|
தீபாவளிக்குத் தேவையான துணிமணிகளை வாங்கிக் கொண்டு திரும்பும்போது, அந்த வங்கியின் பெயர்ப் பலகை கண்ணில் பட்டது. அட, நம்ம நண்பன் வேலை செய்யும் வங்கியின் கிளையாச்சேன்னு மனசுக்குள் சின்னதா ஒரு குதூகலம். அதே நேரம், இப்போ போனால் அவனைச் சந்திக்க முடியுமா? அவனுக்கு இடைஞ்சலா இருக்குமா? என்று தயக்கம்.
அவனுக்கே போன் செய்து கேட்கலாம் என்று முடிவெடுத்தேன். என் குரலைக் கேட்டதுமே உற்சாகமாயிட்டான் நண்பன். உள்ளே வரச் சொன்னான். படிக்கட்டுகளில் ஏறிக்கொண்டிருக்கும்போதே, எதிரில் வந்து அழைத்துச் சென்றான்.
ரிசப்ஷனில் இருந்த சோபாவில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தோம். அப்போது, பரிதாபமான முகத்துடன் ஒருவர் என் நண்பனை நோக்கி வந்தார்.
நான் லோனுக்கு அப்ளை பண்ணி ரெண்டு வாரம் ஆயிடுச்சு, சார்! நாளைக்கு வாங்க.. நாளைக்கு வாங்கன்னு தினமும் இழுத்தடிக்கிறீங்க. இத்தனைக்கும் இந்த வங்கியில் நான் பதினஞ்சு வருஷமா கணக்கு வெச்சிருக்கேன். நிறைய டெபாசிட்கூட போட்டு வெச்சிருந்தேன். இப்ப, ஒரு அவசரத்துக்கு நீங்க உதவலேன்னா எப்படி? நீங்க கேட்ட எல்லா பேப்பர்ஸையும் கொடுத்துட்டேனே.. என்றார் அழாக்குறையாக!
மிஸ்டர் மகேந்திரன்! ஆனது ஆச்சு.. இன்னும் ரெண்டே நாள் பொறுத்துக்குங்க. நாங்களும் ரொம்ப பிஸியாத்தான் இருக்கோம். பாக்கறீங்க இல்ல? என்றான் நண்பன்.
அந்த பாவப்பட்ட மகேந்திரன், தளர்வுடன் வாசலை நோக்கி நகர்ந்தார். நண்பனின் வார்த்தைகளைவிட, அதை அவன் அலட்சியமாகவும் ஏளனமாகவும் கூறிய விதம் எனக்குப் பிடிக்கவில்லை.
என்னடா இது.. அவர் ஏதாவது புகார் கொடுத்துடப் போறார் என்றேன்.
யார்கிட்டே கொடுப்பார்? மேனேஜர் கிட்டயா அல்லது ரீஜனல் மேனேஜர் கிட்டயா? கொடுக்கட்டும். நோ பிராப்ளம்! ஆனா, இந்த ஆள் ரொம்ப சாது; அந்த அளவுக்கெல்லாம் போகமாட்டார்! என்றான் நண்பன்.
எனக்கோ, நிச்சயம் பிராப்ளம் வரக்கூடும் என்றுதான் பட்டது. சிசுபாலனின் கதையும் நினைவுக்கு வந்தது. சுருக்கமாக அதை நண்பனுக்குக் கூறத் தொடங்கினேன்.
சிசுபாலன் என்பவன் சேதி நாட்டு இளவரசன். அவன் தாய் ஸ்ருததேவா. இவள், ஒருவகையில் கண்ணனுக்குச் சகோதரி முறை.
சிசுபாலன் பிறந்தபோது, அவனுடைய பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். காரணம், மூன்று கண்களுடனும் நான்கு கைகளுடனும் பிறந்திருந்தான். அவன் பிறந்த வேளையில் தீய சகுனங்களும் உண்டாயின. அவனை ஆற்றில் போட்டுவிடலாம் என்றுகூட முடிவெடுக்கப்பட்டது. ஆனால், அப்போது ஓர் அசரீரி, கவலை வேண்டாம்! குறிப்பிட்ட ஒருவர் இந்தக் குழந்தையைத் தூக்கும்போது, இவனது அதிகப்படியான அவயவங்கள் மறைந்துவிடும். அந்த ஒருவரால்தான் இவனுக்கு மரணம் நிகழும் என்று ஒலித்தது.
