|
கேட்போர் சொல் கேட்டு, எடுப்பார் கைப்பிள்ளையாக இருந்தான் அந்த நாட்டு மன்னன். எல்லோரும் ஒரு மாதிரி யாகவே அவனைப் புரிந்து வைத்திருந்தனர். யார் எதைச் சொன்னாலும் மறுப்பேதும் கூறாமல், ஆமாம்... ஆமாம்... நீங்கள் சொல்வது சரிதான். அப்படியே செய்து விடுவோம் என்ற மன்னனது வெகுளித்தனத்தின் மீது பரிதாபம் கொண்டனர் மக்கள். அரண்மனைத் துணிகளை வெளுத்துக் கொடுக்கும் வண்ணானிடம் அரசனுக்கு அலாதி பிரியம். வேற்றுமை ஏதுமின்றி அரசனும் வண்ணானும் பழகு வதைக் கண்ட குயவன் ஒருவனுக்கு அது பிடிக்க வில்லை. எப்படியும் அவனை அரசனிடமிருந்து பிரித்துவிட்டு, அந்த இடத்தில் தான் அமர வேண்டும் என்று நினைத்தான். அதற்கான தருணமும் வாய்த்தது. இந்திர விழாவுக்காக அரண்மனையில் வகை வகையான மண் பாண்டங்கள் செய்து கொடுக்கும் வாய்ப்பு பெற்றான் குயவன். அரசனுடன் நேரில் பேசும் சந்தர்ப்பமும் வாய்ந்தது. தனக்குத் தெரிந்த எல்லாவித போற்றிகளையும் சொல்லி அரசனைப் புகழ்ந்தான். உச்சி குளிர்ந்துபோன மன்னர் குயவனைப் பார்த்து, வேண்டியதைக் கேள், தருகிறேன் என்றான். அதற்கு குயவன், அரசே ! உங்கள் தயாள குணம் வேறு யாருக்கும் வராது. ஆனால்.. என்று இழுத்தான். ஆனால் என்ன, ஆனால்? அதையும் சொல்! என்றான் மன்னன். அந்த வண்ணானைப் பற்றி கோள்மூட்ட இதை விட்டால் வேறு சந்தர்ப்பம் கிடைக்காது என்று துணிந்த குயவன், அரசே! அது வேறு ஒன்றுமில்லை. தேவலோகத்திலுள்ள தேவேந்திரனிடம் ஒரு வெள்ளை யானை உள்ளதாம்! நமது அரண்மனையில் உள்ளதெல்லாம் கருப்பு யானைகள்தான். வண்ணானிடம் நீங்கள் சொல்லி, ஒரு கருப்பு யானையை வெளுத்துக் கொடுக்கச் சொல்லி விட்டீர்கள் என்றால், நீங்களும் இந்திரனைப் போல் ஆகிவிடலாம் என்று தூபமேற்றிவிட்டான். அதற்கு அரசன். யாரங்கே... உடனே சென்று வண்ணானை வரச் சொல்லுங்கள் என்று ஆணை பிறப்பித்தான். சிறிது நேரத்தில் தன் முன்னால் வந்து நின்ற வண்ணானிடம், இதோ பார்.. நீ துணிகளை வெளுப்பது ஒரு பக்கம் இருக்கட்டும். முதலில் அரண்மனையில் உள்ள ஒரு கருப்பு யானையை வெள்ளையாக்கிக் கொண்டு வா. இல்லையேல், ம்... நீ என் நண்பன் என்றும் பார்க்க மாட்டேன்... ஆமாம் என்று கர்ஜித்தான் மன்னன். தன் மீது பொறாமை கொண்ட குயவனின் வேலைதான் இது என்று புரிந்துகொண்ட வண்ணான், சரி அரசே! அப்படியே யானையை வெள்ளையாக்கி விடுகிறேன். ஆனால்.... என்று இழுத்தான் வெள்ளான்.
என்ன... நீயும் ஆனால்- ஊனால் என்று இழுக்கிறாய் உனக்கு என்ன வேண்டும் சொல்? என்றான் அரசன். அது ஒன்றும் இல்லை மன்னா... நான் துணிகளையெல்லாம் வெள்ளாவியில் (பெரிய பானையில்) வைத்துதான் வெளுப்பது வழக்கம். கருப்பு யானையையும் வெள்ளாவியில் வைத்துதான் வெளுக்க முடியும். எனவே, யானை கொள்ளும் அளவுக்கு ஒரு பெரிய பானை வேண்டும். குயவனால்தான் அதைச் செய்து தர முடியும். நீங்களே அவரிடம் சொன்னால் எனக்கு வேலை சீக்கிரம் முடியும் என்றான் மிகவும் பணிவாக. அதைக் கேட்ட அரசன் மீண்டும் குயவனை அழைத்தான். யானை கொள்ளும் அளவுக்கு ஒரு பானை செய்து கொண்டு வா. இல்லையேல்... ம்... ஆமாம் என்று உறுமினான். தான் செய்த சதி வேலை தனக்கே பாதகமானதை உணர்ந்த குயவன் நேராக வண்ணானிடம் சென்று மன்னிப்புக் கேட்டு, எப்படியாவது என்னைக் காப்பாற்ற வேண்டும். ஏனென்றால், யானை கொள்ளும் அளவுக்கு ஒரு பானை செய்யவே முடியாது என்று கெஞ்சினான். குயவனைக் காப்பாற்றுவதற்காக உறுதி கூறினான் வண்ணான். சில நாட்கள் கழித்து இருவருமாக அரசன் முன் சென்று நின்றனர். என்ன... நான் சொன்ன வேலை ஆயிற்றா? என்றான் அரசன். அதற்கு இருவரும் ஒரே குரலில் பதில் சொன்னார்கள்: அரசே! எங்கள் வேலை நடந்து கொண்டிருந்த போதே திடீரென்று அங்கே இந்திரன் வந்துவிட்டான். எங்களைப் பார்த்து என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்? என்று கேட்டான். நாங்களும் உங்கள் விருப்பத்தைப் பற்றி சொன்னோம். அதற்கு இந்திரன், ஆ... இன்னொரு ஐராவதம் (வெள்ளை யானை) செய்து எனக்குப் போட்டியாக நிற்க நினைக்கிறானா உங்கள் அரசன்? அவனை விட்டேனா பார்! என்று வெகுண்டு பேசிவிட்டுச் சென்றான். என்ன நடக்குமோ, ஏது நடக்குமோ தெரியவில்லை அரசே! அதனால்தான் நாங்கள் வந்துவிட்டோம் என்றனர் இதைக் கேட்ட மன்னன். வேண்டாமய்யா... வேண்டாம். எனக்கு வெள்ளை யானையும் வேண்டாம், தேவேந்திரனுடன் போட்டியும் வேண்டாம். இருக்கும் கருப்பு யாøனையே போதும். நீங்கள் சென்று உங்கள் வழக்கமான வேலைகளைப் பாருங்கள் என்று சொல்லி அனுப்பினான். இருவரும் கை கோத்தபடி பகைமை மறந்து நட்புடன் நடந்து சென்றனர்.
|
|
|
|