|
தீபாவளிக்கு, கருணைக்கடலான காசி விஸ்வநாதரை தரிசிப்பது சிறப்பு. அவர் மட்டுமல்ல! காசியில் வசிக்கும் தாவரங்கள் கூட கருணை மிக்கவையே.காசியை ஆண்ட பிரம்மதத்தன், புதிய அரண்மனை கட்ட முடிவெடுத்தான். ஒரே மரத்தைக் கொண்டு தூண்கள், ஜன்னல், நிலை எல்லாம் அமைக்க முடிவு செய்தான். அந்தளவுக்குரிய பெரிய மரத்தைத் தேடிப்பிடித்தான். அன்றிரவு அரசன் கனவில் தோன்றிய மரம்,மகாராஜா! நான் பல்லாயிரம் ஆண்டுகளாக இங்கே நிற்கிறேன். என் நிழலில் ஆயிரக்கணக்கான மக்கள் இளைப்பாறுகிறார்கள். என் கீழே முளைத்து கிடக்கும் பல செடிகளும் வெப்பத்தில் தவிக்காமல் உள்ளன. எனவே, என்னை வெட்டும் எண்ணத்தை விடுங்கள், என்றது.பிரம்மதத்தன் மறுத்தான்.உடனே அந்த மரம்,பரவாயில்லை! உங்கள் எண்ணம் நிறைவேறட்டும். ஆனால், ஒரு வேண்டுகோள். முதலில் என் இலைகளை உதிர்த்து விடுங்கள். பிறகு கிளைகளை வெட்டுங்கள், அதன் பிறகு அடிமரத்தை சாயுங்கள், என்றது.ஏன் இப்படி கேட்கிறாய்? என்றான் ராஜா.மன்னா! என்னை அடியோடு சாய்த்தால், கனம் தாங்காமல், கீழே நிற்கும் பல குட்டித்தாவரங்கள் ஒரேயடியாக அழிந்து போகும். கொஞ்சம் கொஞ்சமாய் வெட்டினால், சேதம் அந்தளவுக்கு இருக்காது. பிறருக்கு நம்மால் முடிந்தவரை துன்பம் செய்யாமல் இருக்க வேண்டும், என்றது மரம்.காசியில் பிறந்த இந்த மரத்திற்கே இவ்வளவு கருணை இருக்கிறதென்றால், அதை ஆளும் ராஜாவான எனக்கு எவ்வளவு கருணை இருக்க வண்டும்! வேண்டாம், இந்த மரத்தை வெட்ட வேண்டாம்...என்ற முடிவுக்கு வந்தான் மன்னன். |
|
|
|