாக்காவேரி ஸ்நானத்தின் ஒரு மாத புண்ணியப் பலனைத் தந்தால் உன் சுமங்கலித் தன்மை நீளும். அப்படியானாலும், நான் உன் புருஷனை யமலோகம் கூட்டிச்சென்றுதான் திரும்புவேன். அதுவரை (ஒன்றரை மணி நேரம்) அந்த உடலைப் பாதுகாத்திரு எனக் கூறி மறைந்தார். அவர் சொன்னபடியே எல்லாம் நடந்தது. பிரம்ம சர்மாவின் ஜீவனுடன் யமலோகம் போகும் வழியில் இருவர் அந்த உயிரை மறித்தனர்.
செருப்பு தைத்து வாங்கிக் கொண்டு எங்களை ஏமாற்றினார் என்று காரணம் சொன்னார்கள். அப்போது இரு வேதியர்கள் வந்து, அவர்கள் கேட்டபடி தங்கள் தோலை உரித்துக் கொடுத்தனர். பிரம்ம சர்மா, நீங்கள் எதற்கு எனக்கு உதவி செய்கிறீர்கள்? என்று கேட்க, சுவாமி! காவேரிக் கரையில் இரு அரச மரங்களை நட்டு நீருற்றி வளர்த்தீர்களே! அந்தப் புண்ணியப் பலன்தான் இது. நாங்களே அந்த அஸ்வத்த விருட்சங்கள். சந்தேகமிருந்தால் பூலோகம் சென்றபின் போய்ப் பாருங்கள் என்று கூறிச் சென்றனர். பிரம்ம சர்மா பூலோகம் திரும்பி சடலத்துக்குள் புகுந்து எழுந்து நடந்ததைக் கூற, சுசீலையும் உறவினர்களும் வியந்தனர். காவிரிக்கரைக்கு மனைவி யோடு சென்ற பிரம்ம சர்மா, தான் பூஜித்த அச்வத்த விருட்சங்கள் தோலின்றி இருப்பதைக் கண்டு கண்ணீர் விட்டார். ஒருவருக்கு வாழ்க்கைத் துணை மட்டும் சிறப்பாக அமையுமானால், அவரது வாழ்க்கைப் பயணம் பெருமையுடையதாய் மாறிவிடும். |
|
|
|