|
முதல் பக்கம் »
பக்தி கதைகள் » வேத ரக்ஷணம் |
|
பக்தி கதைகள்
|
|
இந்த உலகம் சுபிக்ஷமாக இருக்கவேண்டும் என்று சொன்னால் தர்மானுஷ்டானம் நடக்கவேண்டும். தர்மம் ஒன்றுதான் எல்லோருக்கும் ஸ்ரேயஸ்ஸைக் கொடுக்கக் கூடியது. தர்மானுஷ்டானம்தான் உலகத்திற்கு சுபிக்ஷத்தைக் கொடுக்கக்கூடியது. எங்கே தர்மம் சரியாக நடக்கிறதில்லையோ அங்கே சுபிக்ஷம் இருக்காது. ஜனங்களுக்கு ÷க்ஷமம் இருக்காது. எங்கே தர்மம் சரியாக நடக்குமோ அங்கே ஜனங்களுக்கு ÷க்ஷமம் இருக்கும். அந்த பிரதேசத்திற்கு சுபிக்ஷம். அதனாலே தர்மம்தான் நமக்கு நம்முடைய ஜீவிதத்திலே அத்யந்த அபேøக்ஷ உடையது. இந்த உலகத்தில் மகான் என்று யாரைச் சொல்லலாம் என்று கேட்டால் பணக்காரனையோ, ரொம்ப படித்தவனையோ பெரிய பதவியிலே இருக்கிறவனையோ மகான் என்று சொல்ல முடியாது. எவன் தர்மத்தை ஆசரணம் செய்கிறானோ அவனைத்தான் நாம் மகான் என்று சொல்லலாம். எவன் சாஸ்த்ரோக்தமான தர்மானுஷ்டானம் செய்கிறானோ அவனைத்தான் உலகத்தில் மகான் என்று சொல்லுவார்கள் என்று பகவத் பாதாள் சொல்கிறார். அதனால் நாம் வேறு எதனாலேயும் பெரிய மனிதன் ஆகமுடியாது. தர்மாசரணம் செய்துதான் நாம் நம்முடைய வாழ்க்கையை சார்த்தகமாக்கிக் கொள்ள வேண்டும். தர்மத்தைப் பற்றி நாம் வேதத்தின் மூலம்தான் தெரிந்து கொள்ள முடியும்.
வேதோகிலதர்மமூலம் அகில: வேத: தர்ம மூலம் தர்மத்திற்கு மூலமானது வேதம்.
வேதம் எது செய் என்று சொல்லி இருக்கிறதோ அது தர்மம். வேதம் எது செய்யாதே என்று சொல்லியிருக்கிறதோ அது அதர்மம். இந்த தர்மா தர்மங்களின் விஷயத்தில் வேதத்திற்குத்தான் பிராமாண்யம். அதனால் நமக்கு எல்லோருக்கும் ÷க்ஷமம் வேண்டும். நம் நாடு சுபிக்ஷமாக இருக்க வேண்டும். நமக்கு எல்லோருக்கும் இகத்திலேயும், பரத்திலேயும் சவுகர்யம் வேண்டும் என்கிற ஆசை இருந்தால் நாம் கட்டாயம் தர்மத்தை ஆசரிக்கவேண்டும். அந்த தர்மத்தை போதிக்கக்கூடிய வேதத்தைக் காப்பாற்ற வேண்டும். வேதத்தினுடைய பிராமாண்யத்தைக் காப்பாற்றுவதற்குத்தான் பகவான் பட்டபாதர் ரூபத்தில் அவதாரம் பண்ணினார். அன்றைக்கு பவுத்தர்கள் எல்லோரும் இந்த வேதத்தைப் பற்றி ஜனங்களுக்கு பிராமாண்ய புத்தி இல்லாமல் பண்ணிவிட்டார்கள். வேதம் என்று சொன்னால் எல்லோருக்கும் ஒரு திரஸ்கார (வெறுப்பு) பாவனை வந்துவிட்டது அந்தக் காலத்தில். வேதம் என்று சொன்னால் போடா வேறு வேலையில்லை என்று சொல்லக்கூடிய நிலைமை வந்து விட்டது. அந்தச் சமயத்தில் பகவத்பாதாள் அவதரித்து அந்த பவுத்தர்கள் எல்லோரையும் வாதத்தில் தோற்கடித்து துரத்தி வேதத்தினுடைய பிராமாண்யத்தைக் காப்பாற்றினார். ராஜாவுடைய ஆஸ்தானத்தில் பவுத்தர்களோடு வாதம் செய்தார் பட்டபாதர். கடைசியிலே ஒரு பந்தயம் ராஜா வைத்தார். இந்த மலைமேலே ஏறி எவன் குதிப்பானோ அப்படி குதித்தாலும் அவனுக்கு ஒரு காயமும் ஆகாதோ அவன் சொல்லுவதுதான் பிரமாணம் என்று நான் ஏற்றுக் கொள்வேன் என்று பவுத்தர்களுக்கும் சொன்னார். பட்டபாதருக்கும் சொன்னார். பவுத்தர்கள் ஒருவனோடு ஒருவன் பார்த்துக் கொண்டு அது எப்படியடா? மலைமேல் ஏறிக் குதித்தால் பிராணன் போய்விடுமே. அது எப்படி முடியும் என்றனர். பட்டபாதர் உடனே வேஷ்டியை இழுத்துக் கட்டிக்கொண்டு மலை ஏறிவிட்டார். மலை ஏறிவிட்டு ஒரேயடியாகக் குதித்துவிட்டார்.
