|
துறவி ஒருவர் ஒரு கிராமத்தில் இருந்தார், அவர் எப்பொழுதும் மகிழ்ச்சியாகவே இருந்தார், தன்னைக் காண வருபவர்களிடம் கலகலப்பாகப் பேசினார். சிரித்த முகத்துடன் காட்சியளித்தார். அவரின் தொண்ணூறாவது பிறந்த நாள் விழா சீரும் சிறப்புமாக கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டது. பல ஊர்களில் இருந்தும் அவருடைய சீடர்கள் விழாவிற்கு வந்தனர்.
சீடன் ஒருவன் துறவியாரே! உங்களுடன் பல ஆண்டுகள் பழகும் பேறு பெற்றுள்ளேன். நீங்கள் சோகத்தில் இருந்து நான் பார்த்ததே இல்லை. எப்பொழுதும் மகிழ்வாகவே உள்ளீர்கள். எப்படி உங்களால் மகிழ்வாக இருக்க முடிகிறது. என்று கேட்டான். அதற்கு அவர் சிரித்துக்கொண்டே, அதில் ஒன்றும் பெரிய ரகசியம் இல்லை. நான் இளைஞனாக இருந்தபோதே சொர்க்கத்திற்குப் போவதும், நரகத்திற்குப் போவதும் என் கையில்தான் உள்ளது எனக் கண்டு கொண்டேன். அதனால் ஒவ்வொரு நாள் காலையில் எழும்போதும் சொர்க்கம் செல்ல விரும்புகிறாயா? நரகம் செல்ல விரும்புகிறாயா? என்று என்னையே நான் கேள்வி கேட்டுக்கொள்வேன். சொர்க்கம் செல்லவே விரும்புகிறேன் என்று முடிவு செய்தேன். அதற்கு ஏற்ப நடந்து கொண்டேன். நான் எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருப்பதற்கு இதுதான் காரணம் என்று விளக்கினார்.
|
|
|
|