|
சத்ரபதி சிவாஜி, மகாராஷ்டிரா தேசத்தை ஆண்டுவந்த காலம். அக்காலத்தில் தெய்வ பக்தியைப் பரவச் செய்தவர்களுள் ஒருவர் துக்காராம் சுவாமி. அவரது பெண் வயிற்றுப் பேரனான வாசு தேவ பாவா என்பவர். பண்டரிபுரத்திலே இரவுதோறும் பக்த விஜயத்தைப் படித்து சொற்பொழிவுகள் செய்து வந்தார். அப்பகுதியை ஆட்சிபுரிந்த பாதுஷா, நாள் தோறும் தவறாமல் சொற்பொழிவு கேட்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். ஒருசமயம் வாசுதேவ பாவா, தம் சொந்தப் பாட்டனாரான துக்காராம் சுவாமியின் வரலாற்றைப் பெருமிதத்தோடு மிகவும் அற்புதமாகக் கூறி வந்தார். அவர் பாடிய அபங்கங்களையெல்லாம், இடத்துக்கு ஏற்பப் பாடி மக்களை இன்பக்கடலில் ஆழ்த்தினார். கடைசியாக கதையின் முடிவில், ஒருநாள் நடு வீதியில் பஜனை செய்துகொண்டிருக்கும் பொழுதே பூத உடலுடன் விமானத்தில் ஏறி மறைந்து போனார் துக்காராம் சுவாமி என்று சொல்லி நிறுத்தினார் வாசுதேவபாவா. உடனே பாதுஷா எழுந்து, துக்காராம் பூத உடலோடு மறைந்து போனார் என்பதெல்லாம் சுத்தப்பொய். அப்படி நடந்திருந்தால், அப்பொழுது நேரில் கண்டவர்கள் யாராவது இந்த சபையில் இருக்கிறார்களா? என்று உரக்கக் கேட்டார்.
எல்லோரும் திடுக்கிட்டனர். அப்போது அங்கிருந்த சில முதியவர்கள், தாம் அந்தச் சமயம் சிறுபிள்ளைகளாக இருந்தபோது பார்த்தோம் என்று உறுதியாகச் சொல்லியும், பாதுஷா அவர்கள் பேச்சை நம்பவில்லை. உடனே வாசுதேவ பாவா, இந்த விஷயம் என் தாயாருக்குத் தெரியும். அந்த சமயம், அவர் வீட்டினுள்ளே சமையல் செய்து கொண்டிருந்தாராம். அவரிடம் போய்க் கேட்டு வருகிறேன் என்று கூறி விட்டு எழுந்து சென்றார். தன்பேரன் வாசுதேவ பாவாவின் சொற்பொழிவை, தினந்தோறும் வேறு உருவில் வந்து கேட்டுக் கொண்டிருந்த துக்காராம் சுவாமி, அவரைப் பின் தொடர்ந்தார். வாசுதேவ பாவா வீட்டுக்குள் நுழையும்போது பேரனைக் கூப்பிட்டுக்கொண்டே போய் தம் சுய உருவைக் காட்டி நின்றார். பேரனும் அவர் கையைப் பிடித்து, தன் தாயிடம் அழைத்துச் சென்றார். அவரை அடையாளம் கண்டுகொண்ட மகள், அவர் பாதங்களில் விழுந்து வணங்கினார். பிறகு பேரன் வாசுதேவ பாவாவிடம், இது நான் மீட்டிய தம்புரா. இதைக் காண்பித்து, துக்காராம் சுவாமி பூத உடலோடு விண்ணகம் சென்றது உண்மையானால், அவர் உபயோகித்த இந்தத் தம்புராவும் அந்தரத்தில் மறைந்து போகட்டும் என்று சொல்லி வீசி எறி என்று கூறி மறைந்து போனார் துக்காராம். வாசுதேவ பாவா சந்தோஷத்துடன் சபைக்குச் சென்று பாதுஷாவிடம், அரசே உமது சந்தேகத்தை இந்தத் தம்புராவால் போக்குகிறேன் என்று சொல்லி இறைவனைத் துதித்து, இறைவா, உன் மெய்யடியாராகிய துக்காராம் உடலுடன் வைகுண்டம் சென்றது மெய்யானால், அவர் மீட்டிய இந்தத் தம்புராவும் ஆகாய மார்க்கத்தில் செல்லட்டும் என்று வீசி எறிந்தார். மறு விநாடி தம்புரா மறைந்தது. ஆனால், அந்தத் தம்புராவிலிருந்து எழுந்த சுருதியோடு, ஜய ஜய விட்டல! பாண்டுரங்க விட்டல! என்ற துக்காராம் சுவாமியின் அபங்கப் பாடலும் எல்லோருக்கும் தெளிவாகக் கேட்டது. |
|
|
|