யதி வேதா: பிரமாணம் ஸ்யுர்பூயாத்காசிந்தமே க்ஷதி:
வேதம் பிரமாணம் ஆனால் எனக்கு ஒரு காயம்கூட ஆகாது. என்று மனதில் நினைத்துக் கொண்டு மலைமேலிருந்து குதித்தார். ஈஸ்வரனின் கிருபையால் ஒரு காயமும் ஆகாவில்லை. அங்கேதான் வித்யாரண்யர் சொல்லியிருக்கிறார். ஏன் அவருக்கு அப்படி ஆகிவிட்டது. அப்படி மலை மேலிருந்து குதித்து ஒரு காயமும் ஏற்படவில்லை. அவரை யார் அந்தச் சமயத்தில் காப்பாற்றினார்.
யார் அந்த வேத மாதாவையே ஸர்வார்த்தமாக நம்பி இருந்தார்களோ அவர்களை அந்த வேத மாதாவே காப்பாற்றுவாள். அந்த வேத மாதாதான் தன் குழந்தையை கையில் தூக்கிக் கொண்ட மாதிரி பட்டபாதரை தூக்கிக் கொண்டாள். அப்படி வேதத்தை வேதபிராமாண்யத்தை பட்டபாதர் காப்பாற்றியதினால் இன்றைக்கு நாம் வேதம் படிக்கிறோம். இல்லாவிடில் அந்த மாதிரி மகான்களெல்லாம் அந்த கார்யத்தை பண்ணாவிட்டால் இன்றைக்கு வேதம் எங்கே? வேதம் படிக்கிறவன் எங்கே? வைதீகம் தர்மம் எங்கே? அப்பேர்ப்பட்ட மகான்களெல்லாம் இந்த வேதத்தை, தர்மத்தை தன்னுடைய பிராணனைக் கூடப் பணயமாக வைத்துக் காப்பாற்றியதால் அந்த வேதத்திற்கு இருக்கிற மதிப்பை நாம் தெரிந்து கொண்டு அந்த வேதரக்ஷணம் நம்முடைய கர்தவ்யம் (கடமை) என்கிற பாவத்தில் இருக்க வேண்டும். 50,60 வருஷங்களுக்கு முன்னால் 120 வேத பண்டிதர்கள் இருந்த இந்த இடத்தில் இந்தக் கிராமத்தில் மூன்று பேர் இருக்கிறார்கள் என்று சொன்னால் எவ்வளவு வருத்தம் ஆகிறது. எப்பேர்ப்பட்ட கிராமத்தில் இப்பேர்ப்பட்ட நிலைமை இன்று வந்திருக்கிறது. கேவலம் 60 வருஷத்திற்குள் எவ்வளவு மாற்றம்? எவ்வளவு வருத்தம்? இப்பேர்ப்பட்ட பரிஸ்திதியை நாம் இதே மாதிரி போவதற்கு விடக்கூடாது. திரும்பி இந்த ஊருக்கு அந்த பழைய ஸ்திதி வரவேண்டும். அந்த வேதபண்டிதர்கள் வெளியூருக்கு போகக்கூடிய சந்தர்ப்பம் வரக்கூடாது. இந்த ஊரிலேயே ஆட்கள் இருக்கிறார்கள். இந்த ஊரிலேயே அவர்கள் 120பேரை வைத்து நாம் அதிருத்ரம் பண்ண வேண்டும் என்கிற நிலைமை இங்கு வர வேண்டும். அப்பேர்ப்பட்ட ஓர் ஆசையோடு ஒரு சைஜன்யத்தோடு இந்த ஊரில் இருக்கிற மகாஜனங்கள் இந்த ஒரு பெரிய கார்யத்தை தொடங்கியிருக்கிறார்கள் என்பது எனக்கு ரொம்ப சந்தோஷமான விஷயம். மீதி எதற்கெல்லாமோ செலவு பண்ணிக்கொண்டு இருப்பார்கள். இந்தப் பணக்காரர்களுடைய ஐஸ்வர்யம் எங்கெல்லாம் போகிறது? பெரிய பெரிய வீடு கட்டுவது அந்த வீட்டில் நிறைய அலங்காரம் பண்ணுவது பெரிய பெரிய சொகுசான சாதனங்களை கொண்டு வந்து வைத்துக் கொள்வது இவற்றில்தாம் பணக்கார்களுடைய பணம் போய்க் கொண்டிருக்கிறது. ஆனால் இந்தமாதிரி வேதரக்ஷணம் போன்றவற்றிற்குப் பணத்தைச் செலவழிக்க மனம் வருவதில்லை.
