|
பிருங்கி என்றொரு முனிவர், சிறந்த சிவபக்தர். சிவபெருமானை மட்டுமே பரம்பொருளாகக் கருதி வழிபடுவர். ஒருநாள் கயிலைக்குச் சென்றார். அங்கே, சுவாமியுடன் பார்வதியம்மையும் இருந்தாள். சுவாமியை மட்டுமே வணங்கிச் செல்லும் பிருங்கி இன்று நம்மையும் வணங்கட்டுமே என்று சுவாமிக்கு நெருக்கமாக அமர்ந்துகொண்டாள் அம்மை. ஆனால், பிருங்கி முனிவர் வண்டின் உருவெடுத்து, பரமேஸ்வரனை மட்டும் வலம் வந்து வணங்கி வழிபட்டார் (இதனால் கோபம் கொண்ட அம்பிகை, பிருங்கி முனிவரின் சக்தியைப் பறித்ததும், அவருக்கு சிவனார் ஊன்றுகோல் கொடுத்து அருளிய கதையும் நாமறிந்ததே).
அம்பிகை மனம் வருந்தினாள். தான் வேறு, சிவம் வேறு இல்லை என்பதை உலக மக்களுக்கு உணர்த்த எண்ணினாள். அதற்காக தவம் செய்ய பூலோகம் வந்தாள். பூமியில் கவுதம முனிவரின் ஆசிரமத்தை அடைந்தவள், முனிவரின் ஆலோசனைப்படி கடும் விரதமும் தவமும் இருந்து சிவனாரை வழிபட்டாள். அதன்பலனாக உமையவளுக்கு பரமேஸ்வரரின் திருமேனியில் ஒருபாதி இடம் கிடைத்தது. இந்த அருட்சம்பவம் நிகழ்ந்ததும் ஒரு தீபாவளித் திருநாளில்தான்.
அம்பிகை கடைப்பிடித்தது கேதாரீஸ்வர விரதம். இப்போது அம்பிகைக்கும் சேர்த்து கேதாரகவுரி விரதமாகக் கடைப்பிடிக்கிறார்கள். புரட்டாசி மாதம் வளர்பிறை தசமி திதி நாளில் இருந்து துவங்கி ஐப்பசி அமாவாசை வரையிலும் 21 நாட்கள் கடைப்பிடிக்க வேண்டிய விரதம் இது. இயலாதவர்கள் கடைசிநாளில் மட்டுமாவது விரதம் இருந்து, அம்மையப்பனை அர்த்தநாரீஸ்வர திருவடிவில் தியானித்து வழிபடுவது, சகல நன்மைகளையும் கொண்டு வந்து சேர்க்கும். |
|
|
|