|
ஒரு ஓநாய், இறந்து கிடந்த மான் ஒன்றைப் பார்த்தது. ஆகா...இதன் இறைச்சியை சாப்பிட்டால் எவ்வளவு ருசியாக இருக்கும்... வயிறு முட்ட சாப்பிட வேண்டியது தான், என்று சாப்பிட்டது. இறைச்சிக்குள் மறைந்திருந்த முள், ஓநாயின் தொண்டையில் குத்த, ரத்தம் வழிந்தது. வலி அதிகமானது. அதை வெளியே எடுத்தால் தான் மேற்கொண்டு எதுவும் செய்ய முடியும் என்ற நிலையில், வழியில் செல்லும் மிருகங்கள் சிலவற்றை எல்லாம் அழைத்து, இந்த முள்ளை வெளியே எடுங்கள். நான் உங்களுக்கு என்னிடமுள்ள விலை மதிப்பில்லாத பொருளைத் தருகிறேன், என்று ஆசை காட்டியது. கள்ள ஓநாயே! உன் புத்தி எங்களுக்கு தெரியாதா! நன்றாக அவஸ்தைப்படு, அப்படியானால் தான் புத்தி வரும், என்று சொல்லிவிட்டு அவை போய்விட்டன. கடைசியாக ஒரு நாரை வந்தது. அதற்கு நீண்ட அலகு இருந்ததால், தன் வாய்க்குள் இலகுவாக நுழைத்து எலும்பை வெளியே எடுத்து விடும் என்று கணக்குப் போட்டது. நாரையின் காலில் விழுந்து, ஐயோ! இதை தயவுசெய்து எடுத்து விடு. விலை மதிப்பற்ற பரிசு தருகிறேன், என்றது. நாரையும் இரக்கப்பட்டு ஓநாயின் வாய்க்குள் கழுத்தை நுழைத்தது. முள்ளை வெளியே எடுத்தது. விலை உயர்ந்த பரிசு தருவதாக சொன்னாயே! கொடு, கிளம்புகிறேன், என்றது. உன் உயிர் உனக்கு விலை உயர்ந்தது தானே! என்றது ஓநாய். ஆம்... என்ற நாரையிடம், நீ என் வாய்க்குள் தலையை நுழைத்த போது, உன்னைக் கடிக்காமல் விட்டேனே! அதே பெரிய பரிசு தான்! ஓடு! என விரட்டி விட்டது. தகுதியானவர்களுக்கு மட்டுமே உதவி செய்ய வேண்டும் என்பது புரிகிறதா! |
|
|
|