அந்தக் காலத்தில் வீடுகளுக்கு ஜன்னல், கதவு போன்றவற்றை மரவேலை செய்பவன் பெரிய பெரிய மரங்களை அறுத்துத் தயாரிப்பான். வீடு பார்ப்பதற்கு லட்சணமாக இருக்கும்படி பணக்காரர்கள் செய்து கொள்வார்களே தவிர டாம்பீகமாக அநாவசியமாகச் செலவழிக்க மாட்டார்கள். இக் காலத்திலோ மார்பிள், டைல்ஸ் இப்படி என்னென்னமோ புதிது புதிதாகக் கண்டுபிடித்து வீட்டிற்கு தேவைக்கு மேல் அலங்காரப்படுத்தி செலவழிக்கிறார்கள். இந்த காலத்தில் இந்த மாதிரி வேதரக்ஷணம் என்பதற்கு செலவு பண்ண வேண்டும் என்கிற பாவம் ஆயிரத்தில், பத்தாயிரத்தில் லட்சத்தில் ஒருவனுக்குத்தான் வரும். அப்பேர்ப்பட்ட ஒரு பாவம் இந்த ஊரில் இருக்கக்கூடிய மகாஜனங்களுக்கு வந்திருக்கிறது என்பது ரொம்ப ஸ்லாக்கியமான விஷயம். உங்களுக்கு இருக்கக்கூடிய இந்த ஸம்ஸ்காரம் ரொம்ப விசேஷமானது. நாம் ஒரு ஸத்ஸங்கல்பம் பண்ணினோமானால் அதற்கு சஹாயம் எங்கேயிருந்தெல்லாமோ வரும் நாம் நினைக்கவே மாட்டோம். ஆனால் இந்த வேதத்தை ரக்ஷணம் பண்ண வேண்டும் என்ற பவித்ரமான சங்கல்பம் யார் மூலமாகவோ சஹாயத்துக்கு வந்து அது நிறைவேற்றப்படுகிறது.
பகவான் நமக்கு அனுக்ரஹம் பண்ணவேண்டும் என்று சொன்னால் பகவான் நம்மைக் காப்பாற்றுவான், அனுக்ரஹம் பண்ணுவான் என்றால் என்ன அர்த்தம்? நம் எதிரில் வரமாட்டான் அவன். எப்படி பசுக்களை மேய்க்கிறவன் அவற்றின் பின்னாலேயே போய் காப்பாற்றிக் கொண்டிருக்கிறானோ அப்படி நம்மைப் பகவான் காப்பாற்றுவானா? பகவான் நம்மைக் காப்பாற்றுவான் என்றால் என்ன அர்த்தம்? அதற்கு முன்னோர் சொல்லியிருக்கிறார்கள். பசுக்களை மேய்க்கிற மாதிரி பகவான் நம்மை மேய்ப்பதில்லை. என்ன பண்ணுவான் என்று கேட்டால் யார் நம்மை காப்பாற்றுவான் என்று நினைக்கிறானோ அவன் உள்ளத்திற்குள் புகுந்து அவனுக்கு ஒரு சரியான ப்ரேரணையைக் கொடுப்பான். ஒரு சரியான ப்ரேரணை, ஒரு தோற்றம், நமக்கு ஒரு நல்ல கார்யத்தை நடத்த ஒரு தோற்றம் மனதிலே அந்த அபிப்ராயம் வந்தால் பிறகு அது கார்யத்துக்கு வரும். ஏனெனில் மனிதனுடைய ஸ்வபாவம் முதலில் மனதில் அந்த பாவம் வரவேண்டும். அந்த பாவம் வந்தால் அது பின்பு வாக்கில் வரும். பிற்பாடு காரியத்திற்கு வரும். மனதிலே அந்த பாவம் வரவேண்டும். அப்பேர்ப்பட்ட மஹா கார்யத்தை செய்ய வேண்டும் அதில் தான் பங்கு எடுத்துக் கொள்ளவேண்டும் என்கிற பாவத்தை மனதிலே தோன்றி அதை பகவான் உண்டாக்கினான். அந்த ப்ரேரணையினாலே இந்த ஸத்கார்யத்திலே அவர் ஈடுபட்டு இருக்கிறார். இது ரொம்ப ஸ்லாக்கியமான கார்யம். இந்த மஹத் கார்யமான இந்த வேத பாடசாலை மூலமாக வேத சாஸ்த்ர வித்வான்கள் தயாராகட்டும். அதனால் நம் வேத சாஸ்த்ர பரம்பரை நன்றாக பிரகாசிக்கட்டும் என்று நான் ஆசீர்வாதம் செய்கிறேன். மேல்மங்கலத்தில் இருக்கக்கூடிய சிருங்கேரியில் பக்தியானது நேற்று, இன்றைக்கு வந்ததன்று. எத்தனையோ பரம்பரையாக வந்து இருக்கிறது. அப்பேர்ப்பட்ட உங்களுக்கு மீண்டும் ஒருமுறை பரிபூர்ணமாக ஆசீர்வாதம் செய்கிறேன். |
|
|
|
|