|
அமிர்தம் வேண்டி தேவர்களும் அசுரர்களும், மந்தர மலையை மத்தாகவும் வாசுகிப் பாம்பை கயிறாகவும் கொண்டு பாற்கடலைக் கடைந்த திருக்கதை நமக்குத் தெரியும். அப்போது, முதலில் ஆலகால விஷம் வந்தது. உலகையும் உயிர்களையும் காக்கும் பொருட்டு, அந்த விஷத்தை சிவபெருமான் ஏற்று திருநீலகண்டன் ஆனார். தொடர்ந்து பாற்கடல் கடையப்பட்டது. அதன் பலனாக அடுத்தடுத்து ஐராவதம், உச்சைச்ரவஸ் எனும் குதிரை, காமதேனு, கற்பக விருட்சம், சந்திரன், மூதேவி ஆகியோர் தோன்றினர். பின்னர் பேரெழில் பெட்டகமாக, கோடி சூரிய பிரகாசத்துடன் திருமகள் தோன்றினாள். அவளை மணந்துகொள்ள அனைவரும் போட்டி போட்டனர்.
ஆனால் திருமகள் சலனமோ, ஆசைகளோ இல்லாமல் இருந்த திருமாலே தனக்குக் கணவனாக வர வேண்டும் என்று விரும்பி, தன் விருப்பத்தை அவரிடம் தெரிவித்தாள். அப்போது மூத்தாள், நானே முதலில் தோன்றியவள் என்பதால், எனக்கே முதலில் திருமணம் நடைபெற வேண்டும் என்று வாதிட்டாள். ஆனால், அவளை மனைவியாக ஏற்க ஒருவரும் முன்வரவில்லை. அப்போது அங்கு வந்த உத்தாலகர் என்ற முனிவர், மூத்தாளை தான் ஏற்றுக்கொள்வதாகவும், தமது தவ வலிமையால் அவளைப் பரிசுத்தப்படுத்துவதாகவும் கூறி மூத்தாளை மணந்துகொண்டார்; திருமகளை திருமால் மணந்தார். இருள் போன்ற மூதேவியை ஏற்றுக்கொண்ட உத்தாலகரின் தியாகத்தைப் போற்றும் வகையிலும், திருமகளின் திருமண நாளைக் கொண்டாடும் வகையிலும் வரிசையாக தீபங்கள் ஏற்றி தீபாவளி கொண்டாடப்படுகிறது என்பார்கள். |
|
|
|