நாட்கள் நகர்ந்தன. ஒரு முறை, கிருஷ்ண பரமாத்மா சேதி நாட்டுக்கு விஜயம் செய்தார். அவர் குழந்தை சிசுபாலனைத் தூக்கித் தன் மடியில் வைத்துக்கொண்டதுமே, அவனது அதிகப்படியான அவயவங்கள் மறைந்தன. அதைக் கண்டு பெற்றோர் மகிழ்ந்தனர். அதேநேரம், அசரீரி வாக்கு நினைவுக்கு வர.. கிருஷ்ணனைக் கைதொழுது வேண்டினாள் சிசுபாலனின் தாய். அசரீரி குறித்து அவரிடம் விவரித்தவள், நீ இவனைக் கொல்லக் கூடாது என்று கேட்டுக்கொண்டாள்.
உடனே கிருஷ்ணர், அப்படி எதையும் என்னால் உறுதியாகக் கூற முடியாது. ஆனால், உனக்காக ஒரு வரம் அளிக்கிறேன். இவன் எனக்கு எதிராகச் செய்யும் நூறு குற்றங்கள் வரை பொறுத்துக் கொள்கிறேன் என்றார்.
காலம் கடந்தது. யுதிஷ்டிரர் ராஜசூய யாகம் செய்தார்.
அப்போது கிருஷ்ணருக்கு முக்கிய மரியாதைகள் செய்யப்பட்டன. தான் விரும்பிய ருக்மிணியை கிருஷ்ணர் கடத்திச் சென்று திருமணம் செய்துகொண்டதில், ஏற்கனவே அவர் மீது கோபம் கொண்டிருந்தான் சிசுபாலன். தருணம் வாய்க்கும்போதெல்லாம் கிருஷ்ணரை அவமதித்து வந்தான். இப்போது அவருக்கு அளிக்கப்பட்ட மரியாதைகள், அவனது கோபத்தை மேலும் கிளறின.
ஆடு-மாடு மேய்க்கும் இவனுக்கா இப்படி கவுரவம் அளிப்பது? என்று துவங்கி, அடுத்தடுத்துக் கடும் சொற்களால் கண்ணனைச் சாடினான்.
கிருஷ்ணரோ பொறுமையாக இருந்தார். சிசுபாலன் அத்தனை பேசியும் கிருஷ்ணர் மவுனம் காப்பது ஏன் என்று அங்கிருந்த எவருக்கும் புரியவில்லை. நூறாவது முறையாக சிசுபாலன் வசைபாடி முடித்த மறுகணம், கிருஷ்ணரின் சக்ராயுதம் சுழன்று சென்று சிசுபாலனின் தலையைக் கொய்தது.
நான் கதையைச் சொல்லி முடித்ததும், நண்பன் சிரித்தான். அந்த வாடிக்கையாளர் என்ன கண்ணபிரானா? அவரொரு மண்புழு. புலம்புவாரே தவிர, எவரிடமும் புகார் சொல்லமாட்டார். அவர்பாட்டுக்குப் புலம்பிவிட்டு நகர்ந்துவிடுவார். இதுதான் ஒவ்வொரு முறையும் நடக்கும் என்றான்.
உனது நடவடிக்கை மிகத் தவறு. அவர் உன் மேலதிகாரியிடம் புகார் சொல்லாமல் போகலாம்; அப்படியே சொன்னாலும், அந்த மேலதிகாரி நடவடிக்கை எடுக்காமல் இருக்கலாம். அதற்காக, அந்த வாடிக்கையாளரைக் குறைத்து மதிப்பிடவேண்டாம். அவரிடமும் சக்ராயுதங்கள் உண்டு. அவர் பொறுமை மீறினால், உங்கள் வங்கியில் உள்ள தனது கணக்கை முடித்துக்கொள்ளலாம். வேறு வங்கியின் வாடிக்கையாளராக அவர் மாறலாம். அதுமட்டுமல்ல, பலரிடமும் உங்கள் வங்கியில் தனக்கு ஏற்பட்ட அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ளலாம். அதன் விளைவுகளை யோசித்தாயா? வியாபாரம், வங்கிச் சேவை எதுவானாலும் வாடிக்கையாளரின் தேவையை உரிய காலத்துக்குள் முடித்துக்கொடுப்பதே உத்தமம் என்றேன்.
நண்பன் அவசர அவசரமாக தனது செல்போனை எடுத்தான். நிச்சயம் அது, அந்த வாடிக்கையாளரை அழைப்பதற்காகத்தான் இருக்கும் என நம்புகிறேன். |
|
|
|