|
அவர் ஒரு தொழிலதிபர். தப்பு. தொழில்களதிபர். பல்வேறு துறைகளில் கால் பதித்து, ஓரளவுக்கு தன்னை நிலை நிறுத்திக் கொண்டிருப்பவர். ரெட்ஹில்ஸ் அருகே மனைகள் வாங்கி, லே-அவுட் போட்டு விற்று வருகிறார். வீட்டுக்குப் பக்கத்தில் காரேஜ் அமைத்து பழைய கார்களை வாங்கி விற்று, லாபம் பார்க்கிறார். சினிமாக்களுக்கு உரிமை வாங்கி ரிலீஸ் செய்கிறார். மொத்தத்தில், நாலா பக்கத்திலிருந்தும் வரவு. ஜோசியர் ஒருவரை, தனது ஆஸ்தான ஆலோசகராக வைத்துக் கொண்டிருக்கிறார். இன்னோவா கார், லேப்டாப்பெல்லாம் வைத்திருக்கும் அந்த ஜோசியருக்குப் பரிகார ஜோசியர் என்ற பட்டப் பெயர் உண்டு. எந்தப் பிரச்னைக்கும் பரிகாரம் சொல்லிவிடுவார்.
நண்பருக்கு ஒரு தடவை மனை விஷயத்தில் பெரிய பிரச்னை. பெரும் பண நஷ்டம். ஜோசியரிடம் போனார். உளுந்தூர்ப்பேட்டைக்கு அருகே ஒரு அம்மன் கோயில் இருக்கு. நான்கு வெள்ளிக்கிழமைகள் மனையாளுடன் சென்று புடவை சாத்தினால், உங்கள் பிரச்னை பணால்! என்று சொல்லி, நண்பரிடம் பெரிய தொகையை ஃபீஸாக வாங்கிக் கொண்டார் ஜோசியர். இன்னொரு சமயம், கார் வாங்கும் விஷயத்தில் ஏமாற்றப்பட்டுவிட்டார் நண்பர். கவலையே வேண்டாம்! திருச்சிக்குப் பக்கத்தில் ஒரு சின்ன கிராமம். அங்கே ஒரு பிள்ளையார் கோயில். வாகன கணபதி என்று பெயர். சங்கடஹர சதுர்த்தி அன்னிக்கு அங்கே போய் கொழுக்கட்டை நைவேத்தியம் பண்ணுங்க. எல்லாம் சரியாயிடும்! என்றார் ஜோசியர். அண்மையில், நண்பரின் குடும்பத்தில் எல்லோரும் ஏதோ ஒரு உடல் உபாதையால் பாதிக்கப்பட்டார்கள். டாக்டருக்குப் பதிலாக ஜோசியரிடமே முதலில் சென்றார் நண்பர். வைத்தீஸ்வரனுக்கு மேல ஒரு வைத்தியர் உண்டா? என்று கேட்டு, நண்பருக்குப் பரிகாரம் சொல்லி அனுப்பி வைத்தார் ஜோசியர்.
நான் யோசித்துப் பார்க்கிறேன். உடலில் ஒவ்வொரு உறுப்புக்கும் ஒரு ஸ்பெஷலிஸ்ட் டாக்டர் இருப்பதுபோல, நமது ஒவ்வொரு பிரச்னைக்கும் ஒரு தெய்வம் இருப்பதாக நினைத்துக் கொள்கிறோம். பல்வேறு வடிவங்களில் வணங்கப்பட்டாலும், தெய்வம் ஒன்றுதானே! நமது வசதிக்காக, ஒன்றையே பல வடிவங்களாக நாம் பகுத்துக் கொள்கிறோம். எவ்வாறு பெருமானுக்கு அண்டமாகிய பிரபஞ்சம் திருமேனியோ அவ்வாறு பிண்டமாகிய உடம்பும் அவனுக்குத் திருமேனியாகும் என்கிறார் திருமூலர். தூணிலும் துரும்பிலும் இருக்கும் அந்த இறைவன் நமது உடம்பிலும் இருக்கமாட்டானா என்ன? நாம் செய்யும் தொழிலும் தெய்வம்தான். அர்ப்பணிப்பு உணர்வுடன் எந்தத் தொழிலையும் செய்வோம். பிரச்னைகள் என்பது மேகக் கூட்டம் மாதிரி.. தானாகவே வந்து தானாகவே விலகிவிடும். |
|
